பெரியார்

அரவிந்தன் நீலகண்டனுக்கு மறுப்பு !

அரவிந்த நீலகண்டனுக்கு புரட்டை இட்டுக் கட்டி கட்டுரையாக எழுதுவது ஒன்றும் புதியதல்ல. முன்பு பெரியாரையும், அம்பேத்கரையும் இரு வேறு துருவங்களாக நிறுத்த முயன்று ஒரு கட்டுரை எழுதி இருந்தார். இப்போது திராவிட இயக்கங்கள் உங்களுக்குச் சொல்ல விரும்பாத 10 விசயங்கள் என்று ஒரு கட்டுரையை எழுதியுள்ளார். அதில் வழக்கம் போல அங்கொன்று இங்கொன்றாய் அரைகுறை கருத்துக்களை மேற்கோள்காட்டி பித்தலாட்டப் பிரச்சாரம் பண்ணுவார் என்று பார்த்தால் ம.வெங்கடேசன் என்பவர் எழுதிய ’ஈ.வே.ராமசாமி நாயக்கரின் மறுபக்கம்’ என்ற புத்தகமாம் அதைக் கொண்டு இதை எழுதியிருக்கிறாராம். இந்த வெங்கடேசன் என்பவர் பெரியாரைப் பற்றியும், சுய மரியாதை பிரச்சார இயக்க நிறுவனம் வெளியிட்டுள்ள 90% நூல்களைப் படித்து எழுதியுள்ளளேன் என்று முன்னுரையில் கூறிக் கொண்டு பெரியாரின் பெயரையே ‘ஈ.வே.ராமசாமி’ என்ற தவறாக எழுதியவர். அப்பிடியானால் அவரின் ஆராய்ச்சி எப்பிடி இருக்கும் என்பதை நீங்களே முடிவு செய்து கொள்ளுங்கள்.

Periyar

திராவிட இயக்கங்கள் சொல்ல விரும்பாத ஆனால் அரவிந்த நீலகண்டன் சொல்ல விரும்பும் அந்த 10 உண்மைகள் இதுவே :

1. ஈ.வெ.ரா நாஜிய பாணி பார்ப்பன எதிர்ப்பைக் கடை பிடித்தார்.

வழக்கமாக பி.ஏ.கிருஷ்ணன்தான் இதைச் சொல்லுவார்.  இப்போது அ.நீலகண்டன் சொல்கிறார். பெரியார் பார்ப்பனர்களை இந்த நாட்டை விட்டே வெளியே துரத்தச் சொன்னார், வீடுகளைக் கொளுத்தச் சொன்னார், ஆட்களையேக் கொளுத்தச் சொன்னார் என்று அடித்து விடுகிறார். அதுவாவது பராவயில்லை, பெரியார் பார்ப்பனர்களை திராவிடர் கழகத்தில் சேர்க்கக் கூடாது என்று சொன்னதையும் விமர்சிக்கிறார். எத்தனை பார்பனர்கள் திராவிடர் கழகத்தில் சேர்வதற்காக காத்துக் கொண்டிருக்கிறார்கள் எனத் தெரியவில்லை.

பெரியார் வன்முறையை என்றுமே ஆதரித்தத்தில்லை. போராட்டம் அறிவிக்கும் போதே போலீசாரிடம் எதிர்ப்பு காட்டக் கூடாது, அடித்தால் வாங்கிக் கொண்டு பேசாமல் இருக்க வேண்டும் என்பார்.

1-1-1962 அன்று பார்ப்பனத் தோழர்களுக்கு ! என்று ஒரு அறிக்கையை எழுதுகிறார். அதில் பார்ப்பனப் பிரமுகர்கள் – பெரியோர்கள் ஆகியோர்களுக்கு அன்பனாகவும், மதிப்புக்குரியவனாகாவும் நண்பனாகவும் கூட இருந்து வருகிறேன். தேர்தலுக்குப் பிறகு அரசியல் திட்டம் எதுவாயிருந்தாலும் – சமுதாயத் திட்டம் என்பது பார்ப்பனர் வெறுப்புத் திட்டங்களாகத்தான் இருக்கும். எனக்கு சமுதாயத் துறையில் பார்ப்பனர்களைத் தவிர வேறு யாரும் எதிர்களல்லர். பார்ப்பனர்கள், நான் இப்பிடியெல்லாம் கூறுவதை, ஏதோ மிரட்டுகிறேன் என்பதாகக் கருதி விடக் கூடாது. இந்த நாட்டுச் சமுதாய நலனுக்கும், நாகரிக வளர்ச்சிக்கும் பார்ப்பனர்களுடைய ஆதரவு, ஒத்துழைப்பு இருந்தால் வேகத்தில் நலம் பெறலாம் என்கிற எண்ணத்தில் இவைகளைச் சொல்கிறேனே தவிர, வேறு இதில் சூழ்ச்சியோ, தந்திரமோ, மிரட்டுதலோ இல்லை; கண்டிப்பாக இல்லை. நான் இவைகளை உபயோகப்படுத்துவதில் வெட்கப்படுகிறவன். !

Parpan1Parpan2

பார்ப்பனரும், தி.க.வும் என்ற அறிக்கையில் (விடுதலை 8-1-1953) தெளிவாகச் சொல்கிறார்:
யாரோ சில பிராமணர்கள், “பெரியார் ராமசாமி நாயக்கர், பிராமணர்கள் இந்த நாட்டில் வாழவே கூடாது என்று கூறி வருகிறார். இவரை நீங்கள் எப்பிடி இங்கே கூப்பிட்டீர்கள் என்பதாகக் கேட்டார்கள் என்று ஒருவர் சொன்னார். பிராமணர்கள் இந்த நாட்டில் வாழக் கூடாது என்றோ, இருக்கக் கூடாது என்றோ திராவிடர் கழகம் வேலை செய்யவில்லை. திராவிடர் கழகத்தின் திட்டமும் அதுவல்ல. திராவிடர் கழகத்தினுடைய திட்டமெல்லாம், திராவிடர் கழகமும் நானும் சொல்வதெல்லாம், விரும்புவது எல்லாம்- நாங்களும் கொஞ்சம் வாழ வேண்டும் என்பதுதான். இது பிராமணர்கள் இங்கு வாழக் கூடாது என்று சொன்னதாகவோ, இந்த நாட்டைவிட்டு அவர்கள் போய்விட வேண்டுமென்று சொன்னதாகவோ அர்த்தம் ஆகாது. அவர்களைப் போகச் சொல்லவேண்டிய அவசியமில்லை. அது ஆகிற காரியம் என்று நான் கருதவுமில்லை.

அ.நீலகண்டன் சொல்வது போல பெரியார் பார்ப்பனர்களை நாட்டை விட்டே வெளியேற வேண்டும் என்று சொன்னார் என்பது பச்சைப் பொய் என்பதைப் பார்த்து விட்டோம். வீட்டைக் கொளுத்தச் சொன்னார் என்கிறார்.

பெரியார் காலத்திலும் இந்தப் புரளி இருந்தது. அவர் இது போல பேசி வன்முறையைத் தூண்டி விடுகிறார் என்று.  தஞ்சையில் ஜாதி ஒழிப்பு மாநாடு நடக்கிறது. அதில் 03-11-1957 அன்று பெரியார் பேசியதைத்தான் இப்பிடித் திரிக்கிறார்கள். இந்த மாநாடு நடப்பதற்கு சற்று முன்னர்தான் இராமநாதபுரம் மாவட்டம், முதுகுளத்தூரில் மிகப் பெரிய கலவரம் நடந்திருந்தது. இம்மானுவேல் சேகரன் கொல்லப்பட்டார் மற்றும் 2,735 தாழ்த்தப்பட்ட மக்களின் வீடுகள் தீக்கிரையாக்கபட்டன. இதைக் காட்டி பெரியார் பேசுகிறார்.

குத்தாமலும், வெட்டாமலும், கொல்லாமலும், நெருப்புவச்சி கொளுத்தாமலும் காரியம் சாதிக்க முடியாதுன்னு இருந்தால் எந்த மடையன் சும்மாயிருப்பான்? உண்மையிலேயே நான் சொல்லுகிறேன். நீங்களே சொல்லுங்கள் தயவு செய்து ஒரு ஆயிரம் பார்ப்பனர்களையாவது கொன்னு ஒரு இரண்டாயிரம் வீடுகளையாவது நெருப்பு வைச்சிக் கொளுத்தி, ஒரு நூறு பேரையாவது நெருப்பிலே தூக்கிப் போட்டால் ஒழிய சாதி போகாது என்கிற நிலைமை இருந்தால் நீங்கள் என்ன பண்ணுவீங்க? பாப்பானைக் கொன்னாத்தான் ஜாதி போகும். அக்ரகாரத்திலே நெருப்பு வச்சாதான் ஜாதி போகும். நெருப்பை வைச்சி கொளுத்தி பாப்பானை தூக்கி அதனுக்குள்ளே போட்டால் தான் ஜாதி போகும். அப்படீங்கிற தீர்மானமான ஒரு நிலை இருக்குமானால் நீங்க என்ன பண்ணுவீங்க? அட பயித்தியமே நான்தானா சொல்லுகிறேன். கொளுத்துவோம், வெட்டுவோம், கொல்லுவோம் என ?? நான் ஒருத்தனா அப்படிச் சொல்லுகிறேன். அதுக்காகத்தான் நான் சொல்லுகிறேன். இன்னைக்கு போயி குத்தவேண்டாம். நெருப்பு வைக்கவேண்டாம். நாளைக்கு போயிப் பார்ப்பானைத் தூக்கி நெருப்பிலே போடாதீங்க. ஆனால் நான் ஏன் தேவடியாள் மகன்? எங்க பொம்பளைங்க ஏன் வைப்பாட்டிங்க பாப்பானுக்கு? நாம் ஏன் சூத்திரன்? நான் ஏன் பஞ்சமன்? எதற்காக அப்படி இருக்கவேணும்? என்ன அவசியம் அப்படி? என்ன எங்க வாழ்விலே அவ்வளவு கேவலமான காரியம்? நாங்கள் என்ன பேடிகளா? நாங்கள் என்னா ஊரார் உழைப்பிலே வயிறு வளர்க்கிறவங்களா? மக்களை ஏமாற்றிப் பிழைக்கிறவங்களா? இல்லே வேறெ குச்சிக்காரித்தனம் பண்ணிக்கிட்டு இருக்கிறவங்களா? என்ன தப்பு எங்களிடத்திலே? ஏன் நாங்கள் கீழ் ஜாதி? இதற்கு ஒரு பரிகாரம் வேணுமின்னா அவன் குத்துறேன்னா? வெட்றேன்னா? காரணம் என்ன? குத்தாதே வெட்டாதே இருக்கிற தப்பு இந்த பசங்களுக்கு இப்படி சத்தம் போடச் சொல்லுவது? குத்தினால் அந்தப்பயல் என்னா பண்ணிடுவான்?வெட்டினால் அந்த பயல் என்ன பண்ணிடுவான்? நேற்று முதுகுளத்தூரிலே. (100) நூறு பேரை வெட்டி கொன்னு நெருப்பிலே போட்டு 2000 வீட்டை நெருப்பிலே வைச்சி கொளுத்தினாங்களே என்னா பண்ணிட்டான் எவனும்? என்ன பண்ண முடிஞ்சிது? யாரோ ஒரு நாலு பேரை ஜெயிலிலேயே பத்து நாளைக்கு போட்டு சோறு போடுகிறான், அப்புறம் வீட்டுக்கு போன்னிடுறான். எரிஞ்ச வீடு என்னாகிறது? செத்த ஆளுஎன்னா? என்ன அதிசயமான காரியம் இது? எடுத்தா குத்துறேன்னான், வெட்றேன்னான்னு, இதெல்லாம் யார்ரா சொன்னார்? எப்ப சொன்னான்? எந்த மாதிரி சொன்னார்? அந்த யோக்கியப் பொறுப்பே இல்லை இந்த பசங்களுக்கு? மந்திரி சொல்லிட்டாரு. பச்சையாய் என்னா சொன்னார் மந்திரியைப் பார்த்தாங்க, ராமசாமி இந்த மாதிரிக் குத்துறேன்னு சொன்னானே கேள்வி இல்லையான்னு, அதற்கு மந்திரி எப்படி சொன்னான்? எங்கடா சொன்னான்? கொண்டாடா கடிதாசின்னார், எல்லாபயலும் உருவிக்கிட்டு ஓடிட்டான். ஒரு பயல் கூட எதுக்காலே வரலே, பேப்பரிலே வந்திருக்குதே – அதற்கு என்னா சொல்றேன்னான்? எம் பேப்பரையும் பார்த்துக்கிறேன்னாரு – (காமராசர்). அவன் மாதம் 200 ரூபாய் கொடுத்து சி.அய்.டி. வைச்சி எழுதிக்கிட்டு போறான் வருகிறான் – அடிக்கடி என் கூட்டத்துக்கு. அவன் – அந்த சி.அய்.டி ரிப்போர்ட்டிலே இல்லையேன்னாரு, அன்னைக்கு ஓடின பசங்க இன்னைக்கும் வரலே என மக்கள் குரல் இவ்வளவு அயோக்கியத்தனமாய் காரியங்களை செய்கிறாங்க.

இன்றைய தினம் எல்லாப் பார்ப்பனப் பத்திரிக்கைகளும் கட்டுப்பாடாக, நான் பார்ப்பனரை வெட்டச் சொன்னேன், குத்தச் சொன்னேன் என்று கூப்பாடு போடுகின்றன! எந்தப் பார்ப்பானிடம் எனக்கு விரோதம்? யார்மீது துவேஷம்? நேற்று எனக்கு நடைபெற்ற விழாவுக்குப் பார்ப்பனர் பணம் கொடுத்திருக்கிறார்கள். அவர்கள் கொடுத்த ‘செக்’ என்னிடம் இருக்கிறது. ஏன் இதைச் சொல்லுகிறேன் என்றால், எனக்குத் தனிப்பட்ட முறையில்யார்மீதும் துவேஷம் இல்லை என்பதைக் காட்டவே! நான் ஏன் ஒரு கூட்டமே ஒழிய வேண்டுமென்று சொல்லுகிறேன்?  நம் சமுதாயத்திற்கே களை மாதிரி இருந்துகொண்டு வளரவொட்டாமல் செய்கிறது – அந்தக்கூட்டம். வெட்டுகிறேன் என்று சொன்னேன். குத்துகிறேன் என்று சொன்னேன் என்று புச்சாண்டி காட்டுகின்றனர். அப்படிச் சொல்லுவதன்மூலம் அந்த நாளையே அவர்கள் விரிவுபடுத்துகின்றனர்.

‘காந்தியார் படத்தை எரித்தால் தலைகள் உருளும். இரத்த ஆறு ஓடும், அதற்கு 20,000 பேர் தயார்’ என்று சொன்னார்களே, அவர்களை நீ என்ன செய்தாய்? நான் சொல்லுகிறேன் – ‘சாதி ஒழியாவிட்டால் இரத்த ஆறு ஓடும்’ என்று . ‘சாதி இருக்கத்தான் வேண்டும்’ என்று நீ சொல்லேன்! இந்த மாதிரிக் கூப்பாடு போட்டால் அரசாங்கம் பிடித்து எங்களை ஜெயிலில் போடும், நாங்கள் பயந்துகொள்வோம் என்பது பார்ப்பனர்கள் நினைப்பு.இது யாரிடம் பலிக்கும்? நான்தான் உயிரைவிடத் தயாராயிருக்கிறேனே! என்னுடைய தொண்டர்களும் தயாராயிருக்கிறார்களே! – (விடுதலை – 16.11.1957)

இதான் பெரியார் பேச்சு நடை. அது அண்ணா/கருணாநிதி போல்! ஆற்றொழுக்க, இலக்கிய, வசன நடை அல்ல.. அது கேள்வி, பதில், Ifs & Buts என  கலந்து கலந்து பேசுவது! But ஐ மட்டும் பிடிச்சிக்கிட்டு, If ஐ ‘நைசா’ விட்டுட்டா பெரியார் பேசியதைத் திரித்துப் பேசிவிட முடியும் என நம்புகிறார் அ.நீலகண்டன்.

பார்ப்பனர்களை நாட்டை விட்டுத் துரத்தச் சொல்லவில்லை, கொளுத்தச் சொல்லவில்லை என்பதை நிறுவி விட்டோம். எந்த விதமான நாஜிய இனவெறியும் இல்லை என்பதும் புரியும். ஹிட்லரின் இனவெறி என்பது யூதர்களின் மீதானா பகைமை மட்டும்மல்ல தன்னுடைய ஆரிய இனமே மிகவும் சிறந்தது (Aryan Superiority race/Master race) என நம்பியதும் இன வெறிதான் !

தாங்களே கடவுள் ; எங்களையே வணங்க வேண்டும் என்று வேதம் எழுதி வைத்த புண்ணியவான்களே இந்த பார்ப்பனர்கள் என்பதை மறக்க முடியுமா?

தெய்வாதீனம் ஜகத் சர்வம்
மந்த்ராதீனம் துதெய்வதம்
தன்மந்த்ரம் பிரம்மணாதீனம்
தஸ்மத் பிரம்மணம் பிரபு ஜெயத்.

இந்த உலகம் கடவுளுக்குக் கட்டுப்பட்டது. கடவுள் மந்திரங்களுக்குக் கட்டுப்பட்டவர்; மந்திரங்கள் பிராமணர்களுக்குக் கட்டுப்பட்டவை எனவே பிராமணனே கடவுள்! அவனைத் தொழ வேண்டும். -ரிக் – 62 ஆவது பிரிவு 10ஆவது சுலோகம்

அது ஏதோ 1000 ஆண்டுகளுக்கு முன்னே எழுதியது என்று சாக்குச் சொன்னால் இதோ இன்னொரு எடுத்துக்காட்டு.

1927-ஆம் ஆண்டு தஞ்சாவூரில் “அகில இந்திய பிராமண சம்மேளனம்” என்ற பெயரில் இயங்கி வந்த ஒரு பார்ப்பன இயக்கம் ஒரு தீர்மானத்தைப் போட்டது. அது என்னவென்றால் “இத்தேசத்தில் இந்துக்களில் பார்ப்பனர்கள் தவிர மற்றவர்கள் அனைவரும் சூத்திரர்கள்.” தாங்கள் மட்டுமே உயர் சாதியினர் மற்றவர்கள் தமக்கு ஏவல் செய்து பிழைக்கும் சூத்திரர்கள் என தீர்மானமே போடக் கூடிய அளவிற்கு இன வெறி இருக்கும் ஒரு கும்பலை வேண்டுமானால் பார்ப்பன நாஜி கும்பல் என அழைக்கலாம். !

soothiran.JPG

2. ஈ.வெ.ராவை பெண் விடுதலைப் போராளி எனக் கூறுவது பிரச்சாரத்திற்காகச் சொல்லப்படும் பொய்.

பெரியாரின் காலத்தில் அவரைப் போல பெண்ணுரிமை பேசி, அதைச் செயல் படுத்திக் காட்டியவர்கள் வேறு யார்? அ. நீலகண்டன் பெரியார் பெண்ணுரிமைப் போராளி என்பதற்கு எந்த விதமான தரவும் இல்லை என்கிறார். சாரதா சட்டம் கொண்டு வந்து போது அதை அம்பேத்கரும், காந்தியும் ஆதரித்தார்கள் என்கிறார். இவர்கள் இரண்டும் பெயர்களையும் சொல்லிவிட்டு பெரியார் பெயரைச் சொல்லாததன் மூலம் பெரியார் அதை எதிர்த்தார் என்கிற பிம்பத்தை கொண்டு வர முயலுகிறார் போலும்.

ஆம். ஹாபிலாஸ் சார்தா முன் மொழிந்த குழந்தைத் திருமணத் தடுப்புச் சட்டமே சார்தா சட்டம். அதுவே சாரதாச் சட்டம் எனத் தமிழில் ஆகிவிட்டது. அம்பேத்கர் , காந்தி ஆதரித்தது பற்றி அறிந்த அ. நீலகண்டன் பார்ப்பனரான திலகரின் நிலைப்பாடு என்னவாக இருந்தது எனச் சொல்லவில்லை. “இந்து மதத்தின் அடிப்படைக் கூறுகளில் எல்லாம் கைவைப்பதற்கு வெள்ளைக்காரர்களுக்கு எந்த உரிமையும் இல்லை” என்று முழங்கினார் திலகர்.

இதற்கு முன்பே 1913இல் அதே மாதிரியான இன்னொரு சட்ட முன்வடிவை அரசு கொண்டுவந்தது. அப்போதும் ஆச்சார்யா போன்ற பார்ப்பனர்கள் சட்டமன்றத்திலேயே கடுமையாக எதிர்த்தனர். ‘பூப்படையாத பெண்களுக்குத் திருமணம் செய்தால் சிறைத் தண்டனை என்கிறது உங்கள் அரசு. பூப்படைவதற்குள் திருமணம் செய்யவில்லை நரகத்திற்குப் போவீர்கள் என்கிறது எங்கள் இந்து மதம். நாங்கள் என்ன செய்வது?’என்றார் ஆச்சார்யா. இவ்வளவுதான் பார்ப்பனர்களின் பெண்ணுரிமை போராட்ட வரலாறு.

childmarriage.JPG

1920களில் நீதிக்கட்சி ஆட்சிக்கு வந்தது. 1926இல் சுயமரியாதை இயக்கம் தந்தை பெரியாரால் தோற்றுவிக்கப்பட்டு பெண்ணுரிமைப் போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்ட பின்பு நிலவிய சூழலைக் கண்டே 1929இல் அச்சட்ட முன்வடிவை ஹாபிலாஸ் சார்தா என்னும் ஆங்கிலேயர் முன் மொழிந்தார்.

இச்சட்டம் நடைமுறைக்கு வரும் முன்னரே பெண்ணுரிமைப் போராட்டங்களை முன்னெடுத்து விட்டார் பெரியார். 1928 ஆம் ஆண்டு துவக்கத்திலேயே கற்பு என்ற பெயரில் பெண்களை அடிமைப்படுத்துவதைக் கண்டித்து எழுத ஆரம்பித்து விட்டார்.

“கற்பு என்கின்ற வார்த்தையானது மனித சமூகத்தில் சரிபகுதியான எண்ணிக்கையுள்ள பெண்களை அடிமைப்படுத்தி வைப்பதற்காக மாத்திரமே உபயோகப்படுத்தப்பட்டு வருகின்றது என்கின்ற தத்துவத்தின் மேல் இதை எழுதுகின்றேன்.”  – (குடி அரசு – 08.01.1928)

ஓர் ஆணுக்கு ஒரு சமையல்காரி – ஓர் ஆணின் வீட்டிற்கு ஒரு வீட்டுக்காரி – ஓர் ஆணின் குடும்பப் பெருக்கிற்குப் பிள்ளை விளைவிக்கும் ஒரு பண்ணை – ஓர் ஆணின் கண் அழகிற்கு ஓர் அழகிய – அலங்கரிக்கப்பட்ட பொம்மை என்பதல்லாமல் பெண்கள் பெரிதும் எதற்குப் பயன்படுகிறார்கள்? பயன்படுத்தப்படுகிறார்கள் என்பதைச் சிந்தித்துப் பாருங்கள். – குடி அரசு 21.7.46

பெண்மக்கள் அடிமையானது ஆண்மக்களால்தான். ஆண்மையும் பெண் அடிமையும்கடவுளாலேயே ஏற்பட்டதாக எல்லா ஆண்களும் கருதுவதும், பெண்கள் அதை உண்மையென்று பரம்பரையாக நினைத்துக் கொண்டிருப்பதும்தான் பெண் அடிமைத்தனம் வளர்வதற்குக் காரணமாகும். – விடுதலை 14.2.61

திருமணம் செய்வதற்கு முன்பு பொருத்தம் பார்க்கிறார்களே, அதில் ஒரு பெண்ணுக்கும் ஆணுக்கும் சம தோற்றம், சம அன்பு, ஒத்த அறிவு, கல்வி ஒற்றுமை இருக்குமா என்று கருதுவதில்லை. அதற்கு மாறாக, நமது பிள்ளைக்கு அந்தப் பெண் தலைவணங்கிக் கட்டுப்பட்டு நல்ல அடிமையாக இருக்குமா என்ற கருத்தில், மாடுகளை விலைக்கு வாங்குவதற்கு என்னென்ன பொருத்தங்கள் பார்க்கிறோமோ அதையே தான் பெண்கள் பிரச்சினையிலும் பார்க்கிறார்கள். – விடுதலை .5.4.61

பெண்களே! வீரத் தாய்மார்களாக ஆக விருப்பப்படுங்கள். நீங்கள் மாறினால் உங்கள் கணவன்மார்களும் மற்ற ஆண்களும் மாற்றம் அடைவது மிகமிக எளிது. ஆண்கள் உங்களைத்தான் பிற்போக்காளிகள் என்று உங்கள் மீது பழிசுமத்தி வருகிறார்கள். அப்பழிச் சொல்லுக்கு ஆளாகாதீர்கள், எதிர்காலத்தில் “இவள் இன்னாருடைய மனைவி” என்று அழைக்கப்படாமல், “இவன் இன்னாருடைய கணவன்” என்று அழைக்கப்பட வேண்டும். – குடி அரசு 5.6.48

தங்களை நாகரிக நாரீமணிகள் என்று கருதிக் கொள்ளும் பெண்களெல்லாம்கூட நல்ல முறையில் ஆடை அலங்காரம் செய்துகொள்வதையும், நைசான நகைகள் போட்டுக்கொள்வதையும் சொகுசாகப் பவுடர் பூசிக் கொள்வதையும் தான் நாகரிகம் என்று கருதி வருகிறார்களே தவிர-ஆண்களுக்குச் சரிநிகர் சமானமாக வாழ்வதுதான் நாகரிகம் என்பதை உணர்ந்திருக்கவில்லை. – விடுதலை – 11.10.48

சாதாரணமாக, ஆரம்ப ஆசிரியர்கள் என்ற பெயரை யாருக்கு உபயோகப்படுத்தலாமென்றால் முதலில் நமது பெண்மக்களுக்குத்தான் உபயோகப்படுத்தலாம். ஏனெனில் நமது குழந்தைகளுக்கு ஆரம்ப ஆசிரியர்கள் அவர்களுடைய தாய்மார்களே. அக் குழந்தைகளுக்கு 6,7 வயது வரையில் தாய்மார்களேதான் ஆசிரியர்களாக இருக்கிறார்கள்.- குடி அரசு 1.5.27

பெண்களுக்குப் பகுத்தறிவுக் கல்வியும், உலக நடப்புக் கல்வியும், தாராளமாகக் கொடுத்து, மூட நம்பிக்கை, பயம் ஆகியவற்றை ஊட்டக்கூடிய கதைகளையோ, சாத்திரங்களையோ, இலக்கியங்களையோ காணவும் கேட்கவும் சிறிதும் இடமில்லாமல் செய்ய வேண்டும். – விடுதலை 22.3.43

பெண்ணடிமை என்பதற்குள்ள காரணங்கள் பலவற்றுள்ளும் சொத்துரிமை இல்லாதது ஒன்றே மிகவும் முக்கியமானதாகும். – பெரியார் ஈ.வெ.ரா சிந்தனைகள்

“கற்பு என்பதற்கு பதிவிரதம் என்று எழுதிவிட்டதின் பலனாலும் பெண்களை விட ஆண்கள் உடல் வலி கொண்டவர்களானதினாலும் பெண்கள் அடிமையாவதற்கும் புருஷர்கள் மூர்க்கர்களாகி கற்பு என்பது தங்களுக்கு இல்லையென்று நினைப்பதற்கும் அனுகூலம் ஏற்பட்டதே தவிர வேறில்லை.” – (குடி அரசு – 08.01.1928)

“தவிர, புருஷர்கள் கற்புடையவர்கள் என்று குறிக்க நமது பாஷை களில் தனி வார்த்தைகளே காணாமல் மறைபட்டுக் கிடப்பதற்கும் காரணம் ஆண்களின் ஆதிக்கமே தவிர வேறில்லை.” – (குடி அரசு – 08.01.1928)

பெண்ணுரிமை பேசும் போது அவர் மதம் கடந்து பேசினார் என்பதையும் பார்க்க இயலும்.

“துருக்கி நாட்டிலும் மகமதிய சமூகத்திலும் படுதா என்றும், கோஷா என்றும் அதாவது பெண்கள் அறைக்குள் இருக்க வேண்டியவர்கள் என்றும், முகத்தை மூடிக் கொண்டு வெளியில் போக வேண்டியவர்கள் என்றும் ஏற்படுத்தப்பட்ட கொள்கையும், புருஷன் பல பெண்களை மணக்கலாம், பெண்கள் ஏக காலத்தில் ஒரு புருஷனுக்கு மேல் கட்டிக் கொண்டு வாழக் கூடாது என்ற கொள்கையும், நம்நாட்டில் ஒருதடவை புருஷன் பெண் சாதி என்கின்ற சொந்தம் ஏற்பட்டுவிட்டால் அந்தப் பெண்ணுக்கு சாகும் வரைக்கும் வேறு எவ்வித சுதந்திரமும் இல்லை என்றும், புருஷன் பல பெண்களை கட்டிக் கொண்டு அப்பெண்ணின் முன்பாகவே ஒவ்வொரு பெண்ணுடனும் கூடி வாழலாம் என்றும், புருடன் தான் கொண்ட பெண் ணைத் தன்னுடன் இருத்தி வாழவிடாமலும் கூட புருடனை சாப்பாட்டிற்கு மாத்திரம் கேட்கலாமே யொழிய இன்பத்திற்கோ, காதலுக்கோ கட்டுப்படுத்த உரிமை இல்லை என்றும் கட்டுப்பாடு வழங்கப்பட்டு வருகின்றது.” – (குடி அரசு – 08.01.1928)

“பெண்கள் உண்மை விடுதலையடைய வேண்டுமானால் “ஆண்மை” அழிய வேண்டும்” என்கின்ற கட்டுரையில் பெண்களே பெண் விடுதலையைப் பெற முடியும் என்கிறார்.
“பெண்களுக்கு மதிப்புக் கொடுப்பதாகவும் பெண்கள் விடுதலைக்காக பாடுபடுவதாகவும் ஆண்கள் காட்டிக்கொள்வதெல்லாம் பெண்களை ஏமாற்றுவதற்குச் செய்யும் சூழ்ச்சியே ஒழிய வேறல்ல. எங்காவது பூனைகளால் எலிக்கு விடுதலை உண்டாகுமா? எங்காவது நரிகளால் ஆடு கோழிகளுக்கு விடுதலை உண்டாகுமா? எங்காவது முதலாளிகளால் தொழிலாளிகளுக்கு விடுதலை உண்டாகுமா? எங்காவது வெள்ளைக்காரர்களால் இந்தியர் களுக்கு செல்வம் பெருகுமா? எங்காவது பார்ப்பனர்களால் பார்ப்பனரல் லாதார்களுக்குச் சமத்துவம் கிடைக்குமா? என்பதை யோசித்தால் இதன் உண்மை விளங்கும். அப்படி ஒருக்கால் ஏதாவது ஒரு சமயம் ³ விஷயங்களில் விடுதலை உண்டாய் விட்டாலுங் கூட ஆண்களால் பெண்களுக்கு விடுதலை கிடைக்கவே கிடைக்காது என்பதை மாத்திரம் உறுதியாய் நம்பலாம். ஏனெனில் ஆண்மை என்னும் பதமே பெண்களை இழிவுபடுத்தும் முறையில் உலக வழக்கில் உபயோகப்படுத்தப்பட்டு வருகின்றது என்பதைப் பெண்கள் மறந்துவிடக் கூடாது அந்த ஆண்மை உலகில் உள்ள வரையிலும் பெண்மைக்கு மதிப்பு இல்லை யென்பதைப் பெண்கள் ஞாபகத்தில் வைத்துக் கொள்ள வேண்டும். உலகத்தில் “ஆண்மை” நிற்கும் வரையில் பெண்கள் அடிமையும் வளர்ந்தே வரும். பெண்களால் “ஆண்மை” என்ற தத்துவம் அழிக்கபட்டாலல்லாது பெண்மை விடுதலை யில்லை யென்பது உறுதி. “ஆண்மை”யால்தான் பெண்கள்அடிமையாக்கப்பட்டிருக்கின்றார்கள்.”  – குடி அரசு – 12.08.1928

பெரியார் பேசியதோடு நிற்கவில்லை. நிகழ்த்தியும் காட்டினார். அவரின் தங்கை மகளுக்கு விதவை மறுமணம் செய்து வைத்தார். தன்னோடு இருந்த தோழர்களை சாதி மறுப்பு மணம் செய்யச் சொன்னார்.

பெரியார் காலத்தில் வாழ்ந்த சீர்திருத்தவாதிகள், சதி என்னும் உடன்கட்டை எதிர்ப்பு, விதவை மறுமணம், குழந்தை மண எதிர்ப்பு ஆகியவற்றை வலியுறுத்தக்கூடியவர்களாக மட்டுமே இருந்தனர். திருமணம் என்கிற அமைப்புக்கு வெளியே பெண்கள் தனித்து வாழ்வது, பாலியல் தொழிலில் ஈடுபடும் பெண்களுக்கான உரிமைகள் ஆகியவை குறித்து நவீனப் பெண்ணிய உருவாக்கத்தை ஒட்டி சமீபகாலமாகத்தான் பேச்சு உருவாகியிருக்கிறது. ஆனால், 1928 செங்கல்பட்டு ‘முதல் சுயமரியாதை மாகாண’ அழைப்பிலேயே, ‘தனியாக வாழும் பெண்கள், விதவைகள், விபச்சாரிகள் என்று தம்மைக் கருதிக்கொள்வோர் சிறப்பாக இந்த மாநாட்டில் பங்கேற்க வேண்டும்’ என்று பெரியார் எழுதினார். வெறுமனே சொல்லளவில் நின்றுவிடாமல் தனது வீட்டிலேயே பெண்களுக்கான முறைசாரா அமைப்பு ஒன்றையும் ஏற்படுத்தி, அதில் பெண்கள் தங்கள் பிரச்னைகள் குறித்துப் பேசுவதற்கும் வசதிசெய்து தந்தார். வீட்டைவிட்டு வெளியேறும் பெண்கள், அநாதரவான பெண்கள் தங்குவதற்காக ஒரு விடுதியையும் நடத்தியிருக்கிறார் பெரியார்.

1stmaanaadu

மூன்றாவது தஞ்சை மாவட்ட சுயமரியாதை மாநாட்டில், 22 வயதான சின்னராயம்மாள் என்ற பெண்ணின் சார்பாக ஒரு கோரிக்கை முன்வைக்கப் பட்டது. விடுதியில் இடம் கேட்டு வைக்கப்பட்ட கோரிக்கை அது. 50 வயதான ஓர் ஆணுக்கு மூன்றாம் தாரமாக வலுக்கட்டாயமாகத் திருமணம் செய்யப்பட்டிருந்தார் சின்னராயம்மாள். ‘குழந்தை வேண்டும்’ என்று அவரது கணவர் கட்டாய உறவுகொள்ள முயன்றபோது, சின்னராயம்மாள் வீட்டைவிட்டு வெளியேறி, பெரியார் நடத்திய விடுதியில் குடிபுகுந்தார்.

1930-களில் கருத்தடை பற்றிய கட்டுரைகளைக் ‘குடியரசு’ இதழ் தொடர்ச்சியாக வெளியிட்டது. அதை வெறுமனே மக்கள் தொகைக் கட்டுப்பாடு என்ற கண்ணோட்டத்தில் அல்லாது, குழந்தை பெற்றுக்கொள்வது பெண்களின் தனிப்பட்ட உரிமை என்ற கண்ணோட்டத்தில் சுயமரியாதை இயக்கம் அணுகியது.

காத்ரின் மேயோ எழுதிய ‘பாரத மாதா’ என்ற புத்தகம் இந்தியப் பெண்களின் அவலநிலை குறித்து அம்பலப்படுத்தியதால், அது இந்தியர்களை இழிவுபடுத்துவதாகத் தேசியவாதிகள் எதிர்த்தனர். ஆனால், அதை மொழிபெயர்த்து ‘குடியரசு’ தொடராக வெளியிட்டது.

சோவியத் ரஷ்யாவில் பெண்களின் நிலை குறித்த கட்டுரைகள் தமிழில் மொழிபெயர்க்கப்பட்டு வெளியிடப்பட்டன. ‘துருக்கிப் பெண்கள்’ விடுதலை குறித்து ஹாவிட் ஹானும் என்பவர் ஆற்றிய உரை வெளியிடப்பட்டது. தொடர்ச்சியாக நவீனச் சிந்தனைகளும் பெண்ணியச் சிந்தனைகளும் அயல்நாடுகளில் பேசப்படும்போது, சாத்தியப்பட்டவரை அதை மொழிபெயர்த்து, ‘குடியரசு’ இதழ் வெளியிட்டு விவாதித்தது. ‘ஆண் – பெண் வித்தியாசம்’ குறித்து 1935-ல் நாகை முருகேசன் என்பவர் எழுதிய கட்டுரை ஒன்றில் ஏங்கெல்ஸ் தொடங்கி பாகோபென், ஹூம்போல்ட் ஆகிய மானுடவியலாளர்களின் ஆய்வுகள் மேற்கோள் காட்டப்பட்டுள்ளன.

பெண்ணுரிமை என வரும் மதங்களைத் தாண்டிய பார்வை இருந்தது பெரியாரிடம். இஸ்லாமியர்கள் பால்ய விவாகத் தடுப்புச் சட்ட மசோதாவை எதிர்த்த போது அவர்களைக் கண்டித்தார். ‘முஸ்லீம் பெண்களும் அடிமைகளேதான்’, ‘பர்தாவின் கொடுமை’, ‘கத்தோலிக்க மதமும் பெண்களும்’ போன்ற கட்டுரைகளை எழுதி இஸ்லாமிய, கிருத்துவப் பெண்களின் உரிமைக்கும் குரல் கொடுத்தார்.

childmarriagemusling

1928-இல் சென்னையில் தந்தை பெரியார் தலைமையில் நடைபெற்ற தென்னிந்திய சீர்திருத்தக்காரர்கள் மாநாட்டில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் 80 ஆண்டுகளுக்கு முன்பே இத்திசையில் அவர்தம் சிந்தனைகளைத் தீர்மானிக்கப் பெரிதும் உதவுகின்றன.

1) மக்கள் பிறவியிலும் ஆண், பெண் என்ற தன்மையிலும் உள்ள உயர்வு தாழ்வு என்கின்ற வித்தியாசங்கள் கண்டிப்பாய் ஒழிக்கப்பட வேண்டுமென்று இம்மாநாடு தீர்மானிக்கிறது.

அ) குடும்பச் சொத்தில் பெண்களுக்கு ஆண்களைப் போலவே சம உரிமை அளிக்கப்பட வேண்டுமென்று இம்மாநாடு தீர்மானிக்கிறது.

ஆ) புருஷன் மரணமடைந்துவிட்டால் அவன் சொத்து முழுமையும் பெண் சாதிக்கு சர்வ சுதந்திரமாய் அனுபவித்துக் கொள்ள உரிமை அளிக்கப்பட வேண்டுமென்றும் இம்மாநாடு தீர்மானிக்கிறது.

இ) பாகம் பிரியாத குடும்பங்களில் கணவன் இறந்து போனால் அக்கணவனுக்கு உள்ள சகல உரிமைகளும், சொத்துகளும் அவனது மனைவிக்குச் சர்வ சுதந்திரமாய் அனுபவித்துக் கொள்ள உரிமை அளிக்கப்பட வேண்டும் என்று இம்மாநாடு தீர்மானிக்கிறது.

2) எல்லாப் பொதுப் பள்ளிக்கூடங்களிலும் ஆண் – பெண் என்கின்ற வித்தியாசம் இல்லாமலும், உயர்வு – தாழ்வு என்கின்ற வித்தியாசம் இல்லாமலும் கட்டாயப் படிப்பு கற்றுக் கொடுக்க ஏற்பாடு செய்ய வேண்டும் என்று இம்மாநாடு தீர்மானிக்கிறது. (இத்தீர்மானங்களுள் சில இன்றைக்குச் சட்ட வடிவம் பெற்று விட்டன; சில இன்றைக்கும் சர்ச்சைக்கு இடம் கொடுத்துக் கொண்டும் இருக்கின்றன.)

தேவதாசி ஒழிப்புச் சட்டம் கொண்டு வந்த போது மருத்துவர் முத்துலட்சுமி அவர்களுக்கு பெரியாரின் அறிவுரை ஏதும் தேவையிருக்கவில்லை என்கிறார் அ. நீலகண்டன். உண்மையில் தமிழக அரசே அந்த மசோதாவை பெரியார்க்கு அனுப்பி வைத்து அவரின் கருத்தைக் கேட்டது.

23.03.1930 அன்று குடி அரசில் தேவதாசி ஒழிப்புச் சட்டம் பற்றி பெரியார் எழுதிகிறார். கோயில்களில் பெண்களை பொட்டுக்கட்டுவதைத் தடுக்க சட்டம் செய்யவேணுமாய் திரு. முத்துலக்ஷிமி அம்மாள் அவர்களால் சட்டசபைக்கு அனுப்பப்பட்டிருக்கும் சட்டத்தை சர்க்கார் நமக்கு அனுப்பி அதன் மீது நமது அபிப்பிராயம் கேட்டிருக்கின்றார்கள் என்று தொடங்கும் கட்டுரையை அ. நீலகண்டன் படித்திருக்க மாட்டார் என்றே தெரிகிறது.

அத்தோடு 30.03.1930 அன்று பெரியார் சட்டம் மீதான தன்னுடைய கருத்துக்களையும் அனுப்பி வைத்து அதையும் குடி அரசில் எழுதியிருக்கிறார். அதில் அவர் கூறியிருப்பது.
“மைனர் பெண்களுக்குப் பொட்டுக் கட்டக் கூடாதென்று ஏற்கனவே சட்டம் ஏற்படுத்தி மதவிதிகள் அப்போதே மீறப்பட்டு விட்டது. எனவே இம்மசோதா விஷயத்தில் மதத்துக்கு ஆபத்து என்னும் வாதத்தைக் கிளப்ப இடமே இல்லை. பருவமடைந்த பெண்களுக்குப் பொட்டுக்கட்ட சாஸ்திரங் களில் அனுமதி இல்லை. ஆதலால், சாஸ்திரங்களுக்குப் பயந்து பருவ மடைந்த பெண்கள் பொட்டுக் கட்டைத் தடுக்க சட்டமியற்ற சர்க்கார் பயப் படத் தேவையில்லை. டாக்டர். முத்து லட்சுமி மசோதா விரும்பும் சீர்திருத்தம் இந்து சமூக சுயமரியாதையை உத்தேசித்து எவ்வளவோ காலத்துக்கு முன்னாடியே அமுலில் வந்திருக்க வேண்டும்.”

இறுதியாக இந்த சாரதாச் சட்டத்திற்காக பெரியார் எத்தனை போராடினார் என்பதையும் பார்த்து விடுவோம். பால்ய விவாகத் தடைச் சட்டமாகிய சாரதா சட்டம் தோன்றிய நாள் முதல் அதற்கு உண்டான ஆபத்துக்கள் அளவற்றவை. வைதீகர்கள் அதை ஒழிப்பதற்குச் சூழ்ச்சிகள் பல செய்து கொண்டு வந்தார்கள். காங்கிரஸ்காரர்களின் சட்ட மறுப்பு ஒருபுறம் அச்சட்டத்தை அமல் நடத்தாமல் தடை செய்து கொண்டு வந்தது.  சட்டம் வந்தாலும் குழந்தைத் திருமணங்கள் ஆங்காங்கே நடந்து கொண்டிருந்தன.
இதைக் கண்டித்து பெரியார் தொடர்ந்து எழுதினர், பேசினார்.

1797 – ஆவது கிழக்கிந்திய கம்பெனிச் சட்டத்தில் 12 – ஆவது பிரிவில் “சுதேசிகளின் சமூகப்பழக்க வழக்கங்களுக்குப் பாதகம் ஏற்படாதிருக்கும் பொருட்டு குடும்ப சம்பந்தமாக இந்து, முஸ்லீம் தந்தைகளுக்கும், முதலாளிகளுக்கும் உள்ள உரிமையில் எத்தகைய கோர்ட்டு நடவடிக்கையும் தலையிடக்கூடாது என இச்சட்டம் கட்டளையிடுகிறது என்றும் இருக்கிறது. இந்தப் பழைய துருப்பிடித்தச் சட்டங்கள் தான் இப்பொழுது சாரதா சட்டத்திற்கு ஆபத்தை விளைவித்ததாகும்.
இனி சாரதா சட்டம் பயன்பட வேண்டுமானால் பார்லிமெண்டின் இந்தப் பழைய சட்டங்கள் ரத்தாக வேண்டும். அல்லது சாரதா சட்டத்தில், பழைய சட்டங்களில் உள்ள இவ்விதிகள் செல்லத்தக்கவைகள் அல்லவெனக் குறிப்பிட வேண்டும். சாரதா சட்டத்தை நிறைவேற்றிய ஆரம்பகாலத்திலேயே இதைக் கவனித்திருந்தால் இப்பொழுது இத்தகைய சங்கடம் ஏற்பட இடமிருந்திருக்காது. – குடிஅரசு – 17.04.1932

பெரியார் இப்பிடி தேவதாசி ஒழிப்புச் சட்டத்திற்கும், குழந்தைத் திருமணச் சட்டத்திற்கும் போராடிக் கொண்டிருக்கையில் பார்ப்பனர்கள் என்ன செய்து கொண்டிருந்தார்கள் தெரியுமா?

தஞ்சையில் சனாதனப் பார்ப்பனர்கள் மகாநாடு ஒன்று போட்டு அதில் கீழ்க்கண்ட தீர்மானங்களை நிறைவேற்றினார்கள்.
– சனாதன தர்மத்தை நிலைபெறச் செய்யத்தக்க சுதேசி கைத்தொழில்களை ஆதரிக்க வேண்டும். சனாதன தர்மத்தை பாதுகாக்க ஒரு நிதி திரட்ட வேண்டும்.
– மத சம்பந்தமான சட்டம் செய்வதில் வைசிராயுக்கும் கவர்னர்களுக்கும் பாதுகாப்புகள் இருக்க வேண்டும்.
-அவர்கள் சம்மந்தமில்லாமல் மத சம்பந்தமாக எந்தவித சட்டமும் கொண்டு வரக் கூடாது.
– மத குருக்களின் அபிப்பிராயப்படி சர்க்கார் மத விஷயத்தில் நடக்க வேண்டும்.
– இந்து மதக் கொள்கைகளைப் பிரசாரம் செய்ய வேண்டும்.
இந்து மதப் பெற்றோர்களுக்கு விவாக விஷயத்தில் பூரண அதிகாரமிருப்பதால் சராதா சட்டம் செல்லாது. ஆதலால் அதை ரத்து செய்து விட வேண்டும்.
-பகுத்தறிவு – 06.01.1935

சரி, டாக்டர் முத்துலட்சுமி அவர்கள் சத்திய மூர்த்தியைப் பார்த்து உங்கள் வீட்டுப் பெண்கள் தேவதாசிகளாக மாறி அக்கலையை வளர்க்கட்டும் என்று சொன்னதற்குத் தரவு இல்லை எனச் சொல்லும் அ.நீலகண்டன் சத்தியமூர்த்தி அய்யர் அவர்கள்

தாசிகுலம் தோன்றியது நம்முடைய காலத்தில் அல்ல. வியாசர், பராசரர் காலத்திலிருந்து அந்தக் குலம் வாழ்ந்து கொண்டு வருகிறது. பலருக்கும் இன்பத்தை வாரி வழங்கிக் கொண்டும் வருகிறது. இப்படிக் கூறுவதால் என்னைத் தாசிக் கள்ளன் என்று கூடக் கூறலாம். அதைப் பற்றி நான் கவலைப்படப் போவதில்லை.

சமூகத்திற்கு தாசிகள் தேவை என்பதைத் திரும்பச் செல்ல விரும்பு கிறேன். தாசிகள் கோயில் பணிக்கென்று படைக்கப்பட்டவர்கள். அது சாஸ்திர சம்மதமானது. தாசிகளை ஒழித்துவிட்டால் பரதநாட்டியக் கலை அழிந்து விடும். ஆண்டவன் கட்டளையை மீறுவது அடாத செயலாகும். அநியாயம் ஆகும்!” என்று கதறினாரே அதற்குத் தரவு உண்டே. ஏன் அதைத் தவறு என்று சொல்லவில்லை ??

3. ஈ.வெ.ரா தாழ்த்தப்பட்ட மக்களுக்கு எதிரானவர்.

காலம் காலமாகச் சொல்லப்பட்டு வரும் பொய் இது. இதை எடுத்துக் கொடுத்தவர் ம.வெங்கடேசன் என உறுதியாக நம்பலாம். இதற்கு என்ன தரவுகள் கொடுக்கிறார் அ. நீலகண்டன் என்று பார்த்தால் பெரியாரை சூத்திரர்களின் தலைவராக , இடைச் சாதியினரின் தலைவராகக் காட்ட “இன்று சமுதாயத்தில் பார்ப்பனர், சூத்திரர், பஞ்சமர் என்ற மூன்று பெரும் பிரிவுகள் இருக்கின்றன. இதில் மேல்சாதிக்காரன் என்ற காரணத்தினால் பார்ப்பனனும், கீழ்சாதிக்காரன் என்ற காரணத்தினால் பஞ்சமனும் தங்களுக்கு வேண்டிய சலுகைகள் பெறுகின்றனர். ஆனால், இடையில் இருக்கும் சூத்திரர்கள் சலுகை இல்லாமல் வேதனைப்படுகின்றனர்.” (விடுதலை 16-4-1950) என்று வத்தலக்குண்டில் பெரியார் பேசியதைக் காட்டுகிறார். இதை எதற்கு சொல்கிறார்கள் என்றால் டாக்டர் அம்பேத்கர் தாழ்த்தப்பட்டவர்களுக்கு மட்டும் இட ஒதுக்கீடு சலுகை கொடுத்து விட்டார் என்றும் அதனால் பெரியார் சூத்திரர்களுக்கு இட ஒதுக்கீடு இல்லையென்று பெரியார் எரிச்சல் பட்டாராம்.

1947 அப்போதைய முதல்வர் ஓமாந்தூர் இராமசாமி ரெட்டியார் பிராமணரால்லாத பிற்படுத்தப்பட்ட இந்துக்களைத் தனியாகச் சேர்த்து இட ஒதுக்கீட்டை அறிமுகப்படுத்தினார். நடப்பது காங்கிரஸ் ஆட்சியா ? இல்லை தாடியில்லா இராமசாமி ஆட்சியா எனக் கேட்டு காங்கிரஸ் பார்பனர்கள் எதிர்ப்புத் தெரிவித்தார்கள்.

GO

சம்பகம் துரைசாமி வழக்கில் ஜூன் 1950 அன்று உச்ச நீதி மன்றம் ரத்து செய்யும் வரை இதே வகுப்பு வாரி பிரதிநிதித் துவந்தான் இருந்தது. கவனியுங்கள். அப்போது சாதி வாரி இட ஒதுக்கீடு இல்லை ! வகுப்பு வாரி. இதில் பெரியார் சூத்திரர்களுக்கு சலுகை இல்லை என எரிச்சல் பட எந்த முகாந்திரமும் இல்லை !

டாக்டர் அம்பேத்கர் 1949-50 ஆண்டு கொண்டு வந்த இட ஒதுக்கீடு வேலை வாய்ப்பில் மட்டுமே. அரசியலமைப்பின் 16(4) இதற்கான வழியைச் செய்கிறது.16_4_Reservationஇதில் கவனிக்க வேண்டிய இரு முக்கிய விசயங்கள். 1.Backard Class 2.In the Opinion Of the State. தாழ்த்தப்பட்டோர், பழங்குடியினர், பிற்படுத்தப்பட்டோர் என அனைவரையும் குறித்தது அந்த “பேக்வேர்ட் கிளாஸ் “ என்ற சொல். இது சபையில் விவாதத்திற்கு வந்த போது, யார் அந்த “பேக் வேர்ட் கிளாஸ் ” எனக் கேட்டார்கள் “In the Opinion Of the Government” என்றார் அம்பேத்கார். அதாவது, அரசின் பார்வையில் எந்தச் சமூகம் போதிய பிரதிநிதித்துவம் இல்லாமல் இருக்கிறதோ அச்சமூகத்திற்கு இட ஒதுக்கீடு செய்யலாம் என்றுதான் இச்சட்டம் கூறுகிறது. இதில் பெரியார் ஏன் பஞ்சமர்க்குக் கிடைக்கும் சலுகைகள் சூத்திரர்களுக்குக் கிடைக்கவில்லை என எரிச்சல் பட வேண்டும் ??

பெரியார் தனி இயக்கம் காணும் முன்பே, 1925இல் காரைக்குடியில் நடைபெற்ற மாவட்ட அரசியல் மாநாட்டில் தமிழர்களுக்குச் சாதிமுறை புதிதானது. மனுஸ்மிருதியின் வழியாகத்தான் பார்ப்பனர்களால் தமிழர்கள் மீது சாதிமுறை திணிக்கப் பட்டது. பார்ப்பனர் தவிர்த்த மற்ற அனைவரும் சூத்திரர்தான் என்று பேசினார். இதில் யாரையும் தனித்துப் பார்க்கவில்லை.

பெரியார் சுய மரியாதை இயக்கம் ஆரம்பித்த பின் முதல் சுய மரியாதை மாநாடு 1929-ல் செங்கல்பட்டுவில் நடக்கிறது. அங்கிருந்தே சாதி ஒழிப்பிற்கும் தாழ்த்தப்பட்டோர் நிலைக்கும் குரல் கொடுக்கிறார் பெரியார். செங்கல்பட்டு மாநாட்டு தீர்மானம் ஒன்று:

4(அ) மனிதநேயத்தின் அடிப்படையிலும், தேசிய முன்னேற்றத்திற்குத் தேவை என்ற முறையிலும் தீண்டாமை என்னும் நிறுவனத்தை ஒழிக்கப் பாடுபடுமாறு இம்மாநாடு அழைக்கிறது. எந்த ஒரு மனிதரும் தீண்டத்தகாதவராக, அணுகத்தகாதவராக, பார்க்கத் தகாதவராகக் கருதப்படக் கூடாது. எந்த ஒரு சமூக ரீதியான அல்லது குடியுரிமை ரீதியான பாரபட்சங்கள் எந்த ஒரு குறிப்பிட்ட பிரிவைச் சேர்ந்த மக்கள் மீதும் பிரயோகிக்கக்கூடாது. அனைத்துக் குடிமக்களுக்கும் அனைத்துவிதமான பொதுச்சாலைகள், குளங்கள், கிணறுகள், குடிநீர்க் குழாய்கள், கோவில்கள் மற்றும் மக்கள் கூடும் அனைத்து இடங்களிலும் சம உரிமை உறுதி செய்யப்பட வேண்டும்.

பெரியார், ஐரோப்பியப் பயணத்திலிருந்து திரும்பி வரும் வழியில், இலங்கையில் சில நாட்கள் செலவிட்டார். கொழும்பு ‘ஆதிதிராவிட அபிவிருத்தி சங்கத் தார்’ அளித்த வரவேற்பில் தாழ்த்தப்பட்டோர் முன்னேற வழி என்ன என்று பேசினார் (குடிஅரசு 6.11.1932).

அவ்வரவேற்புக் கூட்டத்திற்குத் தலைமை வகித்துப் பேசிய எஸ்.ஆர். முத்தய்யா, பெரியாரது தொண்டு முழுவதும் தங்களது (தாழ்த்தப்பட்டோரது) விடுதலையையும் சுதந்தரத்தையும் அளிக்கக் கூடியது என்றும் தங்கள் சமூகம் அவரை என்றும் மறக்காது என்று கூறினார் (குடிஅரசு 13.11.1932).

11.11.1932இல் தமிழகம் திரும்பிய பெரியாருக்குச் சென்னையில் தரப்பட்ட முதல் வரவேற்பில் கலந்து கொண்ட அமைப்புகள் ஆதிதிராவிடர் சங்கமும், தாழ்த்தப்பட்டோர் தொண்டர் படையும்.

தாழ்த்தப்பட்டவன் வண்டியிலேறி வீதிக்கு வந்துவிட்டான் என்பதற்காக கட்டிவைத்து அடித்து அபராதம் போட்டனர். அதைப் பெரியார் வன்மையாகக் கண்டித்து, கொடுமை! கொடுமை! என்ற தலைப்பில் 24.11.1929 குடிஅரசில் எழுதினார். அந்தோணிராஜ் என்ற மாணவன் அக்கிரகார வீதியில் நடந்துவந்தான் என்பதற்காக, அவனை ரங்கசாமி அய்யர் செருப்பாலடித்தார். இதை வன்மையாக எதிர்த்து 24.4.1926 குடிஅரசில் பெரியார் எழுதினார்.

ஆதித்திராவிடர், தீயர், தீண்டாமை விலக்கு மாநாடுகளை பெரியாரைப் போல ஊர் ஊராக நடத்தியது யார்?
21.07.1929இல் சென்னையிலும்,
25.08.1929இல் இராமநாதபுரத்திலும்,
10.06.1930இல் திருநெல்வேலியிலும்,
16.05.1931இல் சேலத்திலும்,
07.06.1931இல் லால்குடியிலும்,
05.07.1931இல் கோவையிலும்,
04.07.1931இல் தஞ்சையிலும்,
07.12.1931இல் கோவையிலும்,
07.02.1932இல் லால்குடியிலும்,
28.08.1932இல் அருப்புக் கோட்டையிலும்,
07.08.1933இல் சென்னையிலும்,
1.07.1938இல் சீர்காழியிலும்,
07.03.1936இல் திருச்செங்கோட்டிலும்,
23.05.1936இல் கொச்சியிலும்,
02.09.1936இல் சேலத்திலும்,
06.05.1937இல் சிதம்பரத்திலும்,
04.07.1937இல் ஆம்பூரிலும் தாழ்த்தப்பட்ட மக்களுக்காக மாநாடுகளை நடத்தி கண்டன தீர்மானங்களையும், உரிமைக்கான தீர்மானங்களையும் பெரியார் நிறைவேற்றினார். இன்னும் இது போன்ற மாநாடுகளை எத்தனையோ காட்ட முடியும்.

விடிய விடியத் தெருவில் பன்றியும் கோழியும் என்ன தின்கின்றதென்பதைப் பார்த்துக் கொண்டிருக்கிறோம். அவை வீதியில் தாராளமாக வர அனுமதிக்கிறோம். அவற்றைத் தின்பவர்களுக்குத் தீண்டாமை இல்லை. ஆனால், பச்சைப் புல்லையும் பருத்திக் கொட்டையையும் தின்னும் மாட்டைத் தின்பவர்களுக்குத்தானா தீண்டாமை? பன்றி, கோழி, எருமை வரும் இடத்தில் மனிதர் வரத் தடை ஏன்?
(விடுதலை 20-5-1963)

போலீசு உத்தியோகங்களைத் தாழ்த்தப்பட்ட வர்களுக்கே கொடுக்க வேண்டும். அவர்களை அக்கிரகாரத்தில் குடியிருக்கச் செய்ய வேண்டும். தீண்டாமை பாராட்டாத சிறந்த கிராமங்களுக்குப் பரிசளிக்க வேண்டும். தாழ்த்தப்பட்டவர்களுக்கென்று தனியாகச் சேரி கட்டி அங்கே அவர்கள் குடியேறுவதை மாற்ற வேண்டும். தாழ்த்தப்பட்டவர்களுக்கென்று தனியாக சேரிகள் இருக்ககூடாது.

(95ஆம் ஆண்டு பெரியார் பிறந்தநாள் விடுதலை மலர்)

தாழ்த்தப்பட்ட பிற்படுத்தப்பட்ட, மிருகங்கள்போல் நடத்தப்படுகிற பாட்டாளி, கூலி, ஏழை மக்கள்தான் எனக்கு கண் வலியாய் இருப்பவர்கள். அவர்களைச் சம மனிதர்களாக ஆக்குவதுதான் எனது கண்நோய்க்குப் பரிகாரம் என்றார் பெரியார். தீண்டாமை என்னும் கொடுமையை அனுபவித்துக் கொண்டிருந்த ஆதிதிராவிட மக்களை அதிலிருந்து மீட்டெடுப்பதே, அவர்களின் இன இழிவு நீக்குவதே தன் முதன்மையான பணி என இயங்கியவர் தந்தை பெரியார்.

இறுதியாக, விடுதலையில்  8.7.1947 அன்று எழுதியதைப் பார்த்தால் அ.நீலகண்டனின் பொய்கள் புரிந்து விடும். !

திராவிடர் இயக்கத்திற்கு முக்கிய கொள்கை என்னவென்பதை இந்த நாட்டில் பறையன் என்றும், பார்ப்பனர் என்றும், உயர்ந்த ஜாதிக்காரன், தாழ்ந்த ஜாதிக்காரன் என்றிருப்பதையும், சூத்திரன், பஞ்சமன் என்று மிருப்பதையும் அறவே ஒழித்து எல்லோரும் ஓர் இனம், எல்லோரும் ஒரே சமுதாய மக்கள், என்னும் கொள்கையை நடைமுறையில் செய்வதேயாகும். எனவே, நானோ, திராவிடர் கழகமோ நமக்குள்ளாக இருந்துவரும் ஜாதிகளுக்காக இதை செய்தோம் என்று வீண் பெருமை பேசிக்கொள்ள வேண்டிய அவசியமில்லை.

தோழர்களே! திராவிடர் இயக்கம் தனது கடைசி மூச்சிருக்கும் வரையில் இந்நாட்டில் பள்ளன், பறையன் என்று இழி ஜாதிகளை ஒழித்து அவர்களை முன்னேற்றவே உழைக்கும் என்ற உறுதியைத் தருகிறேன்.

தாழ்த்தப்பட்டோர் பெடரேஷனில் சேருவதை நான் இன்னும் வேண்டாமென்று கூறவில்லை. அதில் வரும் நன்மைகளையும் நீங்கள் அடையுங்கள். திராவிடர் கழகத்தில் தாழ்த்தப்பட்டோர் சேர்ந்தாலும் சேராவிட்டாலும் அதன் உழைப்பின் பலனைத் தாழ்த்தப்பட்ட தோழர்களுக்கு அனுபவிக்க உரிமையுண்டு. (விடுதலை 8.7.1947)

4. பார்ப்பனர்கள் அம்பேத்கர்க்கு லஞ்சம் கொடுத்து விட்டதாகச் சொல்லி அவரை அவமானப்படுத்தியவர் ஈ.வெ.ரா.

அண்ணல் அம்பேத்கரும், தந்தை பெரியாரும் ஒரே நாணயத்தின் இரண்டு பக்கங்கள். இதை யாராலும் மறுக்க இயலாது ! அம்பேத்கரை தங்கள் பக்கம் இழுத்து அவரை பெரியாருக்கு எதிராக நிற்க வைக்கச் செய்யும் முயற்சியே இது போன்ற புரட்டுக்கள்.

தமிழில் அம்பேத்கர்’ என்பது குறித்துப் பேசுகையில், அண்ணல் அம்பேத்கரையும், அவரது அடிப்படைக் குறிக்கோள்களையும் தமிழகத்திற்கு முதன் முதலில் முறைப்படி அறிமுகம் செய்து வைத்தவர் பெரியார் ஈ.வெ.ரா. என்னும் உண்மையிலிருந்தே தொடங்க வேண்டும். (எஸ்.வி.ராஜதுரை)

பெரியாரின் ஏடுகளான “ரிவோல்ட்’, “குடி அரசு’ ஏடுகளில் அம்பேத்கர் பற்றிய பதிவுகள் 1929 முதல் காணப்படுகின்றன.

ஜல்கவோன் என்னும் இடத்தில் 29.5.1929 அன்று அம்பேத்கர் ஆற்றிய உரையை “பம்பாயில் சுயமரியாதை முழக்கம்’ என்னும் தலைப்பில் “குடி அரசு’ (16.6.1929) வெளியிட்டது.

அம்பேத்கர் நிறுவிய “சமாஜ் சமதா சங்’ (சமுதாய சமத்துவச் சங்கம்) மராத்தியிலுள்ள சிட்டகெய்னில் நடத்திய முதல் மாநாட்டில் அம்பேத்கர் ஆற்றிய தலைமைஉரையை குடி அரசு  வெளியிட்டது. அந்த மாநாட்டை பெரியாரின் சுயமரியாதை இயக்கம், “முதல் மகாராட்டிர சுயமரியாதை மாநாடு’ என்றார்.

சமாஜ் சமதா சங்கின் முதல் மாநாட்டிற்கு, “தென்னிந்திய சுயமரியாதை இயக்கத்தின் பிரபல தலைவர் ஈ.வெ. ராமசாமி அனுப்பிய வாழ்த்துத் தந்தியும் கடிதமும் அங்கு படிக்கப்பட்டன” (“ரிவோல்ட்’, 29.9.1929).

லாகூரிலிருந்த ஜாத் – பட் – தோடக் மண்டல் (சாதி ஒழிப்புச் சங்கம்) என்னும் அமைப்பின் மாநாட்டில் ஆற்றுவதற்காக அம்பேத்கர் எழுதியிருந்ததும், “தலித்துகளின் கம்யூனிஸ்ட் கட்சி அறிக்கை’ எனச் சொல்லப்படுவதுமான ‘Annihilation of Caste’ என்னும் ஆங்கில உரை தமிழாக்கம் செய்யப்பட்டு “குடி அரசு’ இதழில் “ஜாதியை ஒழிக்க வழி’ என்னும் தலைப்பில் ஓராண்டுக் காலம் தொடர் கட்டுரையாக வெளியிடப்பட்டது.

வட்ட மேசை மாநாட்டில் போராடிப் பெற்ற தனித் தொகுதி உரிமையை காந்தி உண்ணாவிரதம் என்ற பெயரில் பறித்த போது அவருடன் நின்றது பெரியாரா? தலித் தலைவர்களா?

1946 ஆம் ஆண்டுக்குப் பிறகு அம்பேத்கருடன் பெரியாருக்குச் சில கருத்து வேறுபாடுகள் ஏற்பட்டன. அவை கீழ்க்காணும் விசயங்கள் தொடர்பானவை
1. அம்பேத்கர் அரசியல் நிர்ணய சபையில் சேர்ந்தது.
2. 1951இல் நேரு அமைச்சரவையில் சேர்ந்தது.
3. காஷ்மீர் விவகாரம்
4. சோசலிச சீனாவை அய்.நா. அவையில் சேர்க்கக்கூடாது என அம்பேத்கர் கருதியது.
4. இந்தியாவின் பாதுகாப்புக்காக அம்பேத்கர் பரிந்துரைத்த சில ஆலோசனைகள்.

இது தவிர தாழ்த்தப்பட்டோர் நலத்திலோ, சாதி ஒழிப்பிலோ இருவருக்கும் எந்த வேறுபாடும் இல்லை ! இவற்றைப் பெற நாம் யாரை (இந்திய அரசு)  எதிர்த்துக் கொண்டிருக்கிறோமோ அவர்களிடமே அண்ணல் அம்பேத்கர் சேர்ந்து விட்டார் என்றார் பெரியார். அதனால் அம்பேத்கரின் மீது சில விமர்சனங்களை வைத்தார். அது அவர் முழு நேர களப் போராளியாக இருந்து சாதி ஒழிப்புக்கு, இன இழிவு நீங்க போராடுவார் என எண்ணிய அம்பேத்கர் அரசியலில் சேர்ந்ததால் செய்யப்பட்ட விமர்சனம். இத்தனைக்கும் அம்ப்த்கரை தன் தலைவனாக ஏற்றுக் கொண்டதாக பெரியார் கூறுகிறார்.

தோழர்களே! உங்களுக்கு உற்ற தலைவர் அம்பேத்கர் என்றும் அவரால்தான் பஞ்சமர்கள், கடையர்கள், இழிபிறப்புக் கொடுமைகள் நீங்குமென்றும் நம்பினேன். அதனாலேயே உங்களுக்குத் தலைவராக ஏற்றுக் கொள்ளும்படி பிரச்சாரம் செய்தேன். நானும் தலைவர் என ஏற்றுக் கொண்டேன். – விடுதலை – 10.7.1947

இதைப் போலவே பெரியாரின் போராட்டம் தனது வாழ்வில் குறிப்பிடத் தகுந்த மாற்றத்தை ஏற்படுத்தியதாக அம்பேத்கரும் குறிப்பிட்டுளார்.ambedkar.JPG

சரி, அ. நீலகண்டன் சொல்வதற்கு வருவோம். பெரியார் அம்பேத்கரை அவமானப்படுத்தி விட்டார் என்கிறார். இது ம.வெங்கடேசன் அவரின் நூலில் எழுதியதுதான்.

1950 ஆம் ஆண்டு சாதிகளைப் பாதுகாக்கும் அரசியல் சட்டத்தை எரிக்க வேண்டும் என ஒரு போராட்டம் அறிவிக்கிறார். அதற்கான அறிவிப்பில் சொன்னதைத்தான் இப்பிடித் திரித்து எழுதுகிறார்.

இதற்கு முன்பே 1950இலேயே நான் சொன்னேன், ‘இது மநுதர்ம சாத்திரத்தின் மறுபதிப்பு. ஆகவே, இதைக் கொளுத்தவேண்டும்’ என்று!

இந்தச் சட்டம் எழுதியவர்கள் ஆறு பேர்கள், அதில் நாலு பேர் பார்ப்பனர்கள். அல்லாடி கிருஷ்ணசாமிஅய்யர், முன்ஷி, டி.டி.கிருஷ்ணமாச்சாரி, கோபால்சாமி அய்யங்கார் ஆகிய பார்ப்பனர்கள் எழுதினார்கள்.மற்றவர்கள் இரண்டு பேரில் ஒருவர் அம்பேத்கர், மற்றவர் ஒரு சாயபு.

அம்பேத்கர் கொஞ்சம் நம் உணர்ச்சியுள்ளவர். அவர் என்னைக் கேட்டார், ‘உன்னுடைய மக்களுக்கு என்ன செய்யவேண்டும்? என்று. நிறைய விவரங்கனையெல்லாம் அவரிடம் கொடுத்தேன். அதையெல்லாம் அவர் பேச ஆரம்பித்தார். உடனே பார்ப்பனர்கள் அவருக்கு விலை கொடுத்து விட்டார்கள்.

அது என்ன விலையென்றால், அவர் தன்னுடைய மக்களுக்கு 100க்கு 10 இடம் கல்வி வசதியில், கேட்டார். அவன், ‘15 –ஆகவே எடுத்துக்கொள்’ என்று சொல்லிவிட்டார்! அவனுக்குத் தெரியும், 25 இடம் கொடுத்தால்கூட அவர்களில் மூன்று அல்லது நான்கு பேர்கூட வரமாட்டார்கள் என்பது. பார்ப்பான் எழுதிக்கொடுத்த சட்டத்தில் அவர் கையெழுத்துப் போட்டுக் கொடுத்துவிட்டார். மற்றவர்களுடைய சங்கதியைப் பற்றி அவர் சிந்திக்கவில்லை. ஒரு சட்டம் எல்லோருக்கும் சமம், சமவாய்ப்பு என்று சொல்லிக் கொண்டு – பார்ப்பனருடைய உயர்வைக் காப்பாற்றி அவர்களுடைய ஏகபோக அனுபவத்திற்குக் கல்வியையும், உத்தியோகத்தையும் தருகிற தென்றால், அது எந்த வகையில் நீதியான, நேர்மையான சட்டம்?” – விடுதலை – 16.11.1957

அரசியல் சட்டம் எழுதும் போது அதில் சாதி ஒழிய வழி செய்யவில்லை, சாதிக்கு பாதுகாக்கும் அளிக்கும் வகையில் இருக்கிறது என்றும் மத்திய அரசின் அழுத்தத்தை மீறி அம்பேத்கரால் ஏதும் செய்ய முடியவில்லை என்பதால் பெரியார் இப்பிடிச் சொன்னார். உடனே அ.நீலகண்டனும், ம.வெங்கடேசனும், பெரியார் அம்பேத்கரை கேவலப்படுத்திவிட்டார், அம்பேத்கரை காங்கிரஸ் அடக்கி விட்டது என்று பெரியார் கூறுகிறார் என்று கதை கட்டி விட்டனர்.

அம்பேத்கரே கூறுகிறார்:
பார்ப்பனர்களுக்கு இராமாயணம் தேவைப்பட்டது. ஒரு வால்மீகியை அழைத் தனர் – வால்மீகி பார்ப்பனர் அல்லர்; பார்ப்பனர்களுக்கு ஒரு மகாபாரதம் தேவைப் பட்டது; வியாசரை அழைத்தனர்- வியாசர் பார்ப்பனர் அல்லர்; அவர்களுக்கு அரசமைப்புச் சட்டம் தேவைப் பட்டது – என்னை அழைத்தனர்

அம்பேத்கர் தொடர்ந்து புறக்கணிக்கப்பட்டே வந்தார்.
எனது காலத்தில் ஓர் அமைச்சரிடமிருந்து மற்றொரு அமைச்சருக்கு துறைகள் மாற்றம் செய்யப்பட்டு வந்தன. நான் எப்போதுமே ஒதுக்கப்பட்டே வந்தேன். பல அமைச்சர்களிடம் இரண்டு அல்லது மூன்று துறைகள் கொடுக்கப்பட்டன. என்னைப் போன்றே மற்றவர்களும் கடும் பணிகளை செய்யக் காத்திருந்தனர். யாரேனும் ஓர் அமைச்சர் சில நாட்களுக்கு வெளிநாடு சென்றிருக்கும்போது, அவரது துறை தற்காலிகமாகக் கூட எனக்குத் தரப்படுவதில்லை, அரசாங்கப் பணிகளை அமைச்சர்களிடம் பகிர்ந்தளிப்பதில் என்ன அடிப்படைக் கோட்பாட்டை பிரதமர் பின்பற்றுகிறார் என்பதைப் புரிந்து கொள்வதே எனக்கு கடினமாக இருந்தது. அது திறமையா? நம்பிக்கையா? நட்பு முறையா? செல்வாக்கா? வெளியுறவுத்துறைக் குழு அல்லது பாதுகாப்புத் துறைக் குழு போன்ற அமைச்சரவையின் முக்கியமான குழுக்களில் ஓர் உறுப்பினராகக்கூட நான் நியமிக்கப்படவில்லை.

இப்போது சொல்லுங்கள். பெரியார் சொன்னதில் என்ன தவறு இருக்கிறது?
டாக்டர் அம்பேத்கரை சுவாதீனம் செய்து கொண்டுவிட்டார்கள். பிராமணர்கள், சூத்திரன், பஞ்சமன் என்ற பிரிவு இருக்கக்கூடாது என்று அரசியல் நிர்ணய சபையில் வாதாடமல் செய்து விட்டார்கள்……. தனித் தொகுதியை ஓழிப்பதற்குக் கூட அவரால் தொல்லை நேராமல் பார்த்துக் கொண்டார்கள்.
(விடுதலை 10-07-1947)

1948ல் சட்ட அமைச்சராக இருந்த அம்பேத்கர் இந்து சட்டதிருத்த மசோதாவை கொண்டு வர முயற்சித்ததும், அன்றைய நேரு தலைமையிலான அரசில் இடம் பெற்றிருந்த பார்ப்பனத் தலைவர்கள் பலரும் அம்பேத்கரை கடுமையாக சாடியதும் இறுதியில் மனம் வருந்தி இந்த சட்ட அமைச்சர் பதவி தனக்குத் தேவையில்லை என்று கூறி தனது பதவியை இராஜினாமா செய்ததும் இதைத்தானே காட்டுகிறது.

இதற்கெல்லாம் பிறகு கூட, 1955இல் பர்மாவில் நடைபெற்ற உலக பவுத்த மாநாட்டில் அம்பேத்கருடன் சேர்ந்து கலந்து கொண்டார் பெரியார். புத்த மதத்தில் சேர்வது குறித்து இருவருக்கும் நடைபெற்ற உரையாடல்களை “விடுதலை’ ஏடு பதிவு செய்துள்ளது.

அம்பேத்கரின் “காந்தியும் காங்கிரசும் தீண்டத்தகாதோருக்குச் செய்தது என்ன?’ “இந்தியாவில் புரட்சியும் எதிர்ப்புரட்சியும்’ போன்ற நூல்களிலுள்ள கருத்துக்கள், பெரியார் இயக்க ஏடுகளில் பல முறை எடுத்துச் சொல்லப்பட்டுள்ளன. அம்பேத்கர் காலமானபோது பெரியார் எழுதிய இரங்கலுரையைப் படித்துப் பார்த்தால் அம்பேத்கர் குறித்து பெரியார்  கொண்டிருந்த மதிப்பீட்டைப் புரிந்து கொள்ள முடியும்.

இங்கே அம்பேத்கர் விலை போய்விட்டார் என பெரியார் சொன்னது அவர் பணம் வாங்கிக் கொண்டார் என்ற பொருளில் அல்ல.. இது ம.வெங்கடேசனுக்கும் தெரியும், அ.நீலகண்டனுக்கும் தெரியும். இருந்தாலும் பேசுவது புரட்டுத்தானே அதில் என்ன வரைமுறை என்றே இதை எழுதியிருக்கிறார்.

5. சிலப்பதிகாரத்தை ஆரியத்தைப் பரப்பும் நூல் என எதிர்த்தார்.

சங்க இலக்கியமோ, தொல்காப்பியமோ, சிலப்பதிகாரமோ, திருக்குறளோ இன்னும் எதுவாக இருந்தாலும் அதில் பகுத்தறிவுக்கு ஒப்பாதக் கருத்துக்கள் இருந்து அதைத் தூக்கிப் பிடித்துக் கொண்டாடினால் பெரியார் அதை எதிர்த்தார் !

தமிழ் மொழி, இலக்கியங்கள் குறித்த தந்தை பெரியாரின் கருத்துகளுக்கு திடீர்த் தமிழ்ப் பற்றாளர்களும், அதைப் பயன்படுத்திக் கொள்ளத் துடிக்கும் பார்ப்பனியமும் காட்டும் எதிர்ப்புகளுக்கு அன்றே மிகத் தெளிவாக பதில் அறைந்திருக்கிறார் புரட்சிக்கவிஞர் பாரதிதாசன்.

குயில் இதழ்களிலிருந்து புரட்சிக் கவிஞரின் கேட்டலும் கிளத்தலும்…..

கே: சிலப்பதிகாரம் பகுத்தறிவுக்கு ஒவ்வாதது ஆரியத்தைத் தமிழரிடம் புகுத்தும் நோக்க-முடையது என்று பெரியார் சொல்லலாமா?

கி: கதையமைப்பு நன்று. தமிழர் வாழ்க்கை முறைகள் சில நல்லன. பொருந்தாதவை பகுத்தறிவுக் கொவ்வாதவையாய் இருக்கின்றன. பாடம் சொல்லும் புலவர்கள் இவைகளை மாணவர்கட்கு எடுத்து விளக்குவதில்லை. அதனால் ஆரியம் தமிழகத்தில் வலியுறுகின்றது. தமிழர் ஒழுக்கம், கலை, நாகரிகம், பண்பாடுகள் குறைவுபடுத்தப்படுகின்றன. புதியதொரு சிலப்பதிகாரம் எழுதிக் கொள்ளலாமன்றோ! – (குயில் 23.2.1960)

திராவிடக் கருத்துநிலைகளின் அடிப்படையில் புராண, இதிகாச, இலக்கிய மறுவாசிப்புகள் நடைபெற்றன. கம்பராமாயணமும், பெரியபுராணமும், சிலப்பதிகாரமும் பெரியாரின் விமர்சனத்திற்கு உள்ளாயின. கம்பராமாயணம் அளவுக்கு அவர் சிலப்பதிகாரத்தை விமரிசிப்பதைக் குறித்து அக்கறை காட்டவில்லையெனினும் சிலப்பதிகாரமும் அவரது விமர்சனத்திலிருந்து தப்பிடவில்லை.

‘சிலப்பதிகாரம் விபச்சாரத்தில் ஆரம்பித்து, பத்தினித் தனத்தில் வளர்ந்து, முட்டாள் தனத்தில், மூடநம்பிக்கையில் முடிந்த பொக்கிசமாகும்’ (விடுதலை;செப்.23,1964) என்றார் பெரியார்.

இலக்கியத்துக்கான அழகியல் மதிப்புக் குறித்து அக்கறைப்பட்டவரல்லர் பெரியார்; மாறாக, அதன் பயன் மதிப்பைக் குறித்தே கவனம் செலுத்தினார். ஆகவேதான் பகுத்தறிவு, சுயமரியாதை ஆகியவற்றுக்குப் புறம்பான எதையும் அவர் ஏற்கவில்லை. அந்த அடிப்படையிலேயே அவர் சிலப்பதிகாரம் உள்ளிட்ட அனைத்து இலக்கியங்களையும் நோக்கினார்.

சிலப்பதிகாரம் போன ஜென்மம், வருகிற ஜென்மம் என்று தலைவிதியைக் காட்டி மனிதனை எப்படிப்பட்ட இழிவுக்கும் ஆளாகச் செய்கிறது. பார்ப்பான் சொல்லுகிறபடி, அவன் எது கேட்டாலும், எடைக்கு எடை கொடுக்க வேண்டும் என்று சொல்லுகிறது. முட்டாள்தனமான கற்பையும் பெண் அடிமையையும் பெருமைப்படுத்துகிறது’ (விடுதலை;ஜூலை 28,1951) என்பார் அவர். சிலப்பதிகாரம் சமணக் காப்பியமானாலும் அதில் பார்ப்பனீயம் செல்வாக்குப் பெற்றிருக்கிறது என பெரியார் கூறினார்.

சிலப்பதிகாரத்தில் இடம்பெறும் பல்வேறு பாத்திரங்களையும் அவற்றின் செயல்பாடுகளையும் விளைவுகளையும் நுட்பமாகத் திறனாய்வு செய்துள்ளார் பெரியார். சிறு சிறு பாத்திரங்களையும் கூட, திராவிடக் கருத்துநிலையின் அடிப்படையில் நோக்கியிருக்கிறார்.

மாடலன் என்ற மறையவனின் சூழ்ச்சி வலையில் சிக்கி, ஆரியத்துக்கும் ஆரிய மடமைக்கும் மண்டியிட்டவன் சேரன் செங்குட்டுவன். மாமுது பார்ப்பான் மறைவழி காட்டத் தீ வலம் வருவது பார்ப்பனருக்குத் தலைமையிடம் கொடுப்பதாகிறது. கோவலனை அரசன் தண்டித்த மாதிரியானது, நம் நாட்டு இராஜாக்களுக்கே ரொம்பவும் அவமானம் தருவதாகும் என்பதெல்லாம் சிலப்பதிகார பாத்திரங்கள் குறித்த விமர்சனங்களை முன் வைத்தார் பெரியார்.

அதைப் போலவே கண்ண்ணகி குறித்த அவரின் விமர்சனங்களும். கற்பு என்பதை அவள் மேல் ஏற்றி வைத்து பெண்ணடிமையை நுழைக்கப் பார்ப்பதாகச் சாடினார்.

இந்த அம்மாளுக்குக் கோபம் வந்ததும் தன் மார்பைத் திருகி எறிகிறாள். இது என்ன புத்தி? மார்பைக் கையால் திருகினால் அது வந்துவிடுமா? இந்தப்படி நடந்த சங்கதியும், அனுபவமும் சிலப்பதிகாரம் தவிர வேறு எதிலும், எங்கும் காணக்கிடைக்கவில்லை. அந்தப்படித் திருகிப் பிடிங்கின மார்பு வீசி எறிந்தால் அது நெருப்புப் பற்றிக் கொள்ளுமா? அதில் பாஸ்பரஸ் இருக்குமா? இந்த மூடநம்பிக்கைக் கற்பனையானது என்ன பயனைக் கொடுக்கிறது?(விடுதலை, ஜூலை 28, 1951)

அ.நீலகண்டன் ம.பொ.சி-யைக் கூட்டிக் கொண்டு வருகிறார். ம.பொ.சி ஒரு இந்தி, சமஸ்கிருதக் காதலர். தமிழகத்தில் இந்தி எதிர்ப்புப் போராட்டம் நடந்து கொண்டிருந்த போது தார் பூசி அழித்த இந்தி எழுத்துக்களை , மண்ணென்ணெய் வைத்துச் சுரண்டி தாரை எடுத்து மீண்டும் இந்தியைக் காட்டியவர். பெரியார் சிலப்பதிகாரம் மீதான விமர்சனம் வைத்ததும் பெரியாரின் தனிப் பட்ட வாழ்வையும், மணியம்மையாரையும் இழிவு படுத்தி பேசினார்.

கண்ணகி என்று கூறப்பட்டிருக்கிற பெண்ணுக்குச் சிறிதாவது அறிவு, மனித உணர்ச்சி – தன்மானம் இருந்தது என்று யாராவது ஒப்புக்கொள்ள முடியுமா? என்று கம்பீரமாகக் கேள்வி போடுகிறார் ஈ.வெ.ரா. உணர்ச்சிக்காக அல்லாமல் உடைமைக்காக முதுமையைக் காதலிக்கும் பெண் மனித உணர்ச்சி அற்றவள் தான்! ஊரார் பழிக்கும் நிலைமையிலும் உணர்ச்சியற்ற கட்டையாகக் கிழத்தோடு பவனி வரும் பெண் தன்மானமற்றவள்தான்! இந்தக் குறைபாடுகள் அனைத்தும் கொண்ட ஒரு பெண்ணை ஈ.வெ.ரா. எப்போதோ – எங்கேயோ சந்தித்துவிட்டார் போலும்! அவளை நினைவில் வைத்துக்கொண்டு கண்ணகியைச் சாடுகிறார்’ (இலக்கியத்தின் எதிரிகள்;1955:26) < — இதுதான் ம.பொ.சி-யின் தரம்.

சுருக்கமாகச் சொன்னால் புரட்சி கவிஞர் பாரதிதாசன் சொன்னதே:

தமிழிலக்கியத்தை முன்னுக்குக் கொண்டு வாருங்கள், அவைகளைப் பின்பற்றி இலக்கியத்தைக் குவியுங்கள். சீர்திருத்தக்-காரர்களை எதிர்ப்பதன் மூலம் வயிறு வளர்க்க எண்ணாதீர்கள் என்பதுதான் பெரியார் சொல்வதன் பொருள் (குயில் 23.2.1960) . இது ம.பொ.சி-க்கும் பொருந்தும், அ.நீலகண்டனுக்கும் பொருந்தும்.

6. திருக்குறளை சில நேரங்களில் வெறுத்தார், சில நேரங்களில் முன்னெடுத்தார்.

இன்றைய தினம் திருவள்ளுவர் பற்றியும், திருக்குறள் பற்றியும் உலகம் பேசுகிறது. இந்த நிலை உருவாவதற்கான அடித்தளத்தை ஏற்படுத்திக் கொடுத்தவர் தந்தை பெரியார். புலவர்கள் மத்தியில் மட்டும் நடமாடிக் கொண்டிருந்த குறளை மக்கள் மத்தியில் தவழச் செய்ய முதன் முதலில் சென்னையில் மாநாட்டைக் கூட்டினார் தந்தை பெரியார். அதில் அறிவாய்ந்த தமிழ்ப் பெருமக்களைப் பங்கு பெறச் செய்தார். 15.01.1949 அன்று திருவள்ளுவர் – குறள் மாநாடு கூட்டப்பட்டது.

“திருவள்ளுவன் அக்காலத்திற்கு ஏற்ற வகையில் ஆரிய கருத்துக்கு ஆதரவு கொடுக்கும் அளவில் பகுத்தறிவைப் பற்றி கவலைப்படாமல் நீதி கூறும் முறையில் தனது மத உணர்ச்சியோடு கூறிச் சென்றார்.”  – (தமிழும் தமிழுரும்) என்றார் பெரியார். இதுவே பெரியார் மீது கூறப்படும் முதல் குற்றச் சாட்டு.

திருக்குறள் மட்டுமில்ல வேறு எதுவெனினும் பகுத்தறிவிற்கு ஒப்பவில்லையெனப் பட்டால் எதிர்ப்பார். அவரின் கருத்துக்கள் தவறு என யாரேனும் தரவுடன் கூறினால் அதை ஏற்றுக் கொள்வார். அதுதான் பெரியார். பெரியார், திருக்குறளில் இருக்கும் சில பழமை வாதக் கருத்துகளை எற்றுக்கொள்ளவில்லையே தவிர, திருக்குறளையே மறுதலிக்க வேண்டும் என்று சொல்லவில்லை, திருக்குறள் என்பதற்காக அது கூறு நோக்கில் ஆய்வுக்கு உட்படாது என்று சொல்ல இயலாது, ஒரு நூலை உங்களுக்கான முன்வடிவமாக ஏற்றுக் கொள்வதும் மறுப்பதும் முற்றிலும், தனி மனித விருப்பு வெறுப்பிற்கு உட்பட்டது என்பதுதான் பெரியாரின் அணுகுமுறையாயிருந்தது.

தெய்வம் தொழாள் கொழுநன் தொழுதெழுவாள் பெய்யெனப் பெய்யு மழை போன்ற குறள்களையும், திருவள்ளுவ புராணம் என்ற பெயரில் எழுதி வைத்த வள்ளுவ – வாசுகி கதைகளைத்தான் கடுமையாச் சாடினார். பெண்ணடிமைக் கருத்துக்கள் எனக் கூறினார். மனு-வும் அதைத்தானே கற்பு என்ற பெயரில் பெண்ணை கீழ்த்தராமாய் பதிந்து வைத்தது.

சென்னை மயிலாப்பூரில் திருவள்ளுவர் கழகச் சார்பில் 14.3.48 இல் நடைபெற்ற 3 ஆம் திருவள்ளுவர் மாநாட்டில் தந்தை பெரியார் ஆற்றிய உரையினைக் கேட்டால் இந்தக் கேள்வியின் அபத்தம் புரியும். (முழுவதும் இங்கே பார்க்கலாம் : (உரை )

6.1.1951 அன்று திருச்சி தென்னூர் குறள் மாநாட்டில் தந்தை பெரியார் குறளும் பக்தி நூல்களும் என்றத் தலைப்பில் உரையாற்றினார்.

எந்த நூலை எடுத்துக்கொண்டாலும் அதன் மதிப்பு அந்த நூலின் பயனை அளவாக கொண்டதே ஒழிய, அதை ஆக்கினவனையோ, அதில் உள்ள தெய்வீகத் தன்மை’’ என்பதையோ, இலக்கண இலக்கிய அளவையோ அமைப்பையோ “அற்புதத்’’ தன்மையையோ அளவாகக் கொண்டதாக ஆகாது? ஆகவே, குறள் வெறும் ஒழுக்கத்தையும், வாழ்க்கைக்கு வேண்டிய அனுபவபூர்வமான பிரதியட்ச வழியையும் கொண்டதாகும். அறிவு பெற்றவன், அறிவையே முதன்மையாகக் கொண்டவன், ஆலோசித்துப் பார்க்கும் ஆராய்ச்சித் தன்மை கொண்டவன் எவனும் குறளை மதித்தே தீருவான். குறளைப் பாராட்டியே தீருவான். சிறிதாவது பின்பற்ற குறளை வழிகாட்டியாய்க் கொண்டே தீருவான். – (விடுதலை’, 13.1.1951).

அதே போல 1949 பொங்கல் வாழ்த்து தெரிவித்து அறிக்கைக் கொடுத்த போதும் பொங்கல் பரிசாக பெரியார் கேட்டது இதுதான்.

தமிழனுக்கு இருக்கும் இழிவை – கடைத் தன் மையைக் காட்டவும் மான உணர்ச்சியைத் தூண்டவும் அறிவு வருவதற்குக் குறளைத் தூண்கோலாகக் கொள்ளும்படி செய்ய வேண்டியவனானேன். நான் கூறுகிறேன் குறள் படிப்பவனுக்கு வேதம் ஏன்? எதற்கு ஆக வேண்டும்? மனுதர்மம் ஏன்? எதற்கு ஆக வேண்டும்? பாரதம், கீதை, இராமாயணம் ஏன்? எதற்கு ஆக வேண்டும்? பொங்கல் ஆண்டு தொடக்கத்தில் தமிழ் மக்களுக்கு எனது வாழ்த்தாகவும் பொங்கல் பரிசாகவும் குறளைக் கொடுக்கிறேன். – (விடுதலை’ 19.01.1949)

பெரியார் திருக்குறளை எப்பிடிப் பார்த்தார் என்பது அ.நீலகண்டனுக்கும், ம.வெங்கடேசனுக்கும் தெரியாமல் வேண்டுமானால் இருக்கலாம் ; ஆனால் திருகுறள் முனுசாமி அவர்களுக்கும், செந்தமிழ்க் காவலர் சி.இலக்குவனார் அவர்களுக்கும் நன்றாகவே தெரிந்திருந்தது.

இதனை இதனால் இவன்முடிக்கும் என்றாய்ந்து அதனை அவன்கண் விடல் என்ற குறள் மொழிப்படி திருக்குறளை அனைத்துலகுக்கும் எடுத்தோதி அதற்குச் சிறப்பை உண்டாக்கித் தர இப் பெரியார் ஒருவராலேயே முடியும் என்பதை உணர்ந்தே இயற்கை யானது திருக்குறளை பெரியார் அவர்களிடம் ஒப்படைத்தி ருக்கின்றதென்றும், இயற்கை கூட வள்ளுவர் கட்டளைப்படியே நடக்கிறதென்பது வள்ளுவர்க்குப் பெருமை தருவதாகும்பேராசிரியர் இலக்குவனார்.

பெரியாரின் நுண்ணிய வாழ்க்கையினைத் துருவிக் காணுவோருக்கு வள்ளுவர் கூறும் வழியினிற் செல்வோர் இவர் ஒருவரே என்பது வெள்ளிடை மலையென வெளிப்படும். திருக்குறள் வீ.முனுசாமி

இவர்களைத் தவிர்த்து அ.நீலகண்டனின் எழுத்தை நம்ப வேண்டியதில்லை !

7. ஈ.வெ.ரா ஒரு பொருளாதார நிபுணர் என எண்ணிக் கொண்டு தாழ்த்தப்பட்ட பெண்கள் ரவிக்கை அணிவதால் துணி விலை ஏறுகிறது என்றார்.

காலங் காலமாய் சொல்லப்படும் பொய்தான் இது ! 1962 ஆம் ஆண்டு முரசொலி வரைந்த கார்டூன் இது. பெரியார் சொன்னதைத் திரித்து, அன்று காமராஜரை ஆதரித்துக் கொண்டிருந்த பெரியாரை எதிர்க்க வேண்டிய நிலையில் இருந்த திமுகவின் நாளேடுகள்.

11-12-1968 அன்று சென்னை – அயன்புரத்தில் திமுக மேயர் வேலூர் நாராயணனுக்கு நடந்த பாராட்டு விழாவில் தந்தை பெரியார் அவர்கள் ஆற்றிய சொற்பொழிவுவிலேயே இதற்கான மறுப்பைப் பதிலாகச் சொல்லிவிட்டார். ஆனாலும் இதை இன்னும் பிடித்துக் கொண்டு தொங்குகின்றனர்.

“பறையன் என்று சொல்லக்கூடாது என்று தான் சொன்னார்களே தவிர தண்ணீருக்கு எப்படி ஜலம் என்று சொல்கின்றானோ அதுபோல பார்ப்பான் காந்தியாரைப் பிடித்து பறையன் என்கிறதை நிலை நிறுத்துவதற்காக அரிஜன் என்று சொல்லி இன்னும் அதையே சொல்லிக் கொண்டிருக்கின்றான்.

பறையன் என்று சொல்லக்கூடாது என்று ஆரம்பித்தவன் நான். காந்தியார் தீண்டாதவர்களுக்குத் கிணறு வெட்டுவதற்காகக் காந்தி திலக் நிதியிலிருந்து ரு. 55.000 அனுப்பினார். அப்போது நான் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டித்தலைவன். நான் அதை இதற்காக செலவிடாமல் அப்படியே வைத்துவிட்டேன். மற்ற மாகாணக்காரர்கள் எல்லாhம் செலவழித்து தாழ்த்தப்பட்ட மக்களுக்குத் தனியாகக கேணி கோயில் பள்ளிக்கூடம் கட்டினார்கள். நான் காந்தியாருக்கு எழுதினேன் நாம் அவர்களுக்கு இவை எல்லாம் தனியாகச் செய்து கொடுப்பதால் ஒருக்காலும் தீண்டாமை ஒழியாது. அதற்குப் பதில் பறையன் கோயில் பறையன் பள்ளிக்கூடம் என்று சொல்லி மக்கள் அதையும் ஒதுக்கிவைத்து விடுவார்கள். இதை நான் விரும்பவில்லை. நம் மக்கள் தண்ணீர் எடுக்க வேண்டும். நம் மக்கள் படிக்கிற பள்ளிகளில் அவர்களையும் படிக்க அனுமதிக்க வேண்டும். நம் மக்கள் போகிற கோயில்களுக்கு அவர்களும் போக உரிமை வழங்க வேண்டும் என்று எழுதினேன். அதற்கு அவர் அதுபோல செய்ய முடியாது என்று சொல்லி விட்டார்.

நான் பறையன் என்று கேவலமாகச் சொன்னதாகத் தாழ்த்தப்பட்ட மக்களிடம் சொல்லியிருக்கின்றார்கள். நான் பல தடவை இந்தச் சொல்லைச் சொன்னாலும் அதை ஒழிப்பதற்காக சொன்னதுதான். எலக்சன் போது ராமசாமி நாயக்கர் பறைச்சி எல்லாம் ரவிக்கைப் போட்டுக் கொண்டார்கள் என்று தாழ்த்தப்பட்ட பெண்களைக் கேவலமாக சொன்னார் என்று விளம்பர நோட்டீஸ்களெல்லாம் போட்டு தாழ்த்தப்பட்ட மக்களே அவர் ஆதரிக்கிற கட்சிக்கு ஓட்டுப் போடாதீர் என்று வால் போஸ்டர்கள் ஒட்டி இருக்கின்றார்கள். அதைக் கண்டு சிலர் என்னிடம் வந்து நீ எப்படிச் சொல்லலாம் எனறு கேட்டார்கள். நான் சொன்னது உண்மைத்தான். நான் தாழ்த்தப்பட்ட பெண்கள் இதற்குமுன் ரவிக்கைப் போடக்கூடாது போட்டால் துணியே போடக்கூடாது அப்படி இருந்த சமுதாயம் கால மாறுபாட்டால் எப்படி ஆகி இருக்கின்றது. இன்றைக்கு ரவிக்கையில்லாமல் பார்க்க முடியவில்லை என்று சொன்னேன். இதைக் கொண்டு அந்த இனமக்களை எனக்கு ஓட்டுப் போடாமல் செய்வதற்காகக் கிளப்பி விடப்பட்டதே ஆகும் என்பதை விளக்கியதும் அவர்கள் புரிந்து கொண்டனர்.” – (விடுதலை – 15-12-1968)

இதைதான் பெரியார் இப்பிடிச் சொல்லி விட்டார் ; அப்பிடிச் சொல்லி விட்டார் அவர் ஆதரிக்கும் காங்கிரசுக்கு வாக்களிக்க வேண்டாம் என்று பிரச்சாரம் செய்யப்பட்டது. இதை பெரியார் திமுக மேடையிலேயே சொல்லி விட்டார்.

8. ஈ.வெ.ரா திராவிட நாடு அமைக்க ஆங்கிலேயர் மற்றும் முகமது அலி ஜின்னாவின் உதவியைக் கேட்டார். அவர்கள் ஈ.வெ.ராவை ஒரு பொருட்டாகாவே மதிக்கவில்லை.

தேவைப்படும் போது ஜின்னா கூட அ.நீலகண்டன் எழுத்தில் வருவார் போலும். ஜின்னா மற்றும் அம்பேத்கர் எழுத்தைக் கொண்டே பார்ப்போம்.

ஜின்னா, அம்பேத்கார் மற்றும் பெரியார் மூவர் சந்திப்பு முதன் முதலில் ஜனவரி 8, 1940ல் பம்பாயில் நிகழ்ந்தது அனைவர்க்கும் தெரிந்த ஒன்றே. இதற்கு முன்பும் பின்பும் பெரியார் – ஜின்னா சந்திப்பு நான்கு முறை பம்பாயிலும், இருமுறை சென்னையிலும், ஒருமுறை தில்லியிலும் சந்தித்துள்ளார். இந்தியாவின் பல பகுதிகளில் பிராமணரல்லாத இயக்கங்கள் 1920களில், குறிப்பாக தென்னகத்தில், ஆரம்பிக்கப்பட்டபோது சில பிராமணரல்லாதவர், முகமதியர் மற்ற தலைவர்கள், சித்தாந்தரீதியில், ஒரு கூட்டணியை தம்முள் உருவாக்கலாம் என தீர்மானித்தனர். அத்தகைய மாற்றங்களில் மதத்தில் ஈடுபாடற்ற, படித்த மேனாட்டு நாகரிகத்தில் ஊறிய ஜின்னா, மதரீதியில் செயல்பட ஆரம்பித்தார். அம்பேத்காரும் மேனாட்டு நாகரிகத்தில் ஈடுபாடுக்கொண்டிருந்தாலும், முதலில் மஹர் என்ற தாழ்த்தப்பட்ட மக்களுக்கு போராட ஆரம்பித்து, சிறிது-சிறிதாக முகமதியர்-சித்தாந்தத்திற்கு ஆதரவாக தமது கருத்துகளை வெளிட ஆரம்பித்தார். ஜின்னா, முகமது இஸ்மாயில் என்பவரை சென்னை மாகாணத்தின் முஸ்லீம் லீக் கட்சியைத் தொடங்கப்பணித்து, அவர் 1936ல் அதற்கு தலைவராகவும் ஆக்கினார். இதன் தொடர்ச்சியே ஜின்னா, அம்பேத்கார் மற்றும் பெரியார் சந்திப்பு.

காங்கிரஸை சாராத பல ஹிந்துக்கள் மற்றும் நீதிகட்சி தலைவர்கள், செட்யூல்ட் சாதியினர், பாரசீகர் முதலியோரும், “விடுபடும் நாள்” என்ற எங்களது கோரிக்கைக்கு ஆதரவு அளித்தனர் என்பது உண்மை.

ஜின்னா, ஜனவரி 1, 1940 அன்று இவ்வாறு எழுதுகின்றார், 9வது தேதி, பெரியார், அம்பேத்கார் முதலியோரைச் சந்திக்கின்றார்.

திராவிடத் தனிநாடு கோரிக்கையை முன்னெடுத்த பெரியார், 1939ல் சர் ஸ்டஃபோர்ட் கிரிப்ஸை சந்தித்தபோது, “திராவிடத் தனிநாடு” கோரினார். அப்பொது அவருடன் இருந்தவர்கள்: சர் முத்தையாச் செட்டியார், என். எஸ். சாமியப்ப முதலியார், W. P. A. சவுந்திரப்பாண்டியன். அதற்கான தீர்மானம் 1940ல் நிறைவேற்றப்பட்டது.

08-01-40 அன்று, அவர்கள் ஜின்னாவின் இல்லத்தில் சந்தித்து, நடப்பு அரசியல் போக்குகளை மாலை 5.30 முதல் 8.30 வரை விவாதித்தனர். டி.ஏ.வி.நாதன், பி.பாலசுப்ரமணியம், கே.எம்.பாலசுப்ரமணியம் முதலியோர் இருந்தனர். காங்கிரஸ்-அல்லாத கட்சிகளின், காங்கிரஸ்-எதிர்ப்பு நடவடிக்கைகளைப் பற்றி கீழ்கண்டவாறு விவாதிக்கப் பட்டது:

a) காங்கிரஸிலேயே பிராமணரல்லாத ஒரு எதிர்ப்பு குழுவை ஏற்படுத்த உள்ள சாத்தியக்கூறுகள்.
b) முகமதியர், செட்யூல்ட்-சாதியினர், பிராமணரல்லாதவர், காங்கிரஸை விட்டு வெளியேறி கங்கிரஸ்-அல்லாத கட்சிகளில் சேரத்தூண்டுவது.
d) காங்கிரஸ் அல்லாத கட்சிகள் காங்கிரஸுக்கு எதிராக ஒருமித்து செயல்படுவது.
e) இந்தி-எதிர்ப்பு போராட்டம்.
f) காங்கிரஸ் மற்றும் காங்கிரஸ் தலைவர்களை எல்லா விதத்திலும் தர்மசங்கடத்தில் ஆழ்த்துவது.
g) முகமதியர், பிராமணரல்லாதவர், ஒடுக்கப்பட்ட-பிரிவினர் ஒன்றாக சேர்ந்து செயல்பதுவது.
h) மஹர், முகமதியர் மற்றும் திராவிடர்களுக்கு தனிநாடு கேட்பது.
பிரிடிஸ்/ஆங்கிலேய-அரசாங்கத்திடம் அவ்வாறே விண்ணப்பம் செய்வது.

பிறகு, கீழ்கண்டவாறு மூவரும் தீர்மானித்தனர்:

a) ஜின்னாவும், அம்பேட்கரும் ஏப்ரல் அல்லது மே 1940ல் தமிழ் பகுதிகளில் சுற்றுப்பயணம் செய்து “திராவிட நாடு” கோரிக்கையை ஆதரித்து பேசுவது (ஏ.பொன்னம்பலம் கூற்றுப்படி).
b) பெரியார் மறுபடியும் பம்பாயிற்கு வரும்படி அழைப்பு விடுக்கப்பட்டது.
c) பெரியார் மற்றும் அவரது ஆதரவாளர்கள் முகமதியர்-நலன்களுக்கு ஒன்றாக சேர்ந்து செயல்படுவது, அவர்களை ஆதரிப்பது.
d) அம்பேட்கரும் முகமதிய-நலனுக்கு ஆதரவாக இருப்பார்.
e) எல்லோரும் சேர்ந்து காங்கிரஸுக்கு பெருமளவில் பிரச்சினைகளை கிளப்புவது-ஏற்படுத்துவது.
f) ஆங்கிலேயரிடம் அவ்வாறே முறையிட்டு, அதிகாரம் காங்கிரஸிடம் மட்டும் இருக்கக்கூடாது என வற்ப்புறுத்துதல்.

அன்றிலிருந்து மூன்றே மாதங்களில் “பாகிஸ்தான்” என்ற தனி நாடு கோரிக்கைத் தீர்மானம் அகில இந்திய முஸ்லிம் லீக் மாநாட்டில், லாகூரில் மார்ச் 25, 1940 அன்று, நிறைவேற்றப்பட்டது (பின்னிணைப்பு-1 பார்க்கவும்). ஏழே மாதங்களில், “திராவிடஸ்தான்” கோரிக்கைத் தீர்மானம் ஆகஸ்டு 1940ல் திருவாரூர் மாநாட்டில் நிறைவேற்றப்பட்டது

முஸ்லிம் லீக்கின் 28வது வருடாந்திர கூட்டம் ஏப்ரல் 11, 1941ல் சென்னையில் “மக்கள் பூங்கா” என்ற இடத்தில் நடந்தது. ஜின்னா பம்பாயிலிருந்து, கூட்டத்தின் துவக்க விழாவிற்கு வந்திருந்தார். ஜின்னாவும், பெரியாரும் மேடையில் இருந்தனர். ஜின்னாவும், அவரது தோழர்களும் வெளிப்படையாக தென்னிந்தியாவில் மற்றொரு சுதந்திர நாட்டை உருவாக்க வேண்டுமென்ற கோரிக்கையை வைத்தனர். ஜின்னா இங்கு, மூன்றாவதாக, மற்றொரு நாட்டையும் முன் வைக்கிறார்

இந்தத் துணைக்கண்டத்தில் இரு சமூகங்கள் உள்ளன: ஒன்று முஸ்லீம் சமூகம் மற்றது இந்து சமூகம், இருப்பினும், இந்த இடத்தில், மற்றொரு நாடுள்ளது, அது “திராவிடஸ்தான்” ஆகும். அப்பகுதியைச் சேர்ந்த 3% மக்கள் தேர்தலில் 3% பெற்று பெரும்பான்மை பெறவேண்டும். இது ஜனநாயகமா அல்லது மாயையா, எனத் தெரியவில்லை. ஆகையால், எனக்கு அவர்களிடத்தில் முழுமையான அனுதாபம் உள்ளது, மற்றும் எனது ஆதரவு அந்த பிராமணரல்லாதவருக்கு உண்டு. நான் ஒன்று அவர்களுக்குச் சொல்கிறேன்: “தாங்கள் உங்களுடைய வாழ்க்கையில் முன்னேறி வரவேண்டுமெறால், தங்களுக்குள்ள ஒரே வழி தங்களது கலச்சாரம், மொழி என்ற ரீதியில் செல்வதுதான்”.

இதனைக் கொண்டு பெரியாருடன் விவாதித்து போலவே, ஜின்னா, “மூன்று-நாடு-சித்தாந்தத்தை”, மூன்று நாடுகளை– ஹிந்துஸ்தானம், பாகிஸ்தானம், திராவிடஸ்தானம் முறையே ஹிந்துக்கள், முஸ்லீம்கள் மற்றும் திராவிடர்களுக்கு முன் வைப்பதை உறுதி செய்ய முடியும்.

ஜின்னாவினுடைய ஆகஸ்டு 17, 1944 தேதியிட்ட கடிதத்தின் படி பெரியார் இவரை சென்னையில் இருமுறைச் சந்தித்து உரையாடியுள்ளதும் தெரிகிறது. அதே கடிதத்தில் “தான் “திராவிடஸ்தானத்தை” கொள்கை ரீதியில் ஆதரிப்பதாகவும், திராவிடர்தாம் அதற்கு பாடுபடடேண்டும் என்றும், தான் ஒரு முஸ்லீம் என்பதினால், தான் முஸ்லீம் நலத்திற்காகத்தான் வேலை செய்ய முடியுமேத் தவிர, முஸ்லீம்-அல்லாதவர்களுக்கு வேலை செய்ய முடியாது”. என்று எழுதி தன் நிலைப்பாட்டை மாற்றிக் கொள்கிறார். இதைதான் அ.நீலகண்டன் சுட்டி பெரியாரை குறை கூறுகிறார்.

ஏன் திடீரென்று பெரியாரிடம் ஜின்னா தலைக்கீழாக மாறி தமது கருத்தை வெளியிட்டதுடன்,“திராவிடர்களுக்காக” ஆதரவு தர, போராட முடியவே முடியாது என்றார் என்பது விளங்கிக் கொள்ள முடியாத புதிர் இல்லை. இதைப் போலவே பி.பி.முதலியார் என்ற கோவாச் சங்கத்தைச் சேர்ந்தவர் அனுப்பிய தந்திகளுக்கும் ஆதரவாக எதையும் செய்யவில்லை. கோவாச் சங்கம், கோவா மஹாராஷ்டிரத்துடன் இணையவேண்டும் என்ற கோரிக்கையை ஜின்னாவிடம் கூறி அதற்கு உதவியை நாடினர். வி.எஸ்.டி பாம்பியோ வியகாஸ், கோவாச் சங்கத்தின் காரியதரிசி தமது ஜூலை 30, 1942 தேதியிட்ட கடிதத்தில் குறிப்பிட்டதாவது “தாங்கள் இந்நாட்டின் பெரும்பான்மையிலுள்ள சிறுபான்மை மக்களின் தலைவராக உள்ளதால், தாங்கள், இந்நாட்டிலுள்ள எல்லா இந்தியர் குறிப்பாக சிறுபான்மையினரின் உரிமைகளைக் காக்க உமது மதிப்புள்ள ஆதரவை எதிர்பார்க்கிறோம்”.

அவர்கள் காங்கிரஸுக்கு எதிராக அதிகாரத்தை பகிர்ந்து கொள்ள ஒன்றாகச் செயல்பட்டாலும், பெரியார் “திராவிடஸ்தான்” தனிநாடு கோரிக்கையை 1938ல் வைத்து, 1939ல் தீர்மானத்தையும் மொழிந்தார். ஆகையால், தென்னிந்தியாவில் அல்லது திராவிடருக்கு தாம் தனித்தத் தலைவராக இருக்கமுடியாது என்பதனை, ஜின்னா உணர்ந்திருப்பார். மேலும், ஒவ்வொரு கட்சியும் தனித்தனியாக, கங்கிரஸுடன் பலவிதமாக பேரம் பேசி வந்தனர். ஒரு கட்டத்தில், இவரது தலமையினையே, முகமதியர் கேள்விக்குறியாக்கிய நிலையினையும் அறிந்திருந்தார். அம்பேத்கருடைய நிலைப்பாட்டையும் அறிந்திருந்தார். ஆகவே ஒரு பக்கம் உலேமாக்களுக்குப் பணிந்து, மறுபக்கம், ஒரு தந்திர அரசியல்வாதியாக, மற்றவர்களுக்கு வாக்க்குறிதிகளை மட்டும் அள்ளி வீசியுள்ளார் எனத்தெரிகிறது. இந்த மாற்றத்தை, அம்பேத்கரின் எழுத்து மூலம் அறியலாம்.

“பாகிஸ்தான் அல்லது இந்தியாவின் பிரிவினை” என்ற புத்தகம் எழுதிய அம்பேத்கர் பாகிஸ்தானை விமர்சனம் செய்தவுடன், அவரை விட்டு ஜின்னா விலகியிருப்பார், உறவையும் துண்டித்திருப்பார் எனப் புரிந்து கொள்ள முடியும். மேலும், ஜின்னாவே காஃபிர்களுடன் சுற்றிவருகிறார், உறவாடிகிறார் என்று அவர் மீது குறைகள்/பழிகள் சுமத்தப்பட்டன. ஆகையால், அத்தகைய குற்றச்சாட்டுகளிடமிருந்துத் தப்பித்துக் கொள்ள மோமின்களின் (நம்பிக்கயுள்ளவர்கள்-இஸ்லாமியர்) நலன்களுக்கு மட்டும் வேலை செய்வது எனத் தீர்மானித்து, காஃபிர்-திராவிடர், காஃபிர்-தீண்டத்தகாதவர், இவர்களை மெதுவாக ஒதுக்கியிருப்பார். இங்கு முக்கியமாக கவனிக்க வேண்டியது என்னவென்றால், காஃபிர், காஃபிரி வார்த்தைகள் அரேபிய குஃப்ர் அல்லது குஃப்ரு என்ற சொல்லிலிருந்துப் பெறப்பட்டவை. எனவே காஃபிர்கள் சுத்தமற்ற, அசுத்தமான, தகுதியற்ற தாழ்ந்த நிலையிலுள்ளவர்கள், மோமின்கள் (முஸ்லீம்கள்) அவர்களுடன் எந்த உறவும் வைத்துக் கொள்ளக்கூடாது. ஜின்னா, காந்திக்கு எழுதிய தனது கடிதங்களில் இக்கருத்தை பல முறை வெளிப்படையாக குறிப்பிட்டுள்ளார். அதேமாதிரி, பெரியாருக்கு எழுதிய கடிதத்திலும் மறைமுகமாக, அதாவது “தான் முஸ்லிம்களுக்குத்தான் உழைக்கமுடியுமேத்தவிர, திராவிடர்களுக்கு ஆதரவு கொடுக்கமுடியாது” என்று குறிப்பிட்டுள்ளார். இது ஜின்னாவின் மீதான குறையே தவிர பெரியாரை குறை சொல்ல ஒன்றுமே இல்லை.

9. தமிழகத்தின் பெரிய தேசியவாத பார்ப்பனரல்லாத தலைவர் காமராஜர் மட்டுமே. ஈ.வெ.ரா.வின் இன வெறிக் கருத்துக்களையும், இந்து மத எதிர்ப்புக் கருத்துக்களையும் அவர் ஒரு போது ஏற்றுக் கொள்ளவில்லை.

அ. நீலகண்டனுக்கு காமராஜர் தெரியலாம். பலருக்கு அறிஞர் அண்ணா தெரியலாம். இன்னும் பலருக்கு கலைஞர், MGR போன்றோர் தெரியலாம். இன்னும் சில பேர் ஓ.பிஸ் என்று கூடச் சொல்லலாம். யாராக இருந்தாலும் ஒருவரின் கருத்துக்களை மொத்தமாக ஏற்றுக் கொள்ளவேண்டும் என்பது என்ன கட்டாயம். ??

அத்தோடு கடவுள் மறுப்பு என்பது  பெரியாரின்/திராவிட இயக்கத்தின் அடிப்படைக் கொள்கை அல்ல. சாதி ஒழிப்பு, இன இழிவு நீக்குதல், பெண்ணுரிமை போன்றவைதான் திராவிட இயக்கத்தின் கொள்கைகள். இவற்றை அடைய வழியாக கடவுள் மறுப்பைப் பார்த்தார் பெரியார். அதில் பெரும்பான்மை மக்களை சூத்திரர்கள் என்ற பெயரில் அடிமையாய் வைத்திருக்கும் இந்து மதத்தைத் தீவிரமாக எதிர்த்தார்.

ஒரு மாநிலத்தின் முதல்வரிடம் பெரியார் என்ன எதிர் பார்ப்பார், பெரியாரிடம் முதல்வர் என்ன எதிர்பார்ப்பார் என்பது கூட புரியாமல் இந்து மத எதிர்ப்பை காமராஜர் ஒப்புக் கொள்ளவில்லை என சல்லி அடிக்கிறார் அ.நீலகண்டன்.

எதிர்முகாமில் இருந்தாலும் என்றென்றும் காமராஜருக்கு ஆதரவு கொடுத்த தலைவர் பெரியார்தான். காமராஜர் முதல்வர் பதவிக்கு வந்த போது மனம் திறந்து பாராட்டியதும் அவர்தான். தேர்தல்களில், கேட்காமலேயே காமராஜருக்குத் திராவிடக் கழகத்தின் ஆதரவை வழங்கியதும் அவர்தான்.

அதைப்போலவே, காமராஜர் ‘கே’ பிளானைத் தயார் செய்து பதவியை உதறிய போது, ‘இது தற்கொலை முயற்சி’ என்று எச்சரிக்கை செய்ததும் பெரியார்தான்.

1956-ல் தந்தை பெரியாருக்கு மலேசியா, சிங்கப்பூர் ஆகிய நாடுகளிலிருந்து அழைப்பு வந்தது. அதன்படி முதலில் பர்மாவுக்கு போய் பின்னர் அங்கிருந்து மலேசியாவின் பினாங்கு பிறகு சிங்கப்பூர் எனப் பயணம் செய்வதாகத் திட்டம் வகுக்கப்பட்டது. பயணத்திற்கு முதல் நாள் ஒரு சிக்கல் வர பெரியாரின் வருகை வரை கப்பலை நிறுத்தி வைக்கச் சொன்னவர் காமராஜர்.

அதே போலத்தான் சமூக நீதி பற்றிய தேவைகள் மற்றும் கல்வி பற்றிய தேவைகள். பெரியார் எண்ணுவதை காமராஜர் செய்தார்.  பெருந்தலைவர் காமராஜருக்கும்ம், கல்வி அதிகாரி நெ. த. சுந்தரவடிவேக்கும் நடந்த உரையாடலைப் பார்க்கும் போது இந்த உண்மை புரியும்.

காமராஜர்: நாட்டுப்புற ஜனங்களுக்கு மேல் படிப்பு ரொம்ப சுலபமா கிடைக் கணும். அதுதான் முக்கியம். நகரத்திலே இருக்கிறவன் எவ்வளவு தொகை கொடுத்தும் படிப்பான். கிராமவாசி எங்க போவான்? அவ னால் மெட்ராஸ்லேயெல்லாம் வந்து தங்கி படிக்கிறது கட்டுப்படி யாகாது. சாதாரண பள்ளிக்கூட படிப்புக் கே அவன் ஆடு, மாடு, கோழியெல்லாம் விக்க வேண்டியிருக்கு…! மேல்மட்ட படிப்பையெல்லாம் கிராமப்புற காலேஜ்களுக்கும் பரவலாக்குங்க…! ஏழை வீட்டுப் பிள்ளை ங்க அந்தந்த ஊர்லயே பெரியபடிப்பு படிக்கட்டும்.

சுந்தரவடிவேலு: இப்போது, கல்லூரிகளில் சேர்ந் து படிப்பவர்களில் நூற்றுக்கு அறுபது பேர், பிற்படுத்தப்பட்ட தாழ்த் தப்பட்ட மாணவர்கள்” என்றார்.

காமராஜர்: அதைத்தானே நாம விரும்பினோ ம். அதுக்குத்தானே இவ்வளவு கஷ்டப்பட்டோம். ஒரு தலைமுறை படிச்சி மேல வந்துட்டான்னா அப்புறம் அவன் மூலம் அந்த கிராமமே மேல வந்திடுமில்லையா..

சுந்தர வடிவேலு :  நான் பெரியார் ஐயாகிட்டே இந்த விவரத்தைச் சொன்னேன். அவரு மிகுந்த மகிழ்ச்சியோடு இவ்வளவு க்கும் காரணம் காமராசர் தான்… அவருக்குத்தான் தமிழன் கடன்பட் டிருக்கிறான்…!
அவர் மட்டும் இல்லேன்னா 1952-ல் இலேயே நம்ம தலைமுறையை யே ஆச்சாரியார் குழிதோண்டிப் புதைத்திருப்பார்” என்று பெரியார் ஐயா சொன்னார் என்றார்.

காமராஜர்: அது எப்படின்னேன்? எல்லாம் பெரியார் ஐயாவாலே தானே நடக்குது…. அவர் சொல்றார் நாம செய்யிறோம்! காரணகர்த்தா அவருதானே…? இது. 1952இல் ஆரம்பிச்ச பிரச்சனை யா என்ன? ஐயாயிரம் வருஷமா இருக்கற தாச்சே. தெய்வத்தின் பேராலேயும் மதத்தின் பேராலே யும் நம்மள ஒடுக்கி வச்சிட்டானே… இப்படி இருக்கிறது என் தலையெ ழுத்துன்னு சொல்லிட்டானே! இத ப்பத்தி யார் கவலைப்பட்டார்?” “பெரியார் ஒருத்தர்தானே எல்லாத்தையும் தலையில் எடுத்துப் போட்டுகிட்டு பண்ணி கிட்டிருக்கார். அவரு மட்டும் இல்லேன்னா நம்ம புள்ளைங்க கதி என்னவாகியிரு க்கும்…? அத்தனைப்பேரும் கோவணத்தோட வயல்லே ஏரோட்டிக் கிட்டிருப்பான்…! இன்னிக்கு டெபிடி கலெக்டராகவும், ஜாயிண்ட் செகரட்டரியாவும்ல ஒக்காந் திருக்கான்…! நம்மகிட்ட அதி காரம் இருக்கிறதாலே பெரியார் நெனச்ச காரியத்த ஏதோ கொஞ்சம் பண்ணிக் கொடுக் கிறோம். அவரு, எந்த அதிகாரத்தையும் கையில வச்சிக்காம ஊர், ஊரா திரிஞ்சி சத்தம் போட்டுக்கிட்டு வராரு.! அவராலேதான் நமக் கெல்லாம் பெருமை…!” என்று உணர்ச்சி பொங்கக் காமராசர் கூறினார்.

அதனால்தான் கல்வி சம்பந்தப்பட்ட எந்த நிகழ்ச்சி ஆரம் பித்தாலும், ‘கடவுள் வாழ்த்துச் சொல்வதை நிறுத்திவிட்டு, காமராஜருக்கு வாழ்த்துச் சொல்வது தான் முறை” என்பார் பெரியார்.

94-வது வயதில், பெரியார் சென்னை அரசு மருத்துவமனையில் உடல் நலமின்றிப் படுத்திருக் கிறார் என்ற செய்தி கிடைத்ததும் ஓடோடிப் போய் பார்த்தார் காமராஜர். அதன்பிறகு வேலூர் சி.எம்.சி. மருத்துவமனையில் சிகிச்சை நடந்தது.

1973, டிசம்பர் 24-ம் தேதி காலையில் பெரியார் மறைந்த செய்தி கேட்டதும் கலங்கிப் போனார் காமராஜர்.

வேலூரிலிருந்து பெரியார் உடல் சென்னை ராஜாஜி மண்டபத்துக்கு வரும் முன்னரே காமராஜர், அங்கே போய் காத்திருந்தார்.

பெரியார் உடல் ராஜாஜி மண்டபத்துக்குள் வந்ததும் எழுந்து நின்று வணங்கினார் காமராஜர். மறுநாள் நடந்த இறுதி ஊர்வலத்தில் கலந்து கொண்டு நடந்தார். காமராஜரின் மனதைப் பாதித்த மரணங்களில் பெரியாரின் மரணமும் ஒன்று.

தாய் இறந்தபோதுகூட அசட்டையாக இருந்த காமராஜர், பெரியாரின் இழப்பில் மனம் உடைந்து போனார்.

காமராஜர் இந்து மதத்தையோ, கடவுள் மறுப்பையோ கையில் எடுக்க வேண்டுமா? பெரியாரின் சமூக நீதிக் கருத்துக்களை அதிகாரத்தைப் பயன்படுத்தி நடைமுறைப் படுத்த வேண்டுமா? புத்தியுள்ளவர்கள் புரிந்து கொள்வார்கள்.

10. கீழ்வெண்மணி படுகொலையை பெரியார் கண்டிக்கவே இல்லை.

பலருக்கும் தெரியாத, புரியாத உண்மை என்னவென்றால் பெரியாரின் இயக்கமும் கீழ்வெண்மணியில் மக்களோடு மக்களாக நின்று போராடிக் கொண்டிருந்தது.

கீழ்வென்மணியில் ‘திராவிட விவசாயத் தொழிற்சங்கம்’ சங்கம் என்ற அமைப்பு திராவிடர் கழகத் தோழர்களால் நடத்தப்பட்டு வந்தது. சாணிப்பால்,சவுக்கால் அடித்தது போன்ற வன்கொடுமைகளை திராவிடர் கழகம் எதிர்த்தது.

கம்யூனிஸ்ட்டுகளும் எதிர்த்தனர். கூலி, குத்தகை, அவர்களின் வாழ்க்கைத்தரம், அவர்களுக்கு கல்வி போதிப்பது என அனைத்துக் களங்களிலும் திராவிடர் விவசாய தொழிலாளர் சங்கம் இயங்கியது. அவர்களுக்கானக் கொள்கைகளை விளக்கி விடுதலை சார்பாக சிறிய புத்தகமும் வெளியிடப்பட்டது.

கம்யூனிஸ்ட் கட்சியால சாதிக்க முடியாததை, அவர்கள் இவ்வளவு காலம் போராடியும் செய்யமுடியாததை இராஜாஜி ஆட்சி காலத்தில் பெரியார் செய்தார். அது `தஞ்சை ஜில்லா பண்ணையாள் பாதுகாப்புச் சட்டம்` . அன்று பண்ணையாளுக்கு எந்த பாதுகாப்பும் கிடையாது. ஒரு நாள் காலையில் வேலைக்கு போனால் மறுநாள் வேலைக்கு வேண்டாம் என்று சொல்லி விடுவார்கள். வேலைக்கு எந்த உத்திரவாதமும் கிடையாது. அப்பிடி வேலை தீடிரென மறுக்கபட்டால் இழப்பீடு கொடுக்க வேண்டும் என்று அந்த சட்டம் உறுதி செய்தது. அது ஒரு பெரிய பாதுகாப்பாக பண்ணையாளுக்கு வந்தது. அது பெரியாரின் கோரிக்கையால், திராவிட விவசாய தொழிலாளர் சங்கத்தின் போராட்டத்தால் கிடைத்தது.

கீழ் வெண்மணிக் கொடுமைகளைத் தடுக்கும் வழிமுறைகள் என்ன?

ஜனநாயக ஆட்சி உள்ளவரை யோக்கியர் மறைந்து போக வேண்டியதுதான்; அயோக்கியர்கள் ஆட்டம் போட வேண்டியதுதான். இந்திய மக்கள் காட்டுமிராண்டிகள்; இந்திய தர்மம் குற்றப் பரம்பரையர்கள் தர்மமேயாகும். மநுதர்மவாதிகள் உள்ளவரை நாடு ஒழுக்கம், நேர்மை, நாணயம், நீதி பெற முடியாது. வெள்ளையன் வெளியேறியவுடன் நாடு அயோக்கியர்கள் வசமாகிவிட்டது.

இந்த நிலையிலும் இந்தத் தன்மையிலும் நாட்டுக்கு ‘சுதந்திரம்’ கிடைத்து இருபது ஆண்டுகளில் நாட்டில் செல்வாக்குப் பெறாத அயோக்கியத்தனம், அக்கிரமம், கொள்ளை கொலைகாரத்தனம், நாச வேலைகள் என்பவைகளில் ஒன்றுகூட பாக்கியில்லாமல் செல்வாக்குப் பெற்று, தினசரியில் நடைபெற்று வருகின்றன. அவை எந்த அளவுக்கு வளர்ந்தன என்றால் : 1. காந்தியார் கொல்லப்பட்டார் 2. தலைவர் காமராஜரைக் கொல்ல முயற்சிகள் செய்யப்பட்டன 3. போலிஸ் அதிகாரிகள் கட்டிப் போட்டு நெருப்பு வைத்துக் கொளுத்தப்பட்டனர் 4. நீதி ஸ்தலங்கள், ரயில் நிலையங்கள் கொளுத்தப்பட்டன. ஜெயில் கதவு உடைக்கப்பட்டது. பல வாகனங்கள் (பஸ்கள்) கொளுத்தப்பட்டன. வழிப்பறிகள் நடந்தன. மற்றும் நிலங்களில் துர் ஆக்கிரகமாகப் பயிர்கள் அறுவடை செய்து கொண்டு போகப்பட்டன. விவசாயிகளின் வீடுகள் கொளுத்தப்பட்டன 5. கடைசி நடவடிக்கையாக நேற்று முன்தினம், தற்காப்புக்கு ஆக ஓடி ஒரு வீட்டிற்குள் ஒளிந்து கொண்ட ஆண், பெண், குழந்தைகள் உட்பட 42 பேர்கள் பதுங்கிக் கொண்ட வீட்டைப் பூட்டிவிட்டுக் கொளுத்தி, 42 பேரும் கருகி சாம்பலாக்கப்பட்டிருக்கிறார்கள். இவ்வளவும் அரசியல் கட்சிக்காரர்களால் பட்டப் பகலில் வெட்ட வெளிச்சத்தில் வெளிப்படையாகவே செய்யப்பட்ட காயங்களாகும்.

சட்ட விரோதமான, பலாத்காரமான, நாசவேலைகளான காயங்களைச் செய்து, அதன் மூலம் பலன் பெறுவதற்கென்றே ஏற்படுத்திக் கொண்ட ஸ்தாபனங்களாலேயே, அவற்றின் பலனாகவே செய்யப்பட்ட, நடைபெற்ற காயங்களாகும். இவைகளை அடக்கப் பயன்படும்படியான போதிய சட்டமில்லை; சட்டம் செய்வது மூலாதாரக் கொள்கைக்கு விரோதமாக இருந்து வருகிறது.

சட்டத்திற்கும், நீதிக்கும் சம்பந்தமில்லாத நீதிஸ்தலங்கள்தான் நிறைந்திருக்கின்றன. சட்டங்களின் யோக்கியதை இப்படி இருக்க பழிவாங்கும், ஜாதி உணர்ச்சி கொண்ட, சுயநலத்தையே முக்கியமாய்க் கருதுகிற நீதிபதிகளே 100க்கு 90 பேர்களாக இருக்கிறார்கள்.

டிசம்பர் 25 1968 இரவு கீழ்வெண்மணியில் கலவரம் நடந்தது 44 பேர் உயிரோடுக் கொளுத்தப்பட்ட போது பெரியார் உடல் நலம் மோசமாகி சென்னை பெரிய மருத்துவமனையில் சிகிச்சை செய்துவந்தாரென்பது டிசம்பர் 27, 29 தேதிகளிட்ட விடுதலை நாளேட்டின் பக்கங்களில் ஆசிரியர் கி. வீரமணி எழுதிய குறிப்புகளின் வழியாக அறியப்படுகிறது. எனவே உடனடியாக பெரியார் எந்த அறிக்கையும் கொடுக்கவில்லை. ஆனால் பிறகு கீழ்வெண்மணியைத் தடுப்பது எப்பிடி என்றத் தலைப்பில் இரண்டு அறிக்கைகளை எழுதினர்.12.1.1969 அன்று செம்பனார் கோவிலில் நடந்த கூட்டதில் கீழ்வெண்மணி கலவரம் பற்றி பேசுகிறார்.

பொதுவாக கூலி உயர்வுப் போராட்டங்களை பெரியார் ஆதரிக்கவில்லை. தொழிலார்கள் பங்குதாரர்கள் ஆவதுதான் முக்கியம் என்பதே பெரியாரின் நிலைப்பாடு. “எந்தக் காரணத்தை முன்னிட்டாவது பாடுபடும் மக்கள் நிலை தாழ்ந்திருக்கவும் பாடுபடாத மக்கள் நிலை உயர்ந்திருக்கவும், ஆதிக்கம் செலுத்தவும் கூடாது என்பதுதான் தொழிலாளர்கள் கிளர்ச்சியின் முக்கியத்துவமாய் இருக்க வேண்டும். அப்படிக்கில்லாமல், ஏதோ 2 அணா 4 அணா கூலி உயர்த்தப்படுவதற்காகப் போராடுவதென்பது பயனற்றதேயாகும். ஏனெனில் நமது கிளர்ச்சியில் 2 அணா கூலி உயர்த்தித் தருவானேயானால், தொழிலாளிகளால் செய்யப்படும் சாமான்களின் பேரில் முதலாளிகள் ஒன்று சேர்ந்து நாலணா விலை அதிகப்படுத்திவிடுவார்கள். அந்த உயர்ந்த விலையைக் கொடுத்துச் சாமான் வாங்க வேண்டியவர்கள் தொழிலாளிகளேயாவார்கள். ஆகவே, முதலாளிகள் தொழிலாளிகளுக்கு வலது கையில் கூலி அதிகம் கொடுத்து, இடது கையில் அதைத் தட்டிப் பிடுங்கிக் கொள்வார்கள். முதலாளிகளுடன் கூலித்தகராறு என்பது முதலாளிகளுக்கும் தொழிலாளிகளுக்கும் இடையில் உள்ள புல்லுருவிக் கூட்டமான தரகர்களுடைய சூழ்ச்சியாகும்” (குடிஅரசு 01.10.1933).

“நிலங்கள் அனைவருக்கும் பிரித்தளிக்கப்பட வேண்டும்; விவசாயத்தில் ஈடுபட்ட கூலியாட்களுக்குக் கூலி தவிர விவசாயத்தில் ஒரு பங்கு இருக்கும்படிச் செய்ய வேண்டும்” – “(பகுத்தறிவு – 2.12.1934)

“முதலாளிக்கு ஏற்படும் இலாபத்தில் தொழிலாளர்களுக்குப் பங்கும் நிர்வாகத்தில் உரிமையும் வேண்டும்” -1944-ஆம் ஆண்டு சேலம் மாநாட்டுத் தீர்மானம்.

இந்த அடிப்படையிலேதான் போராட்டத்தை முன்னிருந்து நடத்திய கம்யுனிஸ்ட் கட்சியை விமர்சித்தார். இருந்தாலும் திராவிடர் கழகத்தினரும், கம்யுனிஸ்ட் கட்சியினரும் கீழ்வெண்மணி மக்களுடன் தொடர்ந்து இயங்கி வந்தனர். இது தொடர்பான சட்ட நடவடிக்கைக்குப் போராடி வந்தனர்.

கலவரத்தைப் பற்றி விசாரிக்க தனி நபர் கமிஷன் போட்டிருந்தார் அன்றைய முதல்வர் அண்ணா. அதற்கு கணபதியா பிள்ளை கமிஷன் என்று பெயர். திராவிட விவசாய தொழிலாளர் சங்கம் சார்பில் நிறைய தோழர்கள் சாட்சியம் சொன்னார்கள்.

கீழ்வெண்மணியைச் சேர்ந்த முனியன் என்பவா் கீவளூா் காவல்நிலையத்தில் அளித்த புகாரின் அடிப்படையில் குற்ற எண்:327/68ன் கீழ் முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டது. இச்சம்பவம் தொடர்பாக கோபால கிருஷ்ண நாயுடு உட்பட 106-பேரை காவல் துறை கைது செய்தது. கைதானவர்களில் அதிகம் பேர் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்தவர்கள். முக்கியக் குற்றவாளியான கோபாலகிருஷ்ண நாயுடுவுக்கு 1970-இல் நாகப்பட்டினம் அமர்வு நீதிபதி குப்பண்ணா 10-ஆண்டுகள் கடுங்காவல் சிறை தண்டனை விதித்தார்.

இத்தீர்ப்புக்கு எதிராக கோபால கிருஷ்ண நாயுடு சென்னை உயர்நீதிமன்றத்தில் தான் நிரபராதி என்று மேல் முறையீடு செய்தார். 3-வருடங்களுக்கு மேல் விசாரணையில் இருந்த வழக்குக்கு 1973-ஏப்ரல் 6-ஆம் தேதி தீர்ப்பு சொல்லப்பட்டது. சென்னை உயர்நீதிமன்ற நீதிபதியாக இருந்த மகராஜன் கோபால கிருஷ்ண நாயுடு மீது எந்த குற்றமும் நிரூபிக்கப்படவில்லை என்று கூறி விடுதலை செய்வதாக தீர்ப்பளித்தார்.

கவனிக்க, பெரியார் 1973 டிசம்பரில் இறந்துவிட்டார். இந்தப் படுகொலை நடந்ததும் கொலைகாரர்களை கைது செய்து 10 ஆண்டு சிறைத் தண்டனை தீர்ப்பும் தந்து விட்டது நீதி மன்றம். மக்களைத் திரட்டி போரட்டம் எதுவும் நடத்தாதற்கு காரணம் இதுதான்.  அ.நீலகண்டன் நிறுவ நினைப்பது போல ஆதிக்கச் சாதி பற்று அல்ல !

10 புரட்டுக்களுக்கும் தக்கத் தரவுகளுடன் மறுப்புத் தெரிவித்தாகி விட்டது. இதற்கு மேலும் ஏதும் தரவுகள் வேண்டுமென்றோ, கேள்விகள் இருந்தாலோ தொடர்பு கொள்ளவும்.

4 thoughts on “அரவிந்தன் நீலகண்டனுக்கு மறுப்பு !

  1. இது பட்டாசு! தலித் விரோதி, அம்பேத்கரை இழிவு படுத்தினார், திருக்குறளை இழிவு படுத்தினார், ரவிக்கை புரட்டு, காமராசர் பெரியாரை ஏற்கவில்லை என எல்லா பொய்களையும் தவிடு பொடியாக்கிருங்கேங்க! இது உங்களோட ருத்திர தாண்டவம்! ❤️

    Like

  2. Good effort to apply lipstick on a pig. மூத்திர சட்டிக்கு பட்டு போர்வை.😢😊😊😢

    Like

Leave a comment