Uncategorized

சுயமரியாதை இயக்க வீராங்கனைகளும் முதல் இந்தி எதிர்ப்புப் போரும்.

சுயமரியாதை இயக்க வீராங்கனைகளும் முதல் இந்தி எதிர்ப்புப் போரும். – மகளிர் தினச் சிறப்புப் பதிவு !

1938-ஆம் ஆண்டு இராஜகோபாலாச்சாரியாரால் பள்ளிகளில் இந்தி கட்டாயம் என்ற உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. “ஹிந்தி வந்துவிட்டது இனி என்ன? ஒருகை பார்க்க வேண்டியதுதான்” எனச் சூளுரைத்தார் தந்தை பெரியார். இளைஞர்களும், பெரியவர்களும் இந்தியை எதிர்த்து நடந்த போராட்டத்தில் கலந்து கொண்டனர், சிறை சென்றனர். இதில் தந்தை பெரியார் கைது செய்யப்பட்டு நீதி மனறத்தில் நிறுத்தப்பட்ட போது அவர் எதிர் வழக்காட மறுத்து தன்னுடைய நிலைப்பாட்டைக் கூறி தண்டனையை ஏற்றுக் கொண்டதை அனைவரும் அறிவோம் ( பெரியார் ஈ.வெ.ரா. வழக்கு ) . இந்தப் போராட்டத்தில் பெண்களும் பெரும் பங்கு வகித்தினர் என்பதும் தந்தை பெரியாரை போலவே இவர்களும் எதிர் வழக்காட மறுத்து, அபராதம் கட்ட மறுத்து சிறை சென்றனர் என்பது சிறப்புச் செய்தி.

பெரியார் இந்தி எதிர்ப்புப் போர்க்கு அழைப்பு விடுத்ததும் நடந்த முதல் கூட்டம் சென்னை தி.நகரில். அதில் வீர உரையாற்றி இந்தி எதிர்ப்புப் போரின் ஒரு படைத் தளபதியாக விளங்கியர் அன்னை மீனாம்பாள் அவர்கள். சுதேச மித்திரனும் இவரை ஹிந்தி எதிர்ப்பாளர் கோஷ்டித் தலைவர் என்றே எழுதியது.

hindhimeeting

13.11.1938 அன்று நடந்த தமிழ்நாட்டு பெண்கள் மாநாட்டை கொடியேற்றித் தொடங்கி வைத்ததும் அன்னை மீனாம்பாள் அவர்களே ! இந்த மாநாட்டில்தான் ஈ.வெ.ராமாசாமி “பெரியார்” ஆனார்.

இந்த மாநாடு முடிந்த அடுத்த நாள் 14.11.1938 அன்று இந்தி திணிக்கப்பட்ட பள்ளிகளில் ஒன்றான சென்னை தியாலாஜிகல் உயர்நிலைப் பள்ளியின் முன் டாக்டர். எஸ்.தருமாம்பாள் தலைமையில் பெண்களின் படை ஒன்று இந்தி எதிர்ப்புப் போராட்டத்தில் களம் கண்டது !

தமிழ் வாழ்க ! இந்தி ஒழிக ! என்ற முழக்கத்துடன் 10,000 பெண்களும், பொது மக்களும் ஊர்வலமாக சென்று பெரும் இந்தி எதிர்ப்பு எழுச்சியை ஏற்படுத்தினர். தாய்மார்களின் வீர உரையும் சென்னையில் தாய்மார்கள் கைது ! என்ற தலைப்பில் 1938 நவம்பர் 20 அன்று குடியரசு நீதிமன்ற காட்சிகளை கட்டுரையாக வெளியிட்டது.

“இன்று காலை 10 மணிக்கு சென்னை இந்தி தியாலாஜிகல் பள்ளி முன்பு மறியல் செய்த தோழர்கள் டாக்டர்.எஸ்.தருமாம்பாள், மூவலூர் இராமாமிர்தத்தம்மையார், மலர் முகத்தம்மையார், சீதாம்மாள் (தருமாம்பாள் அவர்களின் மருமகள், தன் 3 வயது, 1 வயதுடைய மங்கையர்கரசி, நச்சினார்க்கினியன் ஆகிய இரு குழந்தைகளுடன்), பட்டு அம்மாள், (திருவாரூர் பாவலர் பாலசுந்தரம் மனைவி) ஆகிய தாய்மார்களும் பல்லடம் தோழர்களான பழனியப்பா, பிஸ்ரல்லா சாகிப் ஆகியவர்களும் கைது செய்யப்பட்டனர்.

தாய்மார்கள் மறியல் செய்வதற்கு முன் பெத்துநாய்க்கன்பேட்டை காசி விசுவநாதர் கோயில் முன்பிருந்து 9 மணிக்கு ஊர்வலமாகப் புறப்பட்டனர். ஊர்வலம் புறப்படும் முன் தாய்மார்கட்கும், தொண்டர்களுக்கும் ஏராளமான மாலைகள் சூடப்பட்டன. அங்கிருந்து இந்தி ஒழிக ! தமிழ் வாழ்க ! தாய்மார்கள் வாழ்க ! என்ற பேரொலியினிடையே 10,000 மக்க சூழ்ந்து வர ஊர்வலம் வந்தனர். வாரீர் பெண்களே ! தமிழைக் காப்போம் ! இந்தியை ஒழிப்போம் ! என்ற முழக்கத்துடன் வந்த ஊர்வலத்தின் வருகையில் கூட்டத்தை சமாளிக்க முடியாமல் போனது. போக்குவரத்து தடைபட்டன.ஒரு 5 நிமிடம் தமிழ் வாழ்க ! இந்தி ஒழிக ! என்று கூறிக் கொண்டு தமிழ்ப் பாடல்களையும் பாடிக் கொண்டு நின்றனர். இவர்கள் வருமுன்பே சப் இன்ஸ்பெக்டர்களும், ஏராளமான போலிசும் தயாராகக் காத்திருந்தனர். உடனே ஒரு சப் இன்ஸ்பெக்டர் முன் வந்து நீங்கள் இவ்விடத்தை விட்டுப் போய்விட வேண்டும் ; போக்குவரத்து தடை படுகிறது, உங்களை எச்சரிக்கிறேன் என்று கூறினார்.

இந்தி ஒழிந்தாலொழிய நாங்கள் போக மாட்டோம் எனத் தாய்மார்கள் கூறினார்கள். அப்பிடியானால் நீங்கள் ஸ்டேஷனுக்கு வர வேண்டும். இன்ஸ்பெக்டர் ஜனால் உத்தரவு ; உங்களை அழைக்கின்றார் என்றார்.

சரியென்று புறப்பட்டனர். உடனே, நூற்றுக்கணக்கான பெண்கள் முன்வந்து தமிழ் வாழ்க ! தமிழ்நாடு தமிழர்க்கே !என்று பொறிக்கப்பட்டிருந்த தட்டுகளில் ஆரத்தி எடுத்து மாலையிட்டு வாழ்த்தி வழியனுப்பினர். சப் இன்ஸ்பெக்டர் காரில் ஏறுங்கள் என்று கூறியதை மறுத்து நடந்தே ஆனைகவுனி போலிஸ் ஸ்டேஷனுக்குச் சென்றனர். தாய்மார்களைக் கைது செய்து விட்டனர் என்று தெரிந்ததும் அங்கு நின்று உணர்ச்சி வெள்ளத்தில் மூழ்கி இருந்த ஆண்களும், பெண்களும் கைத்தட்டி வாழ்த்தொலி செய்தனர்.

போலிஸ் ஸ்டேஷனில் இவர்களிடம் கையெழுத்து வாங்கி கோர்ட்டுக்குக் கொண்டு போகும் வரையில் கூட்டத்தினர் ஒரு சிறிதும் கலையாது ஸ்டேஷனைச் சுற்றி நின்று கோஷமிட்டுக் கொண்டே நின்றனர்.

பின்னர், கோர்ட்டுக்குப் போகக் காரில் ஏறும்போதும் மக்கள் ஆரவாரித்தனர். உடனே, டாக்டர்.எஸ்.தருமாம்பாளும், மூவலூர் இராமாமிர்தத்தம்மாளும் அனைவரையும் கைகூப்பி வணங்கி, இன்று இந்தியை ஒழிக்கச் செல்லுகின்றோம் ; இந்தி ஒழியும் வரையில் நீங்களும் உங்கள் கடமைகளைத் தவறாது செய்ய வேண்டும் என்று கூறினார். ஜனங்கள் இராமாமிர்தம் வாழ்க ! தருமாம்பாள் வாழ்க ! மலர் முகத்தமை வாழ்க ! சீதாம்மாள் வாழ்க ! பட்டு அம்மாள் வாழ்க ! இந்தி ஒழிக ! என ஆரவாரித்தனர். சென்னை தமிழ் மக்களின் உணர்ச்சி வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியதை எழுத நம் பேனாவுக்குச் சக்தியில்லை.

பின்னர், தாய்மார்களும் இரு தொண்டர்களும் ஜார்ஜ் டவுன் போலிஸ் கோர்ட்டிற்குக் கொண்டு செல்லப்பட்டனர். காலை 11:30 மணிக்கு நீதிபதி தோழர் வெங்கடராமையர் அவர்களால் வழக்கு விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது.

பிராசிகூடிங் இன்ஸ்பெக்டர், இப்பெண்கள் அய்வரும், தொண்டர்கள் இருவரும் பொது மக்களின் போக்குவரத்திற்கு இடையூறாகவும், சென்னை அரசாங்கத்தார் கொண்டுவந்துள்ள கட்டாய இந்தியை எதிர்ப்பதன் அறிகுறியாகவும் இன்று காலை 10 மணிக்கு இந்து தியாலாஜிகல் பள்ளியின் முன் நின்று இந்தி ஒழிக ! தமிழ் வாழ்க ! ஆச்சாரியார் ஆட்சி ஒழிக ! பார்ப்பனர் சூழ்ச்சி ஓழிக ! எனக் கூறி மறியல் செய்ததாகக் கூறினார்.

பின்னர் சப் இன்ஸ்பெக்டர் சாட்சியத்தில் கூறியதாவது ;

இவர்கள் எழுவரும் இன்று காலை ஊர்வலமாக வந்து இந்து தியாலாஜிகல் பள்ளி முன் நின்று இந்தி ஒழிக ! தமிழ் வாழ்க ! ஆச்சாரியார் ஆட்சி ஒழிக ! பார்ப்பனர் சூழ்ச்சி ஓழிக ! எனக் கூறி மறியல் செய்தனர். இதனால் பெருங்கூட்டம் கூடிவிட்டது. போக்குவரத்து தடைபட்டது.

இதனால், பள்ளியுள்ள பையன்களெல்லாம் வேடிக்கை பார்க்க வகுப்பை விட்டு வெளியே வந்துவிட்டனர். மேலும், பையன்கள் உள்ளே போகவோ, வெளியே வரவோ முடியாமல் போயிற்று. நான் இங்கு நிற்கக் கூடாதென எச்சரித்தும் இந்தி ஒழியும் வரைக்கும் போகமாட்டோம் எனக் கூறினார். எனவே உடனே நான் கைது செய்தேன்.

நீதிபதி: சாட்சி கூறியது எல்லாம் சரிதான ?

தருமாம்பாள்: சில உண்மை இருக்கிறது ! சில தவறாகவும் கூறுகிறார். நாங்கள் இந்தி ஒழிக ! தமிழ் வாழ்க ! என்று கூறினோமே ஒழிய பார்ப்பன சூழ்ச்சி ஒழிக ! ஆச்சாரியார் ஆட்சி ஒழிக ! என்றோ கூற வில்லை. அப்பிடி நாங்கள் சொன்னோம் என்று தவறாகக் கூறுவாரானால் அதைப் பற்றியும் நாங்கள் என்ன சொல்வது ? இப்பவும் கூறுகின்றோம் ; இந்தி ஒழியும்வரை இதேபோல் கூச்சல் போடத்தான் செய்வோம்; இதனை எங்களைக் கைது செய்யும் முன் சப் இன்ஸ்பெக்டரிடத்தும் கூறியுள்ளோம்.

இராமாமிர்தம்: எங்களுக்குத் தாய்மொழியாகிய தமிழ்தான் பொது மொழியாகயிருக்க வேண்டும். நாங்கள் எங்கள் உரிமைக்காக பாடுபடுகிறோம். இதற்காகக்கூட இந்த அரசாங்கத்தில் இடமில்லை என்றால் நாங்கள் எப்பிடி வாழ்வது?நாங்கள் தமிழ் வாழ்க ! இந்தி ஒழிக ! என்றுதான் கூறினோமே ஒழிய, வேறொன்றும் கூறவில்லை.

மலர்முகத்தம்மை: தமிழ் நாட்டில் தமிழ்தான் தழைக்க வேண்டும். இந்தி ஒழிய வேண்டும். இது இரண்டும்தான் எங்கள் நோக்கம்.

சீதாம்மாள் : தமிழ் வாழவும் , இந்தி ஒழியவும் வேண்டும் !

பட்டு அம்மாள்: தமிழ் வாழ்க ! இந்தி ஒழிக ! இதுதான் எங்கள் கடமை.

(இரு தொண்டர்களும் தங்கள் கருத்தும் அவ்வாறே என்றனர்)

நீதிபதி: சப் இன்ஸ்பெக்டர் உங்களைப் போகச் சொன்ன போது மாட்டேன் என்றீர்களா?

தாய்மார்கள்: ஆம் !

நீதிபதி : எதுவரை போக மாட்டீர்கள்? ஆனால், அங்கேயே இருக்க வேண்டும், நிற்க வேண்டும் என்பதுதான் உங்கள் கருத்தா?

தருமாம்பாள்: இந்தி ஒழியும் வரை சதா இங்ஙனம் வந்து கொண்டுதான் இருப்போம்.

நீதிபதி: ஒரு பாஷையை ஒழிக்க முடியுமா?

தருமாம்பாள்: இல்லை, எங்கட்கு இந்தி கட்டாயப் பாடமாக இருத்தல் கூடாது என்பதே.

நீதிபதி: உங்கட்கு வேண்டுமானால் நீங்கள் படிக்க வேண்டாம் ; படிக்கின்றவர்களை ஏன் தடுக்க வேண்டும்?

தருமாம்பாள்: தமிழர்கள் எல்லோரும் படிக்க வேண்டும் எனக் கட்டாயப்படுத்தினால் ?

நீதிபதி: இஷ்டப்பட்டவர்களை ஏன் தடுக்க வேண்டும்? வேண்டியவர்கள் படித்துக் கொள்ளட்டுமே !

தருமாம்பாள்: இந்தியை யார் வேண்டுகிறார்கள் என்பதை ஓட்டுக்கு விடச் சொல்லுங்கள்.

நீதிபதி: மற்றவர்கள் படிக்க வேண்டாமேன்பதில் உங்களுக்கு என்ன சிரத்தை?

தருமாம்பாள்: மற்றவர்கள் மட்டும்மல்ல ; பொதுவாகத் தமிழர்கட்கே, அவர்கள் சந்ததிக்கே இந்தி வந்தால் நிச்சயம் கெடுதல் உண்டாகும். இதற்கு தாய்மார்கள் ஆவண செய்ய வேண்டாமா?

நீதிபதி: அதற்கு பள்ளிக் கூடத்தின் முன் நின்று சத்தம் போடுவானேன்?

தருமாம்பாள்: இந்தி வந்தால் தமிழர்கட்குக் கெடுதல் உண்டாகும் என்பதை ஒவ்வொரு வீட்டுக்கும் போய்ச் சொல்ல முடியாது. இது மாதிரி ஊர்வலமாக வந்து கிளர்ச்சி செய்தால், தமிழர்கள் இதற்கு ஆவண செய்வார்கள். அரசியலாரும் தங்கள் தவறை உணர்வார்கள். இதற்காக நாங்கள் ஊர்வலமாக வந்து பள்ளியின் முன் மறியல் செய்தோம்.

நீதிபதி: இதை விடுத்து, வேண்டுமானால் ஒவ்வொருவர் வீட்டிற்கும் போய்க் கத்துங்களேன்.

தருமாம்பாள்: எங்களுக்கு எல்லோருடைய வீடுகளும் சரியாகத் தெரியாது. தயவு செய்து தாங்கள் ஒரு லிஸ்ட் கொடுத்தால் அவ்வாறு செய்வோம்.

நீதிபதி: உங்களுக்கு ஏதாவது சாட்சிகள் உண்டா?

தருமாம்பாள்: இந்த அரசியலில் எங்களுக்கு சாட்சி எங்கு கிடைக்கும்? பொதுவாக இந்து கோர்ட்டிற்கு வந்திருக்கும் ஆயிரக்கணக்கான மக்களும் சாட்சிகள்தான்

பிராசிகூடிங் இன்ஸ்பெக்டர்: நீங்கள் செய்தது தவறு என்று உணர்ந்து, இனி இது போல் செய்யவில்லை என்று கூறினால் உங்களை மன்னித்து விடுவதாகச் சொல்லுகிறார் நீதிபதி.

தருமாம்பாள்: அதற்காக நாங்கள் இங்கே வரவில்லை.

இராமாமிர்தம்: எங்கள் தாய்மொழியை வேண்டாமென்று சொல்லச் சொல்லுகின்றீர்களா ? அது முடியாது .

நீதிபதி: எனது கடமையைச் சொன்னேன். ஆனால் எனக்கு முன்பே தெரியும், நீங்கள் சொல்ல மாட்டீர்கள் என்று.

தாய்மார்கள் அனைவரும்: எங்கள் தாய்மொழிக்காக, உரிமைக்காகப் போராடினோம். தவறு செய்தால் அல்லவா மன்னிப்புக் கேட்க வேண்டும். நாங்கள் ஒரு குற்றமும் செய்யவில்லையே.

பின்னர் பிராசிகூடிங் இன்ஸ்பெக்டர் தொண்டர்களை நோக்கி, நீங்கள் உங்கள் செய்கை தவறானது என்று உணர்கின்றீர்களா ? உணர்ந்தால் உங்கள் ரயில் சார்ஜுக்குக் கூட பணம் கொடுத்து அனுப்புவோம்.

தொண்டர்கள்: நாங்கள் அதை விரும்பவில்லை !

நீதிபதி: தாய்மார்கள் அனைவருக்கும் 50 ரூபாய் அபராதம் அல்லது 6 வாரம் வெறும் காவல் என்றும், தொண்டர்கள் இருவருக்கும் 50 ரூபாய் அபராதம் அல்லது 6 வாரம் கடுங்காவல் தண்டனை !

தாய்மார்களும், தொண்டர்களும் சிறை தண்டனையை மகிழ்ச்சியுடன் ஏற்றுக் கொண்டனர்.தாய்மார் அய்வரில் தோழர் சீதாம்மாள் தன் இரு குழந்தைகளுடன் சென்றார். அதைக் கண்ட அன்னாரின் மூத்த மகன் 5 வயதுடையவன் அழ ஆரம்பித்தான். உடனே தோழர் சீதாம்மாள் அவர்கள் அவனைத் தூக்கித் தேறுதல் கூறி பயப்படாமலிரு ! நான் சீக்கிரம் வந்து விடுகிறேன் என்று கூறிச் சென்றார்.

 

Leave a comment