Uncategorized

பெரியார் நினைவு நாள் பதிவு !

தந்தை பெரியார் 24.12.1973 அன்று தனது 94 ஆம் வயதில் தன் வாழ்க்கைப் பயணத்தை முடித்துக் கொண்டார்.

அய்யாவின் இறுதி நிமிடங்கள்:

மறுபடியும் காலை 7 மணிக்கு டாக்டர் இராமச்சந்திரா அவர்கள் மீண்டும் அய்யா அவர்களைப் பார்த்துச் சென்றார்கள். மதியம் இரண்டு மணிக்கு டாக்டர் சரத்சந்திரா, அய்யா அவர்களை வந்து பார்த்தார்கள். மூத்திரம் இறங்குவதில் சங்கடம் இருந்ததை அறிந்த டாக்டர்கள் இராமச்சந்திரா, சரத்சந்திரா ஆகியோர், உடனே அய்யா அவர்களை சென்னை பெரிய அரசு (G.H) மருத்துமனையில் சேர்த்தார்கள். தோழர்கள் சம்பத்தும், தியாகராஜனும் மருத்துவமனையில் இருந்தார்கள்.

3 மணி அளவில் அய்யா அவர்கள் சென்னை அரசினர் பொது மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்கள். ஊசி மூலம் மருந்தும் உணவும் செலுத்தப்பட்டு மூத்திரம் இறங்குவது சரி செய்யப்பட்டது.

குடலிறக்கத்திற்கு அய்யா அவர்களின் வயது காரணமாக – ஆபரேஷன் செய்ய முடியாத நிலை காரணமாக தானாகவே குடலிறக்கம் சரி செய்யப்பட என்னென்ன வழிமுறைகள் உண்டோ அத்தனையும் மேற்கொள்ளப்பட்டது.

வலி சிறிது குறைந்த போதிலும், அய்யா அவர்கட்கு வேலூர் டாக்டர் பட் அவர்களிடம் தன்னைக் காட்டிக்கொள்ள பேரார்வம் கொண்டு இருந்தார்கள். டாக்டர் பட் அவர்கள் தொடர்பு கொள்ளப்பட்டு விவரமும் கூறப்பட்டபோது உடன் அழைத்து வருமாறு அவரும் கூறினார். அன்றே (21.12.1973) வேலூர் மருத்துவமனைக்கு அய்யா அவர்கள் அழைத்துச் செல்லப்பட்டார்கள்.

டாக்டர் பட் அவர்களிடம் வந்து விட்டோம் என்ற மனத்தெம்பு காரணமாக 22ஆம் தேதி காலை வழக்கம் போல் எழுந்து அய்யா அவர்கள் ஆர்லிக்ஸ், பழரசம் அருந்தினார்கள். பத்திரிகைகளும் படித்தார்கள். அன்று மாலைவரை வலி குறைந்தே காணப்பட்டது.

இரவு 12 மணி அளவில் மீண்டும் வலி துவங்கியதோடு மூச்சுத் திணறலும் ஏற்பட்டுவிட்டது. வேலூரிலிருந்து சென்னைக்குத் தொடர்பு கொள்ளப்பட்டு டாக்டர் இராமச்சந்திரா, உடன் இரவு 1 மணிக்கு வேலூர் வருமாறு கேட்டுக் கொள்ளப்பட்டார். டாக்டர் அவர்களும் உடன் வந்து சேர்ந்தார்கள். நான்கு மணிக்கு டாக்டர் பட் அவர்களைக் கலந்து கொண்டு இருவரும் வைத்தியம் துவங்கினர். 23ஆம் தேதி முழுவதும், வலி குறைவதும் மிகுவதுமாகவே இருந்தது, அய்யா கோமா நிலைக்குத் தள்ளப்பட்டார்.

23ஆம் தேதி இரவு 9 மணி அளவில் மீண்டும் மூச்சுத் திணறல் துவங்கிவிட்டது. இரவு ஒன்பது முப்பது மணி முதலே பிராணவாயு செலுத்தப்பட்டது. டாக்டர்கள் இராமச்சந்திரா, பட், ஜான்சன் ஆகியோர் விடியவிடிய அருகில் இருந்து எவ்வளவோ போராடியும் தோல்வியே கண்டனர்.

அய்யாவின் நிலைமை பற்றி முதல்வர் கலைஞருக்குத் தகவல் தரப்பட்டது.

24ஆம் தேதி காலை 7.22 மணிக்கு தமிழினத்தைத் துடிதுடிக்க விட்டுவிட்டு நமது சரித்திர நாயகர் அய்யா அவர்கள் நம்மை எல்லாம் விட்டு உடலால் பிரிந்துவிட்டார்கள்.

அச்சம் என்பதையே தன் வாழ்வின் அகராதியில் கண்டிராத தலைதாழாச் சிங்கம், எழுந்துவரும் எதிர்ப்புகளாலேயே உருவாக்கி எழுந்துவிட்ட இனஞாயிறு, போராட்டப் புயற்காற்று அதன் கடைசி வீச்சை 24-.12.-1973 காலை 7-.22 மணிக்கு வேலூர் மருத்துவமனையில் முடித்துவிட்டது. – அய்யாவின் அடிச்சுட்டில் புத்தகத்திலிருந்து.

பெரியார் மறைந்த பொழுது பாவலரேறு பெருங்க்சித்திரனார் தேன்மொழி இதழில் எழுதிய இரங்கல் கவிதை.

பெரியாரைப் பெற்றிழந்தோம் !
பெற்றி யிழந்தோம் !

பெரும்பணியைச் சுமந்த உடல்!
பெரும்புகழைச் சுமந்த உயிர்
‘பெரியார்’ என்னும்
அரும்பெயரைச் சுமந்தநரை!
அழற்கதிரைச் சுமந்தமதி !
அறியா மைமேல்
இரும்புலக்கை மொத்துதல்போல்
எடுக்காமல் அடித்தஅடி !
எரிபோல் பேச்சு!
பெரும்புதுமை! அடடா, இப்
பெரியாரைத் தமிழ்நாடும்
பெற்ற தம்மா!

மணிச்சுரங்கம் போல்அவரின்
மதிச்சுரங்கத் தொளிர்ந்தெழுந்த
மழலைக் கொச்சை!
அணிச்சரம்போல் மளமளென
அவிழ்கின்ற பச்சைநடை!
ஆரியத்தைத்
துணிச்சலுடன் நின்றெதிர்த்துத்
துவைத்தெடுத்த வெங்களிறு!
தோல்வி யில்லாப்
பணிச்செங்கோ! அடடா, இப்
பகுத்தறிவைத் தமிழ் நாடும்
சுமந்த தம்மா!

உரையழகிங் கெவர்க்குவரும்?
உடலழகிங் கெவர்பெற்றார்?
ஒளிர்மு கத்தின்
நரையழகிங் கெவர்க்குண்டு?
நாளெல்லாம் வாழ்க்கையெல்லாம்
நடைநடந்து
திரையுடலை நோயுடலைச்
சுமந்துபல ஊர்திரிந்து
தொண்டு செய்த
இரைகடலை அடடா, இவ்
எரியேற்றைத் தமிழ்நாடும்
இழந்த தம்மா!

எப்பொழுதும் எவ்விடத்தும்
எந்நேர மும்தொண்டோ(டு)
இணைந்த பேச்சு!
முப்பொழுதும் நடந்தநடை!
முழுஇரவும் விழித்தவிழி!
முழங்கு கின்ற
அப்பழுக்கு இலாதவுரை!
அரிமாவை அடக்குகின்ற
அடங்காச் சீறற்ம்!
எப்பொழுதோ அடடா,இவ்
வேந்தனையித் தமிழ்நாடும்
ஏந்தும் அம்மா?

பெற்றிழந்தோம், பெரியாரை!
பெற்றியிழந் தோம்!அவரின்
பெருந்த லைமை
உற்றிழந்தோம் உணர்விழந்தோம்
உயிரிழந்தோம் உருவிழந்தோம்!
உலையாத் துன்பால்
குற்றுயிராய்க் குலையுயிராய்க்
கிடக்கின்ற தமிழினத்தைக்
கொண்டு செல்லும்
நெற்றுமணித் தலைவரினை,
அடடா,இத் தமிழ்நாடும்
நெகிழ்த்த தம்மா!

பெரியாரைப் பேசுகின்றோம்
பெரியாரை வாழ்த்துகின்றோம்
பீடு தங்கப்
பெரியாரைப் பாடுகின்றோம்
பெரியார்நூல் கற்கின்றோம்
பீற்றிக் கொள்வோம்!
உரியாரைப் போற்றுவதில்
அவருரைத்த பலவற்றுள்
ஒன்றை யேனும்
சரியாகக் கடைப்பிடித்தால்
அடடா,இத் தமிழ்நாடும்
சரியா தம்மா! – தேன்மொழி சனவரி 197௪

பெரியார் மறைந்த போது தலைவர்கள்/பத்திரிக்கைகள் வெளியிட்ட இரங்கல் செய்திகளைத் தொகுத்து தேன்மொழி இதழில் வெளியிட்டு இருந்தார் பாவலரேறு அய்யா. அந்தத் தொகுப்பு.

குடியரசுத் தலைவர் வி.வி.கிரி
காலஞ்சென்ற திரு.ஈ.வெ.ராமசாமி நயம்மிக்கதோர் தலைவர், வீரம் மிக்கதோர் போராட்டக்காரர். அன் னாரது மறைவுச் செய்தி கேட்டு நான் மிக்க வருத்தமுறுகின்றேன். அவர் எப்பொழுதுமே சிறந்ததோர் போராட்டக்காரராக நிகழ்ந்திருக் கிறார். தேச விடுதலைக்கான போராட்டத்தில் அவர் முக்கியமான பங்கினை வகித்திருக்கிறார். பின்னர், அவர் முக்கியமான பங்கினை வகித்திருக்கிறார். பின்னர், அவர் தாம் கண்ட கருத்துக்கிசைய சமூக சீர்த் திருத்தங்களுக்காகத் தம்மை அர்ப் பணித்துக் கொண்டார். அன்னாரை இழந்து துயருறுகின்றவர்களுக்குத் தயவு செய்து எனது ஆழ்ந்த அனு தாபத்தைக் கூறுங்கள்.

பிரதமர் இந்திராகாந்தி
பெரியாரது மறைவுபற்றி அறிந்து துயருற்றேன். சர்ச்சைக்குரியனவற்றில் ஈடுபாடு கொண்டு, அதில் களிப்பெய் திய முனைப்பாற்றல் மிக்க மனிதர் அவர். ஏற்றுக் கொள்ளப்பட்ட பல கருத்துகளை எதிர்த்து அறைகூவி நின்றவர் அவர். அவருடன் சேர்ந்து பணியாற்றிய அவர் இயக்க ஊழியர் களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவிக்கிறேன்.

ஜெயப்பிரகாஷ் நாராயண் (சர்வோதயத் தலைவர்)
பெரியார் அவர்கள் வாழ்நாள் முழுவதும் ஜாதி மூட நம்பிக்கை களை முழுமூச்சாக எதிர்த்த பெருந்தலைவர்.
இந்தியாவில் அவரைப் போன்ற ஒரு தலைவரைப் பார்க்கவே முடியாது. கொடுமைக்கு எதிராகப் பெரும் போர் தொடுத்தவர் அவர்.

தமிழக ஆளுநர் கே.கே.ஷா
ஆர்வம் மிக்க சமூகச் சீர்த் திருத்தவாதியான திரு.ஈ.வெ.ராமசாமி யின் மறைவு குறித்து நான் பெரிதும் வருந்துகிறேன்.

தமிழக முதல்வர் டாக்டர் கலைஞர்

பெரியார் தன்னுடைய சுற்றுப்பயணத்தை முடித்துக் கொண்டார். 95 ஆண்டுகள் வரை வாழ்ந்த அந்தப் பகுத்தறிவுச் சிங்கம், கடைசி மூச்சு வரை சமுதாயப் பணியை நடத்திய சரித்திரத்தை யாரும் மறக்க முடியாது. இன்று தமிழ்நாடு தன்மான உணர் வோடு தலைதூக்கி நிற்பதற்குக் காரணமாக இருந்த மாபெரும் தலைவர் அவர். அவரால் சமுதாய அந்தஸ்து பெற்ற லட்சோப லட்சம் மக்கள் பிற்படுத்தப்பட்ட, தாழ்த்தப் பட்ட மக்கள் இந்த இழப்பைத் தாங்கிக்கொள்ள முடியாது. எங் களை எல்லாம் ஆளாக்கிய எங்கள் வழிகாட்டியின் இந்தப் பிரிவு பற்றி என்ன சொல்வதென்றே புரியாமல் திண்டாடுகின்றேன். இந்தியாவின் தலைசிறந்த சீர்த்திருத்தப் புரட்சிக் காரரை இழந்துவிட்டோம். அவர் தன்னுடைய சுற்றுப்பயணத்தை முடித்துக்கொண்டார்; நாம் தொடர் வோம்.

டாக்டர் நாவலர் (கல்வித்துறை அமைச்சர்)

யாருக்கும் அஞ்சாமல், எதற்கும் அஞ்சாமல் தமிழகம் எங் கணும் வீர நடை போட்டு வந்த பகுத்தறிவுச் சிங்கம் இன்று சாய்ந்து விட்டது என்ற செய்தி பெரும் அதிர்ச்சியையும். பெரும் துக்கத்தையும் அளிக்கின்றது.
பகுத்தறிவுத் தந்தை பெரியார் அவர்கள் நாட்டு விடுதலைப் போராட்டத்திலும், சமூகச் சீர்த் திருத்தக் கிளர்ச்சிகளிலும், மொழி யுரிமைப் போராட்டத்திலும் பங்கு கொண்டு அவர் புரிந்த சாதனைகள் பலவாகும். பொதுத்தொண்டு புரிபவர்களுக் குச் சிறந்ததோர் எடுத்துக்காட்டாக அவர் திகழ்ந்து வந்தார். பொதுவாக, தமிழ்ப் பெருங்குடி மக்களுக்குக் குறிப்பாகத் தமிழக அரசுக்கும் அவர் பெரும் துணையாக இருந்து அருந் தொண்டு ஆற்றி வந்தார். அவரது இழப்பு திராவிட முன்னேற்றக்கழ கத்துக்கு, ஆட்சிக்கும் பேரிழப்பு ஆகும்.
அவர் பரப்பிவந்த பகுத்தறிவு நெறியை, அறிவியலின் துணை கொண்டு தொடர்ந்து பரப்புவதில் ஈடுபடுவதுதான் நாம் அவருக்குக் காட்டக் கூடிய நன்றிக்கடனாகும். வளம்மிகுந்த தமிழ்நாடு, வளர வொட்டாமல் தடுத்து வருகின்ற மூடப்பழக்க வழக்கங்களையும் அவர் கூறிய அறிவுரைகளை ஏற்று, அவற்றை ஒழித்து, சிறந்த தமிழ கத்தைக் காண நாம் அனைவரும் ஈடுபடுவோமாக. வாழ்க பெரியார் புகழ்!
வெல்க அவருடைய பகுத்தறிவு நெறி!

கு.காமராஜர்

நமது நாட்டின் லட்சோப லட்சம் மக்களால், பெரியார் என்று பாசத்துடன் அழைக்கப் பட்டு வந்த திரு. ஈ.வெ. ராமசாமி இன்று நம்மைவிட்டு மறைந்தார். அன்னாரது மறைவு பொது வாழ்க்கைக்குப் பெரிய இழப்பு. நாம் ஆர்வத்துடன் நம்பிய இலட்சியங்களுக்காக அவர் கடந்த அரை நூற்றாண்டுகளுக்கும் மேலா கத் தம்மை அர்ப்பணித்துக் கொண்டு பணி புரிந்துவந்தார். நமது நாட்டில், குறிப்பாகத் தமிழ்நாட்டில் சமூக விழிப்பு ஏற்பட அவர் ஆற்றிய பணி, அவர் வகித்த பாத்திரம் மிகப் பெரியது. அவர் ஒரு மாபெரும் தேச பக்தர்.
ஆரம்பத்தில் அவர் இந்திய தேசிய காங்கிரஸ் தீவிர உறுப்பி னராக இருந்து காந்தியார் துவக்கிய இயக்கங்களில் பங்கேற்றார்; பல முறை அவர் சிறையேகினார். பின்னர், தீவிரமான சமூக சீர் திருத்தப் பிரச்சாரப் பணியைத் தமக்கென வரித்துக் கொண்டார்.
பெரியார் நமது சமூகத்துக்கு ஆற்றிய சேவைகள் நம் மனத்தில் நீண்டநெடுங்காலம் நிலைத்து நிற்கும். தமது கருத்துகளைப் பயம் துளியுமின்றி எடுத்துக்கூறியவர் களில் பெரியாரும் ஒருவர். கடைசி வரை அவர் விடாமுயற்சியுடன் சலி யாத கடும் பணியில் ஈடுபட்டிருந் தார். அன்னாருக்கு எனது மரியாதை கலந்த இரங்கல்.

சி.சுப்பிரமணியம் (மத்திய தொழிலமைச்சர்)
தந்தை பெரியார் மறைவு பற்றி செய்தி அறிந்து ஆழ்ந்த வருத்தம் அடைந்துள்ளேன். தமிழ்நாடு மட்டுமல்லாமல், மனித சமுதாயம் முழுமைக்குமே இது பெரும் இழப்பாகும்,

பி.இராமச்சந்திரன் (த.நா.கா.க.தலைவர்)
திராவிடர் கழகத்தின் தலைவர் திரு.ஈ.வெ.ராமசாமி அவர்களின் மறைவு இந்த நாட்டின் பொது வாழ்க்கையில் குறிப்பாக, தமிழ் நாட்டின் பொதுவாழ்க்கையில் மாபெரும் இழப்பாகும்.
அவர் தீவிர காங்கிரஸ்காரராக இருந்தார்; தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் தலைவராகப் பொறுப்பு வகித்திருக்கிறார்; விடு தலை இயக்கத்தின் முன்னணியில் அவர் இருந்தார்; அவர் வைக்கம் சத்தியாகிரகத்தில் பங்கேற்று சிறைச்சாலை ஏகினார்.
தேசத்தின் விடுதலைக்கும், சமூகச் சீர்த்திருத்தத்துக்குமாக வேண்டி நடத்திய போராட்டங்கள் அவரது பொதுவாழ்வில் நிரம்பியிருந்தன. தாழ்த்தப்பட்ட மக்களை முன் னேற்றுவதற்காக அவர் ஆற்றிய பணிகள் மக்களால் என்றும் நினைவில் நிறுத்திக் கொள்ளப் படும்.
மறைந்த தலைவருக்கு நான் எனது மரியாதை கலந்த அஞ்சலி யைச் செலுத்துகிறேன்.

ம.பொ.சிவஞானம் (தமிழரசுக் கழகத் தலைவர்)
பெரியார் ஈ.வெ.ரா. உலகில் தோன்றிய சமுதாய சீர்திருத்தப் புரட்சியாளர்களில் தலைசிறந்த வராகத் திகழ்ந்தார். தனக்கெனப் புதிய சரித்திரம் படைத்து, உலக சரித்திர நாயகர்கள் வரிசையில் சிறப்பிடம் பெற்று விளங்கியவர் பெரியார். உயிர் விடும்வரையில் தம்மு டைய குறிக்கோள்களில் பெரியார் கொண்டிருந்த உறுதியும், எதிர்ப் புக்கு அவர் ஈடுகொடுத்த தீரமும், இன்னொருவரை இணை சொல்ல முடியாது. பெரியாரோடு தமிழக அரசியல் ஒரு சகாப்தம் முடிந்துவிட்டது.

தவத்திரு. குன்றக்குடி அடிகளார்
தமிழகத்தின் காவலர், புரட்சி கரமான சிந்தனையாளர் தலைவர் பெரியார் மறைந்தது இன்றைய தமிழகத்தில் ஈடுசெய்ய முடியாத இழப்பு. வாழ்நாள் பெரும் பகு தியை தலைவர் பெரியார் போல் பொதுப்பணியில் ஈடுபடுத்தியவர் அருமையிலும் அருமை. தமிழகத் தின் அரைநூற்றாண்டு வரலாற்றில் அவர் முத்திரை பதியாத துறையே இல்லை எனலாம். கலக்கமில்லாத, கருத்துப் பிடிப்பு, உண்மையான உழைப்பு அவருக்கே உரிய குண நலன்கள்.
தமிழன் என்ற இனஉணர்வை முன்னிலைப்படுத்தி, அயராது உழைத்த பெரியவர்; பழகுவதற்கு இனிய பண்பாளர்; கடுமையான கருத்து வேற்றுமை உடையவர் இருந்தும் கூட, அவர் காட்டிய கண்ணியம் பொதுவாழ்க்கையில் ஈடுபட்டிருப்போருக்கு எடுத்துக் காட்டாகும்.
தமிழர் என்ற இன உணர்வைத் தூண்டி வளர்த்து, அது செழித்து வளர்ந்து, பூத்துக் காய்க்கின்ற போது அவர் நம்மைவிட்டுப் பிரிந்து விட்டார். ஆயிரம் கருத்து வேற்றுமை இருந்தாலும் அவர் மனித குலத்தின் மீது கங்கு கரை யற்ற அன்புடையவர் என்பதை யாராலும் மறுக்கமுடியாது ஜாதி வேறு பாடற்ற சமுதாய அமைப்பு. தமிழர் இனத்தின் முன்னேற்றம் ஆகியவை அவர் நமக்கு வீட்டுச் சென்றிருக்கிற பணிகள். அந்தப் பணிகளைச் செய்து நிறைவேற்று வது தலைவர் பெரியாருக்குச் செய்யும் கடமையாகும்.
தமிழினத்தின் பகையைக் கண்டு, சிம்ம முழக்கம் செய்த ஒரு ஆன்மா ஓய்ந்துவிட்டது. ஆனால், அவர் ஏற்றி வைத்த விளக்கு, எடுத்துத் தந்த லட்சியம் ஓயாது பயணம் செய்யும்.

பி.இராமமூர்த்தி (மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் தலைவர்)
பெரியார் ஈ.வெ.ரா. தமிழ் நாட்டில் மட்டுமின்றி, இந்தியா பூராவிலும் தனித்தன்மை கொண்ட தலைவராகத் திகழ்ந்தார்.
அரசியலைப் பொறுத்த வரை யில் ஒருவருக்கு, அவருடன் கருத்து வேறுபாடு இருக்கலாம். ஆனால், அவர் நாட்டின் வைதிகத்தின் காழ்ப்பையும், வெறுப்பையும் தீரத் துடன் எதிர்த்து நின்று மக்களை ஒடுக்கிக் கேவல நிலையில் வைத் திருந்த ஜாதிக் கொடுமை, மூடநம் பிக்கை ஆகியவற்றையும் மக்களை நிரந்தரமாக அடிமைத்தளையில் வைத்திருக்க மக்களிடம் ஊட்டப் பட்ட கடவுள் நம்பிக்கையையும் எதிர்த்து சமூக நீதிக்காக 50 ஆண்டு களுக்கும் மேலாக அயராது போரா டியவர். இது இந்நாட்டின் வர லாற்றில் என்றென்றும் சிறப்பான அத்தியாய மாகத் திகழ்ந்துவரும், பிறப்பில் தாங்கள் உயர்ந்த குலத் தைச் சேர்ந்தவர்கள் என்று பிரா மண சமூகத்தினர் கருதிக் கொண் டதை பெரியார் எதிர்த்துப் போரா டினார். ஆனாலும் தனிப்பட்ட வாழ்க்கையில் காட்டியது கிடை யாது. சமூக ரீதியில் ஒடுக்கப்பட்ட மக்கள், பெரியாரின் மறைவின் மூலம் சமூகக் கொடுமைக்கு எதி ராகப் போரிட்டு வந்த ஒரு மாபெரும் வீரரை இழந்து விட்டனர்.

இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி
தமிழகத்தில் கடந்த 50 ஆண்டு களாக ஒடுக்கப்பட்ட மக்களுக்காக சமூகச் சீர்த்திருத்த இயக்கம் துவக்கி நடத்திய பெரியார் மறைவு அதிர்ச்சி தரும் செய்தியாக உள்ளது.

எம்.ஜி.இராமச்சந்திரன் (அ.தி.மு.க.தலைவர்)

தமிழர் சமுதாயம் தனது பாது காவலனை இன, மொழி உயர் வுகளுக் காக அரசி யல், பொரு ளாதார விடு தலைக்காகப் போராடி, போராட்டத் திலேயே தனது வாழ் நாளின் பெரும் பகுதியைக் கழித்த விடுதலை வீரரை இன்றைக்கு இழந்து விட்டது.
இந்தியத் துணைக்கண்டம் ஒரு நூற்றாண்டு வரலாறு படைத்த பேராண்மையும், பேராற்றலும் மிக்க மாவீரர்களின் வரிசையிலே கடைசிச் சின்னத்தை இழந்துவிட்டது. திராவிடர் இயக்கத்திலே தங்களை ஒப்படைத்துக் கொண்ட லட்சோப லட்சம் குடும்பங்கள் தங்களது தந்தையை இழந்து தவித்து நிற்கிறது.
உலகம் ஓர் ஆற்றல் மிக்க சிந்த னையாளரை, மக்கள் சமுதாய வழி காட்டிகளில் ஒருவரை இழந்து விட்டது.

பரூக் மரைக்காயர் (புதுவை முதல்வர்)
தந்தை என்று உரிமையோடு அழைக்கப்பட்டு வந்த தனிப்பெருந் தமிழகத் தலைவர் தந்தை பெரியாரின் மறைவுச் செய்தி கேட்டு மீளாத் துயருற்றேன்.
தமிழ்ச் சமுதாயத்தின் அறிவுக் கண்ணைத் திறந்து மக்களிடையே மலிந்து கிடந்த மூடப்பழக்கவழக் கங்களையும், அர்த்தமற்ற வழிமுறை களையும் தூக்கி எறிந்து பகுத்தறிவு உணர்ச்சியைத் தோற்றுவித்த பெருமை பெரியாரையே சாரும்.
எண்ணற்ற இளம் தலைவர்களை உருவாக்கியும், சமுதாயத்தில் புதிய தோர் விழிப்புணர்ச்சியைத் தோற்று வித்தும், ஜாதியின் பெயரால் கொடு மைகளுக்கு ஆளான சமுதாயத்தின ருக்குப் புதுவாழ்வு தந்தும் பெரியார் என்ற தனி மனிதர் தமிழரின் வர லாற்றில் ஈடற்ற ஓர் சகாப்தமாகத் திகழ்கின்றார்.
வாழ்நாள் முழுமையும் சமுதாய சீர்த்திருத்தங்களுக்காகவே அர்ப்பணித்து, இறுதி வரையில் தான் நிறுவிய திராவிடர் கழகம் அரசிய லில் ஈடுபடாமல், சமுதாய முன் னேற்றத்துக்காகப் பாடுபட்டு வரும் நிகழ்ச்சி, இந்திய வரலாற்றிலேயே போற்றுதற்குரியதாகும்.
தந்தைபெரியாரின் மறைவு ஈடு செய்யமுடியாத பேரிழப்பு ஆகும். அவரது சீர்திருத்தக்கருத்துகளையும், சுயமரியாதை எண்ணங்களையும் மக்களிடையே பரப்புகின்ற நற்பணி யில் நம்மை மேலும் ஈடுபடுத்தி, பெரியாரின் அரிய நினைவுக்கு அஞ்சலி செலுத்துவோம்.
தந்தை பெரியாரின் இறப்பினால் வருந்துகின்ற எண்ணற்ற தமிழ் நெஞ் சங்களோடு நானும், என் ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்ளுகிறேன்.

பக்தவத்சலம் (தமிழக முன்னாள் முதல்வர்)
யாரைப்பற்றியும், எதைப்பற்றி யும் என்ன நினைக்கிறாரோ அதை ஒளிக்காமல் சொல்லக்கூடிய அஞ்சா நெஞ்சம் படைத்தவர் ஈ.வெ.ரா.
பெரியார் ஒரு தனி மனிதரல்ல; அவர் ஒரு பெரிய ஸ்தாபனம்.
ஆரம்பகாலத்தில் பெரியார் காங் கிரசின் தீவிர தலைவராக இருந்தார். ராஜாஜியின் நெருங்கிய நண்பராக வும் இருந்துவந்தார்.
பெரியாரின் மறைவு ஈடுசெய்ய முடியாத இழப்பு ஆகும்.

தேவராஜ் அர்ஸ் (கருநாடக முதல்வர்)
தமிழ்நாட்டு அரசியலில் பல் லாண்டு காலம் புரட்சிப் புயலாய் விளங்கியவர் பெரியார். அவர் பிரச் சாரம் செய்த எல்லாக் கொள்கை களையும் நாம் ஏற்கமுடியாமல் இருக்கலாம்; அவர் கையாண்ட வழி முறைகளையும் நாம் ஏற்கமுடியாமல் இருக்கலாம். என்றபோதிலும் ஏழை, எளியவர்களுக்காகவும், தாழ்த்தப் பட்ட மக்களுக்காகவும் அவர்காட் டிய இரக்க உணர்ச்சியைப் பாராட் டாமல் இருக்க முடியாது. இம் மக்களின் பொருளாதார, சமூக நிலை மேம்பாடடைய அவர் நடத்திய மாபெரும் போராட்டங்களைப் பாராட்டாமல் இருக்கமுடியாது. பெரியார் இலட்சியத் தலைமை பூண்ட ஓர் நாயகன். தமது வாழ் நாளிலேயே காவிய நாயகனாகத் திகழ்ந்தவர்.

first

forth

second

fifth

sevanth

sixth

third

eighth

 

பெரியாரின் இறுதி அஞ்சலி

sleep

anjali
அய்யாவின் உடல் வைக்கப்பட்டிருந்த ராஜாஜி மண்டபத்தில் சோகமே உருவாக தலைவர்கள்...

 

finalBye

anjali2.JPG

 

தந்தை பெரியார் எந்த அரசுப் பதவியிலும் இல்லாதிருந்த போதிலும் அப்போதைய முதல்வர் திரு.கருணாநிதி பெரியாரை அரசு மரியாதையுடன் அடக்கம் செய்ய ஆணையிட்டார்.

 

 

பெரியார் குறித்து நா.முத்துக்குமார் எழுதிய கவிதை..

காவலர் பெரியார்.

“கருப்புச் சட்டைக்காரன்
காவலுக்குக் கெட்டிக்காரன்’’
விடுகதை சொல்லிக் கொண்டிருந்தாள்
குழந்தை.

பெரியாரைப் பற்றி
கொஞ்சம் சொன்னேன்.

தமிழன் எப்போதும்
நூலிழையில்
உயிர் தப்புகிறான்.
ஒவ்வொரு முறையும்
அந்த நூலிழை
பூநூலிழையாக இருக்கிறது.

மதம் உன்னை
யோசிக்க விடாமல் தடுத்தது.
அந்த விஷப் பாம்பு
உன்னைக் கொத்த வரும்போதெல்லாம்
பெரியார்தான்
பாதுகாப்பாக இருந்தார்.

சாதி உன்னை
நூற்றாண்டுகளின்
இருண்டப் பள்ளத்தில்
தள்ளிவிட்டுச் சிரித்தது.

உனக்கான வெளிச்சம்
திருட்டுப் போகாமல்
பெரியார்தான்
காவலாக இருந்தார்.
ஆணாதிக்கம் உன்னை
அடுப்பங்கரையிலேயே
வைத்திருந்தது.
மீசை முளைத்த
கரப்பான் பூச்சிகளிடமிருந்து
உனக்கான விடுதலைக்கு
குரல் கொடுத்தவர் பெரியார்.

சொல்லி முடித்தவுடன்
பாடப்புத்தகத்தை எடுத்து
குழந்தை திருத்தி எழுதினாள்:
“கருப்புச் சட்டைக்காரன்
காவலுக்குக் கெட்டிக்காரன்
பூட்டு இல்லை
பெரியார்!’’ – நா. முத்துக்குமார்

அய்யாவிற்கு இறுதி அஞ்சலி:

வேலூரில் இருந்து தந்தை பெரியார் அவர்களின் புகழ் உடல் அய்யா அவர்களின் வேனில் ராஜாஜி மண்டபத்திற்குக் கொண்டுவரப்பட்டது.

சத்துவாச்சாரி, ஆற்காடு ராணிப்பேட்டை, வாலாஜாபேட்டை,ஒச்சேரி, தாமல், சுங்குவார் சத்திரம் சிறீபெரும்புதூர், பூந்தமல்லி மற்றும் பல்வேறு ஊர்களிலும் வழிநெடுக லட்சக்கணக்கான மக்கள், கழகத் தோழர்கள், தாய்மார்கள், மாணவர்கள், அலுவலர்கள் திரளாகக் கூடி நின்று வாழ்வித்த வைக்கம் வீரருக்கு மலர் மாலைகள் சூட்டி தங்கள் மரியாதையைத் தெரிவித்த வண்ணமாகவே இருந்தனர்.

அய்யா அவர்களது உடலுடன் அமைச்சர்கள் ப.உ.ச., மன்னை, டாக்டர் இராமச்சந்திரா, டாக்டர் ஜான்சன் ஆகியோர் உடன் வந்தனர். சரியாக பிற்பகல் 4 மணிக்கு அய்யா அவர்களின் அழியாப் புகழ் உடல் ராஜாஜி மண்டபத்தை வந்தடைந்தது.

சென்னை ராஜாஜி மண்டபத்தில் யாவரும் தெளிவாக எளிதில் காணும் வண்ணம் அமைக்கப்பட்டிருந்த உயர்ந்த பீடத்தில் நீங்கா துயில்கொண்ட தந்தை பெரியார் அவர்களின் புகழ் உடல் 24.-12.-1973 பிற்பகல் 4 மணிக்கு பொதுமக்களின் பார்வைக்கு வைக்கப்பட்டது.

போலீஸ் உயர்மட்ட அதிகாரிகள் அய்யா அவர்களின் உடலை மேடைக்குச் சுமந்து வந்தனர். கருஞ்சட்டைத் தோழர்கள் தமிழினத்திற்குத் தோள் கொடுத்த தலைவரின் உடலைத் தோள்கொடுத்துத் தாங்கி ராஜாஜி மண்டபத்தில் அமைக்கப்பட்டிருந்த உயர்ந்த பீடத்திலே வைத்தனர்.

தமிழ் மக்களின் இதயத்திலே வேர்விட்டு, பழுத்த கனியாகிய அய்யா அவர்களின் உயிர்நீத்த உடலைக் கண்ட மக்கள் கூட்டம் _ ராஜாஜி மண்டபத்தையே மக்கட் கடலால் மிதக்கவிட்ட தமிழினக் கூட்டம் அய்யா… அய்யா… என்று கதறிக் கூக்குரலிட்ட அவலக்குரல் இதுவரை சரித்திரம் கண்டிராத நிகழ்ச்சியாகும். தமிழினத்தின் தொழுகை தொழுகை, எங்கு பார்த்தாலும் இனத் தலைவரின் உடல் நோக்கி கைகள் தொழுத வண்ணமாகவே இருந்தன. அழுதல், புலம்பல், கூக்குரல், கண்ணீர் வெள்ளம் இவற்றிற்கிடையே தமிழக முதல்வர் டாக்டர் கலைஞர் கழகக் கொடியோடு ஆள் உயர ரோஜா மாலையும் மலர் வளையமும் வைத்து தன் ஆற்றொணாத் துயரத்தைக் கொட்டி அழுது தங்களை ஆளாக்கிய ஆசானுக்கு இறுதி மரியாதை தெரிவித்தார்.

அவரைத் தொடர்ந்து மாண்புமிகு டாக்டர் நாவலர், ப.உ.சண்முகம், மாதவன், க.இராசாராம், கண்ணப்பன், என்.வி. நடராசன், மன்னை நாராயணசாமி, அன்பழகன், ராமச்சந்திரன், ஆதித்தனார் ஆகிய தமிழக அமைச்சர் பெருமக்கள், திரு. ஈ.வெ.கி.சம்பத், கே.ஏ.மதியழகன், சென்னை நகர ஷெரிப் கெ.எஸ். நாராயணன், சென்னைப் பல்கலைக்கழகத் துணைவேந்தர் என்.டி.சுந்தரவடிவேல், சிவாஜிகணேசன், மார்க்சிஸ்ட் கட்சித் தலைவர் பி. இராமமூர்த்தி, சென்னை பகுத்தறிவாளர் கழகத் தலைவர் சி.டி. நடராசன், ஏ.பி.சனார்த்தனம் எம்.எல்.சி., தமிழ்நாடு சர்வீஸ் கமிஷன் தலைவர் இராமசுப்பிரமணியன், தமிழக அரசு செயலாளர்கள், பல்வேறு துறையைச் சேர்ந்த இயக்குநர்கள் இன்னும் இனத்தால் ஒன்றுபட்ட லட்சக்கணக்கான தமிழர் கூட்டம் உள்ளத்தால் ஒன்றுபட்டு நாமும் ஒரு இனம் என்ற மரியாதையைத் தேடித் தந்த தலைவர் பெரியார் அவர்களின் உடலுக்கு மலர் வளையங்களும் மலர் மாலைகளும் சூட்டிச்சூட்டி மரியாதை தெரிவித்து, கதறிக் கதறி அழுத வண்ணமே இருந்தனர்.

நடிகர் சிவாஜி கணேசன் மலர் வளையம் வைத்துவிட்டு, பெரியார் காலடியில் தலைவைத்துக் கதறி அழுதார். தந்தை பெரியார் அவர்களே! கல்வி உரிமை மறுக்கப்பட்ட சமுதாயத்தில் பிறந்த நாங்கள் எல்லாம் கல்வி உரிமையும் உத்தியோக வாய்ப்பும் பெற்றது உங்கள் தொண்டால் அல்லவா? என்ற நன்றி உணர்வோடு ஆயிரமாயிரம் அரசு ஊழியர்கள் அய்யா அவர்கட்கு இறுதி வணக்கம் செலுத்தினர்.

ஆசிரியர் கி.வீரமணி  அய்யாவின் உடலின்மேல் கழகக் கொடியால் போர்த்தி கூவி அழுத காட்சியையும், அன்னை மணியம்மையார் அய்யா அவர்களின் அருகே வந்து கைகூப்பி வணங்கி ஆற்றொணாத் துயரச் சுமையைத் தாங்க முடியாது நின்ற காட்சியையும் கண்டு மக்கள் வெள்ளம் துயரத்தின் எல்லையில் உணர்ச்சி மயமாக ஓவென்று கதறினர், புலம்பினர்.
mani

ஆண்கள் கூட்டத்திற்குச் சமமாக பெண்கள் கூட்டம் பெருக்கெடுத்துக் காணப்பட்டது. பெண்ணடிமையைத் தீர்த்த தந்தை என்பது மட்டுமல்ல, பெரியார் என்ற பட்டத்தையும் அய்யா அவர்கட்கு வழங்கிய இனமும் பெண் இனம்தான். அய்யா அவர்களை நன்றியோடும் உரிமையோடும் பெண்கள் அணி அணியாகத் திரண்டு வந்து தங்கள் நன்றிப் பெருக்கைக் கண்ணீர்ப் பெருக்கோடு கலந்துவிட்டனர்.

மாவட்டக் கழகத் தலைவர்கள், செயலாளர்கள் லட்சோபலட்சக் கழகத் தோழர்கள் – கருஞ்சட்டைப் படைத் தொண்டர்கள் குடும்பம் குடும்பமாகத் திரண்டு வந்து தங்கள் ஒரே தலைவருக்கு இறுதி மரியாதை தெரிவித்து எங்களை எல்லாம் அனாதையாக விட்டுவிட்டுச் சென்றுவிட்டீர்களே அய்யா என்று குமுறிக் குமுறி அழுது இதயச் சுமையை வெளிப்படுத்தினர்.

 

பிற்பகல் 5.30 மணிக்கு அமைச்சர் அன்பில் அவர்கள் டில்லியிலிருந்து நேரே ராஜாஜி மண்டபத்துக்கு வந்தார். மீளாத் துயிலேறி நின்ற மனிதாபிமானச் சிற்பியைக் கட்டிப் பிடித்துக் கொண்டு கோவென்று கதறினார்.

மேலவைத் தலைவர் மாண்புமிகு சி.பி.சிற்றரசு, ஸ்தாபன காங்கிரஸ் தலைவர் கு. காமராஜ், சட்டப் பேரவைத் தலைவர் புலவர் கோவிந்தன், புதுவை முதல்வர் மாண்புமிகு பருக் மரைக்காயர், துணை சபாநாயகர் சீனிவாசன், தமிழரசு கழகத் தலைவர் ம.பொ.சி., தமிழ்நாடு ஸ்தாபன காங்கிரஸ் தலைவர் பி.இராமச்சந்திரன், செயலாளர் திண்டிவனம் இராமமூர்த்தி, கருத்திருமன், டி.கே.பகவதி எம்.எல்.சி., டாக்டர் கிருஷ்ணசாமி, எம்.ஜி. இராமச்சந்திரன், கே.ஏ. கிருட்டிணசாமி எம்.பி., எஸ்.டி.சோமசுந்தரம் எம்.பி., முரசொலி மாறன் எம்.பி., இரா.செழியன் எம்.பி., கோவை செழியன் எம்.எல்.ஏ., தமிழ்நாடு கம்யூனிஸ்ட் கட்சித் தலைவர் மணலி கந்தசாமி எம்.எல்.ஏ., மூக்கையாத் தேவர் எம்.எல்.ஏ., ஏ.ஆர்.பெருமாள் எம்.எல்.ஏ., எஸ்.எஸ். இராஜேந்திரன் எம்.பி., நடிகமணி டி.வி.நாராயணசாமி, துரைமுருகன் எம்.எல்.ஏ., ஏ.வீராசாமி எம்.எல்.ஏ., என். கிட்டப்பா எம்.எல்.ஏ., சம்பத் எம்.எல்.ஏ., மார்க்சிஸ்டு கம்யூனிஸ்ட் கட்சி ஏ.எஸ்.கே. அய்யங்கார், மருத்துவக் கல்வி இயக்குநர் டாக்டர் நாராயணன், சென்னை மாநகராட்சி ஸ்பெஷல் ஆபீசர் அந்தோணி அய்.ஏ.எஸ்., மாவட்ட நீதிபதி சத்தியேந்திரன், ரிசர்வ் பாங்கு ஊழியர் சார்பாகவும் விடுதலை பணிமனையின் சார்பாக அனைத்து ஊழியர்களும் தனித்தனியாக தங்கள் சார்பிலும் மலர் மாலைகள் சூட்டி வணங்கி இறுதி மரியாதையைத் தெரிவித்துக் கொண்டனர்.

தொழிற்சங்கத் தலைவர் குசேலர், முன்னாள் மேயர் கணேசன், ராசாராம் எம்.எல்.ஏ., இளங்கோவன் எம்.எல்.ஏ. ஆகியோர் இறுதி மரியாதை செலுத்தினர்.
மதுரை மாநகர மேயர் வணக்கத்திற்குரிய முத்து எம்.எல்.சி. அவர்கள் மலர் மாலை சூட்டி எங்களை விட்டுவிட்டுப் போய்விட்டீர்களே அய்யா! என்று கோ என்று கதறினார். பக்கத்தில் இருந்த தோழர்கள் அவரைச் சமாதானப்படுத்தி அழைத்துச் சென்றனர். அமைச்சர் சத்தியவாணி முத்து அய்யா அவர்களின் காலைப் பிடித்துக் கொண்டு கதறிக் கதறி அழுதார். மலர் மாலை சூட்டி தனது இறுதி மரியாதையை இன ஏந்தலுக்குத் தெரிவித்தார்.

புதுவை மாநில அமைச்சர் மாண்புமிகு ஆறுமுகம், சி.ஆர்.நரசிம்மன், கா. சுப்ரவேலு எம்.பி., புதுவை சிவம் எம்.பி., விழுப்புரம் சண்முகம் எம்.எல்.ஏ., உலகநம்பி எம்.பி., முதல்வரின் துணைவியார் தயாளு அம்மையார், அமைச்சர் மாண்புமிகு எஸ்.ஜே. சாதிக்பாட்சா, கந்தப்பன் எம்.எல்.ஏ., தி.மு.க. துணைப் பொதுச்செயலாளர் எல்.கணேசன் எம்.எல்.ஏ., அறிவழகன் எம்.எல்.சி., மாரிசாமி எம்.பி., சட்டக் கல்லூரி முதல்வர் பழனிசாமி, பராங்குசம் எம்.எல்.சி., கல்கி சதாசிவம், ஈரோடு அங்கப்பச் செட்டியார், அமைச்சர் மாண்புமிகு ஓ.பி.இராமன், நடிகவேள் எம்.ஆர்.இராதா, டாக்டர் ஹண்டே எம்.எல்.ஏ., சினிமா அதிபர் எம்.ஏ.வேணு, நடிகர் காகா ராதாகிருட்டிணன், நடிகை விஜயகுமாரி, பாடகர் சீர்காழி கோவிந்தராஜன், செயராமன் எம்.எல்.ஏ., சுப்ரீம்கோர்ட் நீதிபதி ஜஸ்டிஸ் அழகிரிசாமி, திருப்பத்தூர் இராமசாமி எம்.எல்.ஏ., பாண்டிச்சேரி வி.சுப்பையா, ஏ.என். சட்டநாதன், இந்திய கம்யூனிஸ்டு கட்சி எம். கலியாணசுந்தரம் எம்.பி., என்.ஜி.ஓ. சங்கச் செயலாளர் சுப. சீதாராமன், காட்டூர் கோபால் எம்.எல்.சி., ஆடுதுறை இராசமாணிக்கம் எம்.எல்.ஏ., தவத்திரு குன்றக்குடி அடிகளார் எம்.எல்.சி., (பட்டாடை போர்த்தி கலங்கிய கண்களுடன் இறுதி மரியாதை செலுத்தினார்) தமிழ்நாடு கால்நடை உதவியாளர் சங்கத்தின் சார்பாக சங்கத் தலைவர் இரா. இரத்தினகிரி, ஜஸ்டிஸ் நடராசன், கவிஞர் எஸ்.டி.சுந்தரம், முன்னாள் போலீஸ் கமிஷனர் குழந்தைவேலு, பவுத்த பிக்குகள், நாகை இராசமாணிக்கம் எம்.எல்.ஏ., எஸ்.ஆர்.எம்.யூ. தோழர்கள், அண்ணாமலைப் பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தர் டி.எம். நாராயணசாமி பிள்ளை, து.ப.அழகு முத்து எம்.எல்.ஏ., நடிகர் எம்.ஆர்.ஆர்.வாசு.,

விருதுநகர் வி.வி.இராமசாமி, சென்னை மாவட்ட நீதிபதி சிதம்பரம், முன்னாள் தமிழக முதல்வர் பக்தவத்சலம், பாபநாசம் கணபதி, எம்.எல்.ஏ., ஈரோடு சின்னசாமி, எம்.எல்.ஏ., கோவை இராமநாதன், எம்.எல்.சி., சாமிநாதன் எம்.பி., சக்தி கு.கதிர்வேல், தருமபுரி மாவட்ட ஆட்சித் தலைவர் பண்டரிநாதன், தொழிலதிபர் கோவை வி.பாலகிருஷ்ணன், (விஜயலட்சுமி மில்ஸ்). தஞ்சை நடராசன் எம்.எல்.ஏ., குளித்தலை கந்தசாமி எம்.எல்.ஏ., ஈ.ஆர்.கிருஷ்ணன் எம்.பி., பழனியம்மாள் எம்.எல்.ஏ., சினிமா டைரக்டர் கே.எஸ்.கோபால கிருஷ்ணன், என்.எஸ்.எஸ்.மன்றாடியார், நெடும்பலம் என்.எஸ்.இராமலிங்கம், பாடகர் டி.எம்.சவுந்தரராஜன் ஆகியோரும், தமிழ்நாடு டிப்ளமா இன்ஜினியரிங் சங்க சார்பாகவும், தமிழ்நாடு இன்ஜினியர் சங்க சார்பாகவும் மலர் வளையம் வைத்து வணங்கினர்.

டி.என். அனந்தநாயகி எம்.எல்.ஏ., தமிழ்நாடு இந்திரா காங்கிரஸ் தலைவர் இராமையா, செயலாளர் ஏ.கே. சண்முக சுந்தரம், புலவர் ந. இராமநாதன், மரூர் என்.தர்மலிங்கம் எம்.எல்.ஏ., சிட்டிபாபு எம்.பி., நாகூர் அனிபா எம்.எல்.சி., தில்லை வில்லாளன் எம்.பி., முன்னாள் அமைச்சர் கக்கன், பெங்களூர் பேராசிரியர் தர்மலிங்கம், தமிழ்நாடு முஸ்லிம் லீக் தலைவர் அப்துல் வகாப் ஜானி எம்.எல்.சி, டி.செங்கல்வராயன் தமிழ்நாடு பிரதம நீதிபதியார், திராவிட மாணவர் முன்னேற்றக் கழகம், சென்னை மாவட்ட தாழ்த்தப்பட்ட மாணவர்கள் சங்கம், கிண்டி கோபால் எம்.எல்.ஏ.,

ஏ.வி.பி. ஆசைத்தம்பி, புதுவை அமைச்சர் ராமச்சந்திர ரெட்டியார், தமிழ்நாடு முடி திருத்துவோர் மயிலைக் கிளைச் சங்கம், விசுவநாததாஸ், முடிதிருத்துவோர் சங்கம், டாக்டர் விஜயலட்சுமி, பொன். சொக்கலிங்கம் எம்.எல்.ஏ., பி அண்ட் சி தொழிலாளர்கள் சங்கம், தியாகராய நகர் காய்கறி விற்பனையாளர் சங்கம், அய்.சி.எப். லேபர் யூனியன், தமிழ்நாடு சலவைத் தொழிலாளர் முன்னேற்றச் சங்கத்தின் சார்பில் பொதுச் செயலாளர் பத்மநாதன், ஈசன் இன்ஜினியரிங் குரூப் நிறுவனம், கோ.சி.மணி எம்.எல்.சி., கல்வித்துறை இயக்குநர் திரு. சிட்டிபாபு, சினிமா டைரக்டர் ஏ.எல்.சீனிவாசன், இந்தியக் குடியரசு கட்சியின் சார்பில் அல்போன்ஸ், பூண்டி நீரியல் ஆய்வுக்கூட ஊழியர்கள், அதன் இயக்குநர் இன்ஜினியர் குமாரசாமி, புதுவை முன்னாள் அமைச்சர் வெங்கடசுப்பாரெட்டியார், தாழை மு. கருணாநிதி எம்.எல்.ஏ.,கருப்பையா மூப்பனார், இந்து அறநிலைய கமிஷனர் கே.எஸ்.நரசிம்மன், ஜோதி வெங்கடாசலம், இன்னும் பல்வேறுபட்ட தொழிற்சங்கக் கிளைகள், திராவிட கழகக் கிளைகள், பல்வேறு அரசியல் கட்சிகளின் கிளைகள் சார்பாகவும், ஏட்டில் எடுத்து அடக்கமுடியாத எண்ணிறைந்த கழகத் தோழர்கள் அலுவலர்கள், பொதுமக்கள் சார்பாகவும் மலர் மாலைகளும் மலர் வளையங்களும் குவிக்கப்பட்டு ஆற்றொணாத துயரப் பெருஞ்சுமையோடு இறுதி மரியாதையை இன ஏந்தலுக்குத் தெரிவித்த வண்ணமாகவே இருந்தனர். – அய்யாவின் அடிச்சுவட்டில் புத்தகத்திலிருந்து.

தந்தை பெரியாருக்கு வீர வணக்கம் ! வீர வணக்கம் !!

Leave a comment