திராவிடம் · பெரியார்

தமிழ்த் தேசிய புளுகுணிகள் !

தமிழ்த் தேசிய புளுகுணிகள் !

திராவிடக் கலை, இலக்கியத்தின் மையப்புள்ளி புரட்சிக் கவிஞர் பாரதிதாசன். “தொண்டு செய்து பழுத்த பழம்” என தந்தை பெரியாரை பாடியதோடு நில்லாமல் தந்தை பெரியாரின் உரைகளுக்கெல்லாம் கவிதை எழுதியவர் பாவேந்தர் பாரதிதாசன். பொய்யைத் திரும்பத் திரும்பச் சொன்னால் உண்மையாகி விடும் என்ற நப்பாசையில் பல்வேறு இட்டுக் கதைகளைக் கட்டி பாரதிதாசனையும் தந்தை பெரியாரையும் எதிர் எதிராக நிற்கவைக்க முயலுகின்றனர் சிலர். பாரதிதாசனின் பாடல் வரிகளை அங்கங்கே உருவி எடுத்து அவை பெரியாருக்கு எதிராக பாரதிதாசனால் பாடப்பட்டது என்று கதை கட்டி பரப்பி வருகிறார்கள்.

two

சென்ற வாரம் டிவிட்டரில் ஒரு தமிழ்த் தேசியக் கொள்கைப் பிடிப்புடைய ஒருவருடன் பேசிக் கொண்டிருந்த போது இதே அவதூறுகளைச் சொன்னார். ஏன் அப்பிடிச் சொல்கிறீர்கள்? எங்கே இது போன்று உள்ளது என்று கேட்டவுடன் பல்வேறு தமிழ்த் தேசிய வலைப் பக்கங்களையும் , குணா என்பவர் எழுதிய நூலையும் தரவாகக் காட்டினார். அவதூறு சொல்பவர்கள் சொல்லிவிட்டு போய் விடுவார்கள். நாம்தான் நூல் பிடித்துக் கொண்டு போய் அதைத் தவறு என்று நிறுவ வேண்டும். அப்பிடியே நிறுவினாலும் வேறு ஒருவர் அதே அவதூறை மீண்டும் நமக்கே வாட்ஸாப்பில் அனுப்புவார்.

தந்தை பெரியார் எழுத்துச் சீர்திருத்தம் என்பதை புதிதாகக் கண்டுபிடிக்க வில்லை. அவருக்கு முன்னரே பலரும் இதைச் செய்து இருக்கின்றனர். சீர்திருத்தம் என்பதில்லாமல் காலந்தோறும் எழுத்துருக்கள் மாறியே வந்திருக்கின்றன. பெரியாரும் அவரது சீர்திருத்தத்தை 1935-ல் அறிமுகப்படுத்திய போதும் குடி அரசுத் தலையங்கத்தில் “தமிழ் பாஷை எழுத்துக்கள் விஷயமாய் பல சீர்திருத்தங்கள் செய்யப்பட வேண்டும் என்பது அனேகருக்குள் வெகுகாலத்திற்கு முன்பு இருந்தே ஏற்பட்டிருந்த அபிப்பிராயங்களாகும்.
தோழர் குருசாமி அவர்கள் எழுதியது போல் பெருத்த பண்டிதர்களில் கூட பலர் எழுத்துச் சீர்திருத்த விஷயமாய், வெகு காலமாகவே பேசி வந்திருக்கிறார்கள்.” என்றே குறிப்பிடுகிறார். இது பரவலாக பயன்படுத்தப்பட்டு வந்தாலும் பின்னர் பெரியார் நூற்றாண்டு விழாவின் போது இதை அங்கீகரித்து அரசாணை பிறப்பிப்பத்தது தமிழக அரசு.

opening

அவதூறு 1:

உண்மை இப்பிடி இருக்க பாரதிதாசன் 1930-களின் இறுதியில் எழுதிய பாடலைக் காட்டி, அதை பெரியாரின் எழுத்துச் சீர்திருத்தத்திற்கு எதிராக எழுதப்பட்ட பாடல் என்று பொய் பரப்பி வருகினறனர். தமிழ்த் தேசியன் என்ற வலைப் பூ பக்கத்தில் ‘திராவிடம் மறுத்த பாரதிதாசன்’ என்ற தலைப்பில் ஒரு கட்டுரை. அதைக் கொண்டே இந்த அவதூறு முக நூல், ட்விட்டர், வாட்ஸாப் என எங்கும் பரவுகிறது. அந்தக் கட்டுரையில் :

“1935ஆம் ஆண்டிலிருந்தே தந்தை பெரியாரும் இதனையே தொடர்ந்து வலியுறுத்தி எழுதி வந்தார். அதில் ஆங்கில எழுத்துகளை தமிழில் கலந்து எழுதியதோடு, தமிழுக்கு மாற்றாக ஆங்கிலமொழியை முன் நிறுத்தவும் துணிந்தார். இதைக் கண்டித்து பாரதிதாசன் கீழ்கண்ட பாடல்களை/வரிகளை எழுதினார் என்று சரடு விட்டிருக்கின்றனர்.

” …எழுத்தைக் கொல்வது மொழியைக் கொல்வதே!
மொழியைக் கொல்வது இலக்கியம் கொல்வதே!
இலக்கியம் கொல்வதோ இனத்தைக் கொல்வதே!

….எழுத்து திருத்தத்திலும் எண்ணத் திருத்தம் வேண்டும்
எழுத்துகளைச் சீர்திருத்தம் ஆர்வலர்க்கு ஒரு விண்ணப்பம்
எதற்காக இந்த வேகம்? பழுத்துக் கனிந்திட்ட மொழிக் கனிக்கு
பழம் அழுகச் செய்வதுவா உங்கள் திட்டம்

ஒழுக்கத்தில் ஓரழகு வேண்டுமாயின்
உயர் பெரியார் திருத்தத்தை ஏற்க மேலும்
கழுத்தறுப்பு வேலைதனைச் செய்வதெல்லாம்
காளைகளைக் காயடிக்கும் செயலை ஒக்கும்

மொழிக்குரிய உயர்கருத்தும் உலகலாகவும்
முன்னேறும் அறிவியலை வளர்க்கும் எண்ணம்
விழிக்கடையின் ஓரத்தும் வராத பேர்கள்
வெதும்புவதேன் எழுத்தினிலே சீர்திருத்தம்!

கொழித்த மொழி பிரஞ்சினிலே, ஆங்கிலத்தில்,
குறியீட்டைக் காட்டுகிற மொழி சீனத்தில்
தொழில்படுமா உங்கள் சீர்திருத்தம்?
தோள் விழுங்கிச் சுளைகளை ஏன் எறிகின்றீர் நீர்?

மக்களெல்லாம் தாய்மொழியைக் கற்பதற்கு
மடத்தனமாய்க் கற்பிக்கும் முறையை மாற்றிச்
சிக்கலின்றித் தெளிவாக உணருவதற்குச்
செம்மைநிலை காணாத ஆங்கிலத்தால்
தக்கவொரு தகுதியினைப் பெற்றார் போன்று
தமக்குள்தாம் பெரியார் என எண்ணிக்கொண்டு
தக்கைகளாய் தலைநிமிர்ந்து ஆடல் வேண்டா!
(பாவேந்தர் 1.02.1950)

Fact Check :

இதில் இருப்பது இரண்டு பாடல்கள். பாடலின் இடையில் வரும் வரிகள். இவர்கள் முழுப் பாடலைக் கொடுக்கவே மாட்டார்கள். கொடுத்தால் குட்டு வெளிப்பட்டு விடும். எனவே இங்கே அங்கே என இது போல உருவித்தான் கொடுப்பார்கள்.

“எழுத்தைக் கொல்வது மொழியைக் கொல்வதே!
மொழியைக் கொல்வது இலக்கியம் கொல்வதே!
இலக்கியம் கொல்வதோ இனத்தைக் கொல்வதே!”

இந்த வரிகள் உள்ள பாடலின் தலைப்பு “தமிழகம் மீள வேண்டும் ஆரிய ஆட்சி ஒழிய வேண்டும்”. பாடலின் தலைப்பைப் பார்த்தாலே புரிந்து விடும் இது எதற்காக, யாரை நோக்கி எழுதப்பட்ட பாடல் என்று. மத்திய அரசு அலுவலங்ககளில் ஹிந்தி எழுத்துக்களைத் தமிழில் எழுத ஆரம்பித்தார்கள். அதை எதிர்த்து எழுதப்பட்ட பாடல் இது. குறிப்பாக இந்த பாடலின் இறுதி வரியிலேயே

“ஆகாஷ் வாணி” – அதனை நீக்குக!
“வானொலி” – ஆக்குக ! என்று கெஞ்சினும்
இதற்கும் மறுப்பா எங்கே அடுக்கும்?”

என்று கேட்கிறார் பாரதிதாசன். பாடல் முழுக்க நேருவின் ஆட்சியைச் சாடுகிறார். ஆனாலும் இந்தப் பாடலில் இருந்து சில வரிகளை எடுத்துக் கொண்டு இது பெரியாரின் எழுத்துச் சீர்திருத்தத்திற்கு எதிராக எழுதப்பட்ட பாடல் என்பதில் துளியளவும் உண்மை இல்லை !

“எழுத்துகளைச் சீர்திருத்தம் ஆர்வலர்க்கு ஒரு விண்ணப்பம்
எதற்காக இந்த வேகம்? பழுத்துக் கனிந்திட்ட மொழிக் கனிக்கு
பழம் அழுகச் செய்வதுவா உங்கள் திட்டம்” – என்று இன்னொரு பாடலைக் காட்டி இதுவும் இதையும் பெரியாருக்கு எதிராக எழுதினார் என்கிறார்கள்.

இதுவும் அதே ‘தமிழுக்கு அமுதென்று பேர்’ தொகுப்பிலுள்ள பாடலே ! 1949ஆம் ஆண்டு பேராயக்கட்சி ஆட்சியின் போது கல்வி அமைச்சர் அவினாசிலிங்கம் அவர்களால் “எழுத்து சீர்திருத்தம்” எனும் பெயரில் தமிழ் மரபெழுத்துகளை மாற்றி எழுதும் முயற்சி மேற்கொள்ளப்பட்டது. அதை அனைத்து தமிழறிஞர்களும் எதிர்த்தார்கள். அதைச் சுட்டியே பாரதிதாசன் இந்தப் பாடலை எழுதினர். இந்தப் பாடலின் தலைப்பு “எழுத்துத் திருத்தத்திலும் எண்ணத்திருத்தம் வேண்டும்” என்பது. இந்தப் பாடலின் இறுதிப் பகுதியில் பார்த்தால் உண்மை தெரிந்து விடும். “தமிழ் வளர்ச்சி, இயக்குநர்கள் கையில் இல்லை. !” தமிழக அமைச்சரும், தமிழக கல்வித் துறை இயக்குநரும் சேர்ந்து எடுத்த முடிவை எதிர்த்து எழுதப்பட்ட பாடலே இது !

இது பெரியாரின் எழுத்துச் சீர்திருத்தத்திற்கு எதிராக எழுதப்பட்ட பாடல் என்பதில் துளியளவும் உண்மை இல்லை !

அவதூறு 2:

பெரியார் தமிழைப் பழித்தார், தமிழ் இலக்கியங்களைப் பழித்தார். அப்போது,

“நூலைப்படி-சங்கத்தமிழ் நூலைப்படி!
முறைப்படி நூலைப் படி!
சங்கத்தமிழ் நூலைப்படி!
காலையில் படி, கடும்பகலில் படி,
மாலை இரவு, பொருள்படும்படி!”

என்று பெரியாருக்கு உறைக்கும்படி கூறினார்.

Fact Check :

இதெல்லாம் எங்கிருந்து கண்டுபிடிக்கிறார்கள் என்றே தெரியவில்லை. பாடலில் அவ்வாறு சொல்லப்படவில்லை ; பாரதிதாசனும் அவ்வாறு சொல்லவில்லை. பின் எப்பிடி அவர்களின் சொந்தக் கருத்தை பாரதிதாசனின் பாடல் மீது வலிய ஏற்ற முடிகிறது ?

இந்தப் பாடல் இடம் பெற்றிருக்கும் பகுதி “குழந்தைக்கு அழைப்பு”. அதாவது குழந்தைக்கு அறிவுரை கூறும் பாப்பா பாடல் தொகுப்பில் இருக்கும் பாடலை வைத்து அது பெரியாருக்கு அறிவுரை கூறும் பாடல் என்பது எத்தனை பெரிய புரட்டு?

அவதூறு 3:

தமிழில் இலக்கியங்களே இல்லை என்கிறார் தந்தை பெரியார். அவரை கடுமையாக சாடிய பாரதிதாசன்,

“இப்படிப் பட்ட தலைவர் என்பவர்
தமிழில் இலக்கியம் இல்லை என்றனர்!
……………
……………
……………
தமிழைத் திறம்படப் பேசவும் எழுதவும்
வைத்தது யாது?
வண்டமிழ் இலக்கியம்!
தமிழ் இலக்கியம்,
தமிழ் இலக்கணத்தை
உண்டு பண்ண உதவ வில்லை
என்று தமிழர் தலைவர் சாற்றுவர்;
அதே நேரத்தில் அந்தத் தலைவர்
முப்ப தாண்டாய் முளைத்த இலக்கியம்எத்தனை ஆயிரம் என்பதை அறியார்!”

என்று 1961-ல் பாடினார். இன்னொரு தமிழ்த் தேசிய வலைத் தளம் இதைச் சொல்கிறது. அதில் இருக்கும் கட்டுரையின் பெயர். “தமிழைப் பழித்த பெரியாருக்கு புரட்சிக்கவிஞர் பாரதிதாசன் தந்த நெத்தியடி!” 🙂 🙂 🙂

Fact Check :

தமிழ் மொழி, இலக்கியங்கள் குறித்த தந்தை பெரியாரின் கருத்துகளுக்கு திடீர்த் தமிழ்ப் பற்றாளர்களும், அதைப் பயன்படுத்திக் கொள்ளத் துடிக்கும் பார்ப்பனியமும், தமிழ்த் தேசியமும் காட்டும் எதிர்ப்புகளுக்கு அன்றே மிகத் தெளிவாக பதில் அறைந்திருக்கிறார் புரட்சிக்கவிஞர் பாரதிதாசன்.

குயில் இதழ்களிலிருந்து புரட்சிக் கவிஞரின் கேட்டலும் கிளத்தலும்…..

கே: சிலப்பதிகாரம் பகுத்தறிவுக்கு ஒவ்வாதது ஆரியத்தைத் தமிழரிடம் புகுத்தும் நோக்கமுடையது என்று பெரியார் சொல்லலாமா?

கி: கதையமைப்பு நன்று. தமிழர் வாழ்க்கை முறைகள் சில நல்லன. பொருந்தாதவை பகுத்தறிவுக் கொவ்வாதவையாய் இருக்கின்றன. பாடம் சொல்லும் புலவர்கள் இவைகளை மாணவர்கட்கு எடுத்து விளக்குவதில்லை.

அதனால் ஆரியம் தமிழகத்தில் வலியுறுகின்றது. தமிழர் ஒழுக்கம், கலை, நாகரிகம், பண்பாடுகள் குறைவுபடுத்தப்படுகின்றன. புதியதொரு சிலப்பதிகாரம் எழுதிக் கொள்ளலாமன்றோ!

கே: தொல்காப்பியம் ஒரு தமிழனால் செய்யப்படவில்லை. தமிழர் ஒழுக்கம், கலை, நாகரிகம் அதில் மறுக்கப்படுகின்றன என்று கூறலாமா பெரியார்?

கி: ஆயிரம் முறை கூறலாம். வெள்ளை வாரணனாரும் பிறரும், தொல்காப்பியத்தில் பார்ப்பனரைப் பற்றிய செய்யுட்களை இடைச் செருகல் செய்துள்ளார்கள் என்று கூறினார்கள்.

இடைச் செருகல்களை நீக்கிப் பதிப்பிக்கலாமன்றோ புலவர்கள்! செய்யட்டும் செய்த பிறகு பெரியார் அவ்வாறு கூற மாட்டார்.
(புரட்சிக் கவிஞர் பாரதிதாசன் – குயில் 16.2.1960)

கே: தமிழுக்கு இலக்கியம் இல்லை எனலாமா பெரியார்?

கி: இராமாயணத்தையும் பாரதத்தையும் ஆரியரின் காட்டுமிராண்டித்தனத்தைப் பின்பற்றி எழுந்த புராணம் முதலியவற்றையும் நம் இலக்கியம் நம் இலக்கியம் என்று கூறுவதன்றி தமிழர் இலக்கியங்கள் இன்னின்னவை என்று எடுத்துக் காட்டும் வலி இருந்ததா புலவர்களிடம்? அமைச்சர்களிடம்?

தமிழிலக்கியத்தை முன்னுக்குக் கொண்டு வாருங்கள், அவைகளைப் பின்பற்றி இலக்கியத்தைக் குவியுங்கள். சீர்திருத்தக்காரர்களை எதிர்ப்பதன் மூலம் வயிறு வளர்க்க எண்ணாதீர்கள் என்பதுதான் பெரியார் சொல்வதன் பொருள்.

(புரட்சிக் கவிஞர் பாரதிதாசன் – குயில் 23.2.1960)

ஆக, 1960-ல் பெரியாரின் கருத்தை அப்பிடியே உள்வாங்கி பதில் அளித்த புரட்சிக் கவிஞர் 9 மாதங்களுக்குப் பின் அப்பிடியே திரும்பி பெரியார் முன் எப்போதோ சொன்ன கருத்துக்களுக்கு எதிராய் பேசினார் என்பது சரியாகுமா? இதுவும் 100% புரட்டே !

அவதூறு 4:

இந்த புரட்டுக்களை நம்பி அதைப் பரப்பிக் கொண்டு இருப்பவர்களின் தலைவனாக இருப்பவர் குணா !! இவர் ‘திராவிடத்தால் வீழ்ந்தோம்’-னு ஒரு புத்தகம் எழுதியிருக்கார். அதே “நூலைப் படி” பாடலை பெரியாரை எதிர்த்து எழுதினர் என்ற அதே பொய்யுடன் ஆரம்பித்தவர் பிள்ளை பிறந்தேன் யாருக்காக என்ற பாடலை பெரியாரின் தமிழ் மொழி உணர்வுக்கு எதிராக எழுதப்பட்ட பாடல் இது என்கிறார்.
பிள்ளைபிறந்தேன் யாருக்காக?
பெற்றதமிழ் மொழிப் போருக்காக!
உள்ளம் இருப்பதும் தோள் இருப்பதும்
உயிர்நிகர் தமிழ்ச் சீருக்காக! (சலுகை).

Fact Check :
கொடுக்கப்பட்டிருக்கும் படத்தைப் பாருங்கள். குணா எழுதிய புத்தகத்தின் 72-ஆம் பக்கத்தில் இந்த பாடலையும் அவரின் புரட்டையும் கொடுத்திருக்கிறார். மிகவும் நேர்மையானவர் என்ற நினைப்பில் பாடலின் கீழே எண்ணை அடிக்குறிப்பாக கொடுத்துள்ளார். பின்னிணைப்பில் 78 என்ற எண்ணிற்கு நேராக 1965 பிப்ரவரி தென் மொழி இதழ் என்று இருக்கும். அதாவது 1965 மொழிப் போர் நடந்த காலத்தில் தென்மொழியில் வந்த பாரதிதாசன் பாடல். அந்த மொழிப் போரில் பெரியார் ஈடுபடவில்லை எனவே அவர் தமிழ் மொழிக்கு எதிராக இருந்தார் அதைக் கண்டித்து பாரதிதாசன் இந்தப் பாடலை எழுதினார் என்று காட்ட விரும்புகிறார் குணா.Thenmozhi

ஆனால் பெருஞ்சித்ரனாரின் தென்மொழி ஏட்டைப் பார்த்தால் குணாவின் புரட்டு வெளிப்பட்டு விடும். அதே 1965 ஆண்டு பிப்ரவரி இதழில் “அவரின் நினைவாக” என்று குறித்தே இந்த பாரதிதாசன் பாடல் வெளியிடப்பட்டு இருக்கிறது. ஆம் ! பாவேந்தர் 1964 ஆம் ஆண்டே இறந்து விட்டார்.

குணாவிடம் பாரதிதாசன் பாடல் தொகுப்பு நூல் இல்லாமல் இருக்காது. இந்தப் பாடலைப் போட்டு பாரதிதாசன் நூல் என்றே குறித்து இருக்கலாம். ஆனால் பெரியாரின் மீது ஒரு பொய்யான குற்றச்சாட்டை வைக்க வேண்டும் என்ற ஒரே காரணத்திற்காகவே தென்மொழி இதழில் இருந்து இந்தப் பாடலை எடுத்துக் கையாண்டதாகத் தெரிவிக்கிறார்.

உண்மையில் பாரதிதாசனின் பெரும்பாண்மையான இந்தி எதிர்ப்புப் பாடல்கள் 1948 மொழிப் போரின் போது பாடப்பட்டவை. அப்போது அதன் தலைவராக இருந்து இந்தியை விரட்டியவர் தந்தை பெரியார். அவரின் போராட்டத்திற்கு படை சேர்க்கவே பாரதிதாசன் இந்தி எதிர்ப்புப் பாடல்களைப் பாடினார். குணா குறிக்கும் இந்தப் பாடலை பாரதிதாசன் பாடல் தொகுப்பில் பார்த்தால் இந்த உண்மை புரியும். இதற்கு அடுத்து வரும் பாடலே “தொண்டர் படைப் பாட்டு ” மற்றும் “பெரியார் இயக்கம் வாழ்க ! நரியார் கூட்டம் ஒழிக !” என்பதே. குணாவும் அதே நரியார் கூட்டத்தைச் சேர்ந்தவர்தான் போல !

சரி, இந்தப் பாடலுக்கு வருவோம். இந்தப் பாடலின் தொடக்க வரிகள்:

“சலுகை போனால் போகட்டும்-என்
அலுவல் போனால் போகட்டும்
தலைமுறைஒரு கோடி கண்ட என்
தமிழ் விடுதலை ஆகட்டும்.”

இந்தப் பாடலை பாரதிதாசன் புதுவை அரசுக்கு எதிராகவே பாடினார். அதுவே உண்மை. அதைவிட்டு இந்தப் பாடலின் இடையே வரும் இரண்டு வரியை பிடித்துக் கொண்டு அதை பெரியாருக்கு எதிராக காட்டுவது குணாவின் புரட்டு !

அவதூறு 5:

திரு.குணா அதே புத்தகத்தில் இன்னும் சில மேற்கோள்களைக் காட்டி அவையும் பெரியாருக்கு எதிராக பாரதிதாசன் பாடியது என்று புளுகுகிறார். பாரதிதாசன் திராவிட எதிர்ப்பின் காரணமாக தெலுங்கு, கன்னடர்களை எதிர்த்து கீழ்க்கண்ட பாடல்களைப் பாடினார்.

“தமிழ் நாட்டில் அயலார்க் கினி என்ன வேலை?
தாவும் புலிக்கொரு நாய் எந்த மூலை?”

“அவனவன் நாட்டில் அவனவன் வாழ்க-மற்
றயல் நாட்டைச் சுரண்டுதல் அடியோடு வீழ்க! ”

Fact check :

இந்தப் பாடல் வரிகளைப் பார்க்கும் போது குணா சொல்வது உண்மை என்பது போலவே தெரிகிறதா? அதற்குத்தான் முழுப் பாடலைக் கொடுக்காமல் இடையில் இருந்து சில வரிகளை உருவிக் கொடுப்பது. முழுப் பாடலையும் பார்த்தால் எத்தனை பெரிய பூசணியை குணா சோற்றில் மறைக்கப் பார்க்கிறார் என்பது புரியும். “தமிழ் நாட்டில் அயலார்க் கினி என்ன வேலை?” என்ற வரிக்கு அடுத்த வரி இதுதான்.

BD1

“தூங்கிய துண்டு தமிழர்கள் முன்பு-பகை
தூளாகும் அன்றோ எழுந்த பின்பு?
தீங்கு புரிகின்ற வடக்கரின் என்பு
சிதைந்திடச் செய்திடும் தமிழரின் வன்பு.”

வடநாட்டு அரசியல்வாதிகள் செய்யவும் தமிழர்க்கு எதிரான அரசியலை எதிர்த்து பாடிய பாடலை தெலுங்கர்க்கு எதிராக பாடினார் என்பது குணாவின் மற்றும் ஒரு புரட்டே !

அவதூறு 6:

குணா, மணியரசன் என அனைவரும் இன்னும் ஒன்றையும் சொல்கிறார்கள். அது பாரதிதாசன் 1958க்குப் பின்னால் பெரியாரிடமிருந்து விலகி வந்து தனித் தமிழ்நாடு குறித்த பாடல்கள் எழுதினர். திராவிடர் குறித்த பாடல்கள் எழுதாமல் தமிழர் என்றே குறித்து தமிழர் எழுச்சி குறித்து பாடல்கள் எழுதினார். ம.பொ.சி நடத்திய கூட்டங்களில் கலந்து கொண்டு பெரியாருக்கு எதிராக பேசினார்.

Fact Check :

இதில் பாதி உண்மை இருக்கிறது. 🙂  மொழி வாரி மாநிலம் அமைக்கப்பட்ட பின்பு பாரதிதாசன் தமிழ் நாடு/தமிழர் என்றே குறித்து பாடல்கள் எழுதினர். ஆனால் அப்பிடிச் செய்தது பாரதிதாசன் மட்டுமில்ல. தந்தை பெரியாரும் திராவிட நாடு கோரிக்கையைக் கைவிட்டு தனித் தமிழ்நாடு வேண்டும் என்றே பேசியும், எழுதியும் வந்தார்.

பெரியார் யாரைத் ‘திராவிடர்’ என்று குறித்தார் தமிழக, ஆந்திர, கன்னட, மலையாள மக்களைச் சேர்த்து அனைவரையும் திராவிடர் என அழைத்தார் என்பது பொய் ! திராவிடர் என்று சென்னை மாகாண வாழ்த் தமிழரையேக் குறித்தார். திராவிடன் என்பதை அவர் குறிச் சொல் என்றே சொன்னார். ‘திராவிடர்’ என்ற சொல்லை பண்பாட்டு விடுதலைக்காக, சமூக விடுதலைக்காக, ஆரியத்திற்கு எதிராக பார்ப்பனரல்லாதார் அனைவரையும் ஒன்றுத் திரட்ட/குறிக்கத்தான் பயன்படுத்தினார். ஈரோட்டிலிருந்து நாகர்கோவிலுக்கு ஒரு கூட்டத்திற்குப் போனால், அங்குள்ள பெரும்பான்மையான நாகர்கோவில் மக்களைப் பார்த்து ‘ஈரோடுமக்கள் அல்லாதவர்களே’ என அழைப்பது எப்பிடிப் பொருத்தமில்லால் இருக்குமோ அதே போலதான் 2% மக்களை பார்ப்பனர் என்றும் மீதமுள்ள 98% மக்களை பார்ப்பனரல்லாதார் எனவும் அழைப்பது.

அதே போல 1956-ல் இருந்து பெரியார் இறக்கும் வரை எழுதப்பட்ட விடுதலை செய்திகளில் தனித் தமிழ்நாடே தீர்வு என்றே இருக்கும்.

““தமிழ்நாடு தனியாகப் பிரிந்தால் இருக்குமா என்று கேட்கிறார்கள். இல்லாமல் காக்கை, கழுகு தூக்கிக் கொண்டா போய் விடும்? பக்கத்தில் இருக்கும் இலங்கையும், பர்மாவும் இருக்கும் பொழுது நாம் மட்டும் இருக்க முடியாதா? நமக்குப் போதுமான வசதி இங்கேயே இருக்கிறது”. – (விடுதலை, 29.8.1956)

tn

பாரதிதாசன் ம.பொ.சி நடத்திய கூட்டத்தில் கலந்து கொண்டார் என்பதற்காக அவர் பெரியாரை விட்டு விலகி ம.பொ.சியை ஆதரித்தார் என்பதில் எந்த வித உண்மையும் இல்லை. பாரதிதாசன் இறுதி வரை ஏற்றுக் கொண்ட ஒரே தலைவர் தந்தை பெரியார் மட்டுமே ! தமிழனின் வாழ்வை உயர்த்த அரும்பாடு பட்ட அந்தத் தலைவனின் பெருமையை அறிந்திருந்ததால்தான் பாரதிதாசன் இப்பிடிப் பாடினார் !

“தமிழன் மானம் தவிடுபொடி ஆகையில்
வாழாது வாழ்ந்தவன் வடுச்சுமந்து சாகையில்
‘ஆ’ என்று துள்ளி மார்பு தட்டிச்
சாவொன்று வாழ்வொன்று பார்ப்பேன் என்று
பார்ப்பனக் கோட்டையை நோக்கிப் பாயுமிவ்
அருஞ்செயல் செய்வார் அல்லால்
பெரியார் எவர்? — நம் பெரியார் வாழ்கவே! ”

 

Leave a comment