Uncategorized

தமிழகம் கண்ட ஒப்பற்றத் தலைவர் – பெரியார் !

பி.ஏ.கிருஷ்ணனுக்கு அறிமுகமெல்லாம் தேவையில்லை. பெரியவர், அறிவு ஜீவி, முகநூலில் நாள் தோறும் கருத்துச் சொல்பவர். என்ன, யாரேனும் பத்து பேர் பெரியாரைப் புகழ்ந்து விட்டால் உடனே குறை கூறி ஒரு பதிவைப் போடுவார். அதற்கு மறுப்புரை கூறினாலும் அதை ஏற்றுக் கொள்ளாமல் உங்களையே திட்டுவார், மேலும் பேசினால் பெரியாரிய மூடன்/கோமாளி/நாஜி போன்ற பட்டங்களைக் கொடுப்பவர். அவ்வப்போது பெரியாரைப் போன்று தமிழருக்காக உழைத்தவர் யாருமில்லை என்று சொல்லுவர்; ஆனாலும் கடவுள் மறுப்பு.இந்து மத எதிர்ப்பு, பார்ப்பன எதிர்ப்பு எனப் பார்க்கும் போது மட்டும் உள்ளே இருக்கும் அந்நியன் வெளிப்பட்டு கைக்கு வந்தபடி பதிவிடுவார்..

விசயம் என்னவென்றால் பெரியார் பிறந்தநாள் பதிவாக ஒரு பதிவை அய்யா எழுத அது thewire இணையத் தளத்தில் வந்து இருக்கிறது. வட நாட்டில் ஏராளமான தலைவர்கள் இருந்தார்கள், அப்பிடி யாரும் இல்லையென்பதால் வன்மம் நிறைந்த கருத்துக்களைப் பேசி/எழுதிய பெரியாரை திராவிடர்கள் கொண்டாடுகிறார்கள் என்பதே அப்பதிவு பேசும் கருத்து. அதற்குச் சான்றாக பெரியாரின் எழுத்துக்களையேக் காட்டியிருக்கிறார்.

1938-ல் எழுதிய ஒரு கட்டுரையின் ஓரிரு வரிகளைக் காட்டி பெரியாரை ஹிட்லருடன் ஒப்பிடுகிறார். அதைத் தனியாகப் படித்தால் ஹிட்லரின் நாஜி ஒருவர் எழுதியது போலிருக்குமாம்.
// “The Jews are only interested in themselves, and nobody else. They somehow contrive to have the rulers in their pocket, participate in governance and conspire to torture and suck the lives out of other citizens in order that they live (in comfort).” These blatantly anti-semitic lines were penned on March 20, 1938, when Hitler’s flag was flying high. If you had read them in isolation and if you were familiar with the history of the Nazis, it is likely that you would think they must have been fished out of some sordid pro-Nazi tabloid. //
20.03.1938 அன்று குடி அரசில் “பார்ப்பனர்கள் ஆரியர்களா? யூதர்களா? அவர்கள் யூதர்களே! – ஒரு சந்தேகம்” என்றத் தலைப்பில் ஒரு கட்டுரை. அதில் பார்ப்பனர்களையும், யூதர்களையும் ஒப்பிட்டுக் கேள்வி கேட்கிறார்.

“எருசலேம் தேவாலயமும் இந்து கோவில்களும் சுற்றுப்பிரகாரம், தெப்பக்குளம், கொடிமரம், மண்டபம் , மூலஸ்தானம், தூபம், பூசை முதலிய விஷயங்களில் ஒன்றுபட்டிருக்கிறது.

பாலஸ்தீன நாட்டில் பிரதான புருஷர்களை தெய்வமாக கொண்டாடும் வழக்கம் இருக்கிறது. இந்தியாவிலும் பிரதான புருஷர்களை தெய்வமாக கொண்டாடும் வழக்கம் இருக்கிறது. ஆகையால் இவ்வழக்கம் அங்கிருந்து தானே வந்திருக்கவேண்டும்?

பிள்ளையார் கோவிலுள்ள நாகம் அரசமரம் வேம்பு முதலியவற்றிற்கும் முறையே ஏதன் சர்ப்பத்திற்கும் தேவதாரு மரத்துக்கும் நன்மை தீமை அறியும் மரத்துக்கும் ஒற்றுமை இல்லையா?

இவ்வொற்றுமைகள் எப்படி ஏற்பட்டிருக்க முடியும்?

யூதர்கள் கடவுளால் தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள் என்பதற்கும் பார்ப்பனர்கள் கடவுள் முகத்திலிருந்து சிருஷ்டிக்கப்பட்டவர்கள் என்பதற்கும் என்ன வித்தியாசம். யூதர்கள் தீபதூபம் காட்டி மணியடிக்கின்றார்கள் என்பதற்கும் பார்ப்பனர்கள் அதே மாதிரி அர்ச்சகர் என்பதற்கும் ஒற்றுமை இல்லையா?

யூதர்கள் மற்ற ஜாதியாரோடு கலந்து கொள்ளாமல் ஒதுக்கி நிர்ப்பவர்கள் என்பதற்கும், பார்ப்பனர்கள் மற்ற ஜாதியாரோடு கலந்துகொள்ளாமல் ஒதுங்கி நிற்கிறதற்கும் ஒற்றுமை இல்லையா?

யூதர்களுக்கு குடியிருக்க குறிப்பிட்ட நாடு இல்லை நாட்டுப்பற்றும் இல்லை என்பதற்கும் பார்ப்பனர்களுக்கு குறிப்பிட்ட ஊர் இல்லை என்பதற்கும் நாட்டுப்பற்று இல்லை என்பதற்கும் ஒற்றுமை இருக்கிறதா? இல்லையா?

யூதர்கள் கதைகளும் சித்தாந்தங்களும் பகுத்தறிவுக்கு முரணான கற்பனைகள் என்பது போலவே பார்ப்பனர்களின் புறாணங்களும் அவர்களது சித்தாந்தங்களும் போதனைகளும் பகுத்தறிவுக்கு முரணானதாக இருக்கிறதும் மிக மிக பொருத்தமானதாக இருக்கிறதா இல்லையா?

யூதர்கள் வீரங்கொண்டு மக்களை ஆளாமல் வகுப்பு வாதத்தாலும் மற்றும் பிரிவினைகளாலும் பிரித்து வைப்பதில் கைதேரியவர்கள் போலவே பார்ப்பனர்களும் இருப்பதால் இருவரும் ஒரே வகுப்பினர் என்று சொல்ல இடமிருக்கிறதா இல்லையா?

வடிவத்திலும் நிரத்திலும் யூதர்களும் பார்ப்பனர்களும் ஒன்றுபோல் இல்லையா?

இந்த பார்ப்பனர்களை ஆரியர்கள் என்பதை விட யூதர்கள் என்பது பொருத்தமாக இல்லையா?

ஆகவே இப்பொருத்தங்களை சரியானபடி கவனித்து ஆறாய்ச்சி செய்து பார்த்து பார்ப்பனர்கள் யூதர்களா அல்லவா என்பதை தெரிவிக்கும்படி ஆராய்ச்சியாளர்களை வேண்டிக்கொள்ளுகிறேன்.

சில ஒப்புமைகளைச் சுட்டி ஆரியர்களுக்கும், யூதர்களும் தொடர்பு உண்டா இல்லையா எனக் கேட்கிறார். அதையும் ஆராய்ச்சி செய்து அறிவிக்க வேண்டுகிறார். இதில் என்ன ஹிட்லரை கண்டாரோ ?

பெரியாரை விடுங்க.. படிக்காதவர்… Powell, A.E.என்பவர் எழுதிய  “The Solar System: A Complete Outline of the Theosophical Scheme of Evolution”  (1930) என்ற புத்தகத்தில் யூதர்கள் ஆரிய இனத்தைச் சேர்ந்தவர்களே என்கிறார். (Thus, according to the teachings of Theosophy, the Jews are part of the Aryan race)
race

இட ஒதுக்கீடு என்பது பெரியாரின் சொத்து இல்லை ; ராஜாஜி போன்ற பார்ப்பனரைத் தலைவராகக் கொண்ட காங்கிரஸ் அரசு (1947) கூட அதை விரிவாக்கியது என்று ஒரு போடு போடுகிறார்.
பெரியார் காங்கிரஸ் கட்சியில் சேர்ந்த கதை தெரியுந்தானே. பெரியார் ஈரோடு நகர்மன்றத் தலைவராக இருந்தார் (1918). அப்போது சேலம் நகர சபைத் தலைவர் இராஜாஜி. அவர் வந்து பெரியாரை காங்கிரஸ் கட்சியில் சேர அழைக்க பெரியார் ஒரு நிபந்தனை விதிக்கிறார். அதுதான் வகுப்புவாரி உரிமை. காங்கிரஸ் வகுப்புவாரி கொள்கையை ஏற்றக் கொள்ள வேண்டும் எனவும், பதவி/வேலை வாய்ப்புகளில் 50%பார்ப்பனர் அல்லாதவர்களுக்குத் தர வேண்டும் எனக் கேட்க இராஜாஜி ஒப்புக் கொண்டதால் ஈரோடு நகர் சபை தலைவர் பதவியைத் துறந்து காங்கிரஸ் கட்சியில் இணைந்தார்.

1919
திருச்சியில் நடந்த 25 ஆவது ‘இராஜிய மாகாண காங்கிரஸ் கான்பரன்சில்’ வகுப்புவாரித் தீர்மானத்தைக் கொண்டு வந்தார் பெரியார். தலைவராயிருந்த இராஜாஜி இப்பத்தானே வந்திங்க.. பிறகு பார்த்துக் கொள்ளலாம் எனத் தள்ளி விட்டார்.

1920
திருநெல்வேலியில் இராஜிய காங்கிரஸ் மாகாண மாநாட்டில் மீண்டும் தீர்மானத்தைக் கொண்டு வந்தார். தலைவர் இன்னொரு பார்ப்பனர் திரு.எஸ்.சீனிவாச அய்யங்கார். வகுப்புவாரி தீர்மானம் பொது நன்மைக்குக் கேடு எனக் கூறி அனுமதி மறுத்தார்.

1921
தஞ்சாவூரில் காங்கிரஸ் மாகாண மாநாடு. அப்போது தலைவராயிருந்த இராஜாஜி (எ) சி.இராஜகோபாலாச்சாரியார் ‘இதனைக் கொள்கையாக வைத்துக் கொள்வோம் ; தீர்மான ரூபமாக வேண்டாம் எனச் சொல்லித் தடுத்தார்.

1922
திருப்பூரில் நடந்த 28வது மாகாண காங்கிரஸ் மாநாட்டிலும் அனுமதி மறுக்கப்பட்டது.

1923
சேலத்தில் மாகாண காங்கிரஸ் மாநாடு.மாநாட்டுத் தலைவர் பெரியார். வகுப்புவாரித் தீர்மானத்தைக் கொண்டு வர அங்கே இருந்த பார்ப்பனத் தலைவர்களும் அவர்களின் ஆதரவாளர்களும் கூச்சலிட்டு கலவரம் செய்தனர். அதனைக் கண்ட திரு.ஜார்ஜ் ஜோசப்பும், திரு, வரதராஜூலு நாயுடுவும் தீர்மானத்தை நிறுத்தி விட்டார்கள்.

1924
வைக்கம் போராட்டத்தை வெற்றிகரமாக முடித்து விட்டும், சேரன்மாதேவி குருகுலப் போராட்டத்தையும் முடித்து விட்டு திருவண்ணாமலையில் நடந்த 30வது மாகாண மாநாட்டில் தலைவராக இருந்து வகுப்புவாரித் தீர்மானத்தைக் கொண்டு வந்தார். எஸ்.சீனிவாச அய்யங்கார் சென்னையிலிருந்து ஏராளமான ஆட்களைக் கூட்டிக் கொண்டு வந்து தீர்மானத்தைத் தோல்வியுறச் செய்தார்.

1925
– காஞ்சிபுரம் மாகாண மாநாடு. தலைவர் திரு.வி.க. இந்த முறை எப்பிடியும் தீர்மானத்தை வெற்றி பெறச் செய்துவிடலாம் என்ற நம்பிக்கையோடுத் தீர்மானத்தைக் கொண்டு வந்தார். பார்ப்பன சூழ்ச்சியால் திரு.வி.க “பொது நன்மைக்காக இத்தீர்மானத்தை அங்கீகரிக்க முடியாது” என அனுமதி மறுத்தார். பஞ்சாயத்தாடா இது எனத் தோளில் இருந்தத் துண்டை உதறிப் போட்டுக் கொண்டு போனவர் திரும்ப காங்கிரஸ் பக்கம் கால் வைக்கவில்லை. பெரியார் காங்கிரசில் இருந்த போது வகுப்பு வாரி இட ஒதுக்கீட்டு பற்றிய நிலைப்பாடு. இவர்கள்தான் இட ஒதுக்கீட்டை தூக்கி நிறுத்துவதாகச் சொல்வது ஒரே சிரிப்பு சிரிப்பா வருது சார். 1947-ல் காங்கிரஸ் ஆட்சியிலிருந்த போது முதல்வர் ஓமாந்தூர் பிராமணரால்லாத பிற்படுத்தப்பட்ட இந்துக்களைத் தனியாகச் சேர்த்து இட ஒதுக்கீட்டை அறிமுகப்படுத்தினார். ஆனால் 1934-ல் மத்திய அரசு கொண்டு வந்த “சென்னை மாகாண பார்ப்பனர் அல்லாதோர் இட ஒதுக்கீட்டுச் சட்டம் ” மூலம் அப்போதைய இம்பீரியல் வங்கி, தனியார் இயக்கி வந்த தென்னக இரயில்வே,தென் மராத்தா இரயில்வே (1944 க்குப்பின்) ஆகியவற்றில் இட ஒதுக்கீடு வழங்கப்பட்டு வந்ததை 1947 ஆம் ஆண்டு செப் 30 அன்று இரத்து செய்தது நேரு தலைமையிலான இந்திய அரசு. அதாவது விடுதலை அடைந்த ஒன்னரை மாதத்தில். அதற்கு மேல் பொறுத்துக் கொள்ள முடியவில்லை. உண்மை இப்பிடி இருக்க இட ஒதுக்கீட்டைச் சொந்தம் கொண்டாட காங்கிரஸ் பார்ப்பன தலைவர்கள் முன்னிறுத்துவது மிகப் பெரிய காமெடி.

பின் 1950-ல் இட ஒதுக்கீட்டை ரத்துச் செய்ய வழக்குப் போட்டதும் பார்ப்பனர்கள்தான், அவர்களுக்கு ஆதரவாக (அரசுக்கு எதிராக) வழக்காடி அதில் வெற்றி பெற்றிஇட ஒதுக்கீட்டை ரத்து செய்ய வைத்ததும் ஒரு பார்ப்பனர்தான்( அல்லாடி கிருஷ்ணசாமி ஐயர்). நீதிமன்றம் இட ஒதுக்கீட்டை ரத்து செய்த போது நடந்த பெரியாரின் போராட்டத்தை கிருஷ்ணன் அய்யாவே ஒத்துக் கொள்கிறார். முதல் சட்டத் திருத்தத்தை நேரு கொண்டு வந்ததைச் சொல்லியிருக்கிறார் அய்யா. அதைக் கொண்டு வரும் போது நேரு ‘இதைக் கொண்டு வரக் காரணம் சென்னை மாகாணத்தில் நடந்த கிளர்ச்சியே’ எனக் குறிப்பிட்டதையும் சொல்லியிருக்கலாம்.

பெரியார் பார்ப்பனீயத்தை மட்டும் எதிர்க்க வில்லை பார்ப்பனரையும் எதிர்த்தார் என்கிறார்.

1-1-1962 அன்று பார்ப்பனத் தோழர்களுக்கு ! என்று ஒரு அறிக்கையை எழுதுகிறார். அதில் பார்ப்பனப் பிரமுகர்கள் – பெரியோர்கள் ஆகியோர்களுக்கு அன்பனாகவும், மதிப்புக்குரியவனாகாவும் நண்பனாகவும் கூட இருந்து வருகிறேன். என்கிறார். தேர்தலுக்குப் பிறகு அரசியல் திட்டம் எதுவாயிருந்தாலும் – சமுதாயத் திட்டம் என்பது பார்ப்பனர் வெறுப்புத் திட்டங்களாகத்தான் இருக்கும். எனக்கு சமுதாயத் துறையில் பார்ப்பனர்களைத் தவிர வேறு யாரும் எதிர்களல்லர். பார்ப்பனர்கள், நான் இப்பிடியெல்லாம் கூறுவதை, ஏதோ மிரட்டுகிறேன் என்பதாகக் கருதி விடக் கூடாது. இந்த நாட்டுச் சமுதாய நலனுக்கும், நாகரிக வளர்ச்சிக்கும் பார்ப்பனர்களுடைய ஆதரவு, ஒத்துழைப்பு இருந்தால் வேகத்தில் நலம் பெறலாம் என்கிற எண்ணத்தில் இவைகளைச் சொல்கிறேனே தவிர, வேறு இதில் சூழ்ச்சியோ, தந்திரமோ, மிரட்டுதலோ இல்லை; கண்டிப்பாக இல்லை. நான் இவைகளை உபயோகப்படுத்துவதில் வெட்கப்படுகிறவன். !

 

பார்ப்பனரும், தி.க.வும் என்ற அறிக்கையில் தெளிவாகச் சொல்கிறார்:
யாரோ சில பிராமணர்கள், “பெரியார் ராமசாமி நாயக்கர், பிராமணர்கள் இந்த நாட்டில் வாழவே கூடாது என்று கூறி வருகிறார். இவரை நீங்கள் எப்பிடி இங்கே கூப்பிட்டீர்கள் என்பதாகக் கேட்டார்கள் என்று ஒருவர் சொன்னார். பிராமணர்கள் இந்த நாட்டில் வாழக் கூடாது என்றோ, இருக்கக் கூடாது என்றோ திராவிடர் கழகம் வேலை செய்யவில்லை. திராவிடர் கழகத்தின் திட்டமும் அதுவல்ல. திராவிடர் கழகத்தினுடைய திட்டமெல்லாம், திராவிடர் கழகமும் நானும் சொல்வதெல்லாம், விரும்புவது எல்லாம்- நாங்களும் கொஞ்சம் வாழ வேண்டும் என்பதுதான். இது பிராமணர்கள் இங்கு வாழக் கூடாது என்று சொன்னதாகவோ, இந்த நாட்டைவிட்டு அவர்கள் போய்விட வேண்டுமென்று சொன்னதாகவோ அர்த்தம் ஆகாது. அவர்களைப் போகச் சொல்லவேண்டிய அவசியமில்லை. அது ஆகிற காரியம் என்று நான் கருதவுமில்லை.

பெரியாரே சொல்லியிருப்பது போல பல பார்ப்பனத் தோழர்கள் பெரியார்க்கு இருந்தார்கள். இராஜாஜி-பெரியார் நட்பே பெரிய சான்றுதானே. பெரியாரின் பின்னே இருந்த தொண்டர் படையின் பலம் தெரிந்ததுதானே. பிள்ளையார் சிலையை உடைக்கச் சொன்ன பெரியார் எந்தக் கோவிலையாவது உடைக்கச் சொல்லியிருக்கிறாரா? இல்லை எந்தப் பார்ப்பனரையாவது அடிக்கச் சொல்லியிருக்காரா? பெரியாரின் கூட்டத்தில் பாம்பு விட்ட பார்ப்பனர்தான் இருந்தனர். செருப்பை வீசிய பார்ப்பனர்தான் இருந்தனர்.

1930 புள்ளி விவரங்களைக் காட்டி பள்ளி,வேலை வாய்ப்புகளில் பார்ப்பன ஆதிக்கம் இல்லை என்பதைக் காட்டுவதற்குப் பதிலாய் இப்போதைய IIT-களில் பார்ப்பன மாணவர்கள்/ஆசிரியர்கள் எண்ணிக்கையைக் கொண்டே மறுத்து இருக்கலாமே அய்யா !!

//In short, while Tamil Brahmins used the opportunities that the British Government provided, it was not that they arm-twisted anybody to get where they did.// என்கிறார்.
மொழிப் போர் குறித்த தம் புத்தகத்தில் ஒரு நிகழ்வைக் காட்டுகிறார்.
அக்ரஹாரத்தில் வசித்து வந்த பிராமணர் ஒருவர்க்கு கை நிறைய வருமானம் வரும் ஜோசியந்தான் தொழில். ஒரு முறை வெளியூரிலிருந்து வீடு திரும்பும் வழியில் தஞ்சை கலெக்டர் அழைப்பதாக செய்தி வரவும் அங்கே சென்றார். அந்த வெள்ளைக்காரக் கலெக்டர் அவரிடம் “உனக்கு எழுதப் படிக்கத் தெரியுமா?” எனக் கேட்க “தெரியும்” எனப் பதிலளித்தார். “கணக்கு பார்க்கத் தெரியுமா?” என அடுத்த கேள்வியைக் கேட்க “ஜோசியம் பார்க்கத் தெரியும், கணக்கும் பார்ப்பேன்” என்றார். விடாத கலெக்டர் “கிராமத்து கணக்கு வேலைகலைப் பார்ப்பீரா” எனக் கேட்க , “கொடுத்தால் பார்ப்பேன்” என்றார். அடுத்த நிமிடம் ஜோசிய பிராமணர் அரசு அலுவலரானார். (ஆர்.முத்துக்குமார் எழுதிய திராவிட இயக்க வரலாறு – பகுதி -1 என்ற நூலிலிருந்து).

//At times, Periyar issued blood-curdling threats to Brahmins, but in action he did not believe in violence. // :)))

“நான் ஏன் ஒரு கூட்டமே ஒழிய வேண்டுமென்று சொல்லுகிறேன்? நம் சமுதாயத்திற்கே களை மாதிரி இருந்துகொண்டு வளரவொட்டாமல் செய்கிறது – அந்தக்கூட்டம். வெட்டுகிறேன் என்று சொன்னேன். குத்துகிறேன் என்று சொன்னேன் என்று புச்சாண்டி காட்டுகின்றனர். அப்படிச் சொல்லுவதன்மூலம் அந்த நாளையே அவர்கள் விரிவுபடுத்துகின்றனர்.

‘காந்தியார் படத்தை எரித்தால் தலைகள் உருளும். இரத்த ஆறு ஓடும், அதற்கு 20,000 பேர் தயார்’ என்று சொன்னார்களே, அவர்களை நீ என்ன செய்தாய்? நான் சொல்லுகிறேன் – ‘சாதி ஒழியாவிட்டால் இரத்த ஆறு ஓடும்’ என்று . ‘சாதி இருக்கத்தான் வேண்டும்’ என்று நீ சொல்லேன்!

இந்த மாதிரிக் கூப்பாடு போட்டால் அரசாங்கம் பிடித்து எங்களை ஜெயிலில் போடும், நாங்கள் பயந்துகொள்வோம் என்பது பார்ப்பனர்கள் நினைப்பு.இது யாரிடம் பலிக்கும்? நான்தான் உயிரைவிடத் தயாராயிருக்கிறேனே! என்னுடைய தொண்டர்களும் தயாராயிருக்கிறார்களே!

வேண்டுமானால், இந்தப் பார்ப்பன சமுதாயத்திற்கு நான் வாய்தா கொடுக்கிறேன், தன்னை அது மாற்றிக் கொள்ளட்டும்!”

இதுதான் அந்த இரத்தம் உறையும் மிரட்டல் போல.

// Periyar was also paranoid that democracy // சமூக விடுதலை அடையாமல் அரசியல் விடுதலை அடைவதால் எந்தப் பலனும் இல்லை என்பதை உறுதியாக நம்பினார். அது உண்மையே என இன்றும் நிரூபணம் ஆகிக் கொண்டிருக்கிறது.

அம்பேத்கர் – பெரியார் நட்பு யாவரும் அறிந்ததே. அதே நேரம் அரசியலமைப்புச் சட்டத்தில் சாதிகளைப் பாதுக்காக்கும் பிரிவுகளை வைத்த போது எரிப்பேன் என்றார். அம்பேத்கர் பற்றி பெரியார் எழுதும் போது:

பதவிக்கு அவர் வந்த உடன் இந்தப் பதவிக்கு நான் வந்ததின் பயனாய் என் இன மக்களின் நலத்துக்கு இப்பதவியைப் பயன்படுத்த முடியுமானால் – என் இன மக்களுக்கு ஏதாவது நலம் செய்ய முடியுமானால் நான் இதில் இருப்பேன், இல்லாவிட்டால் நான் வெளிவந்துவிடுவேன் என்று சொன்னார்.  அதுபோலவே பதவிக்கு அவர் சென்றது முதல் ஒவ்வொரு மூச்சிலும் தன் இனத்தின் பெயரையும் நிலைமையையும் எடுத்துச் சொல்லி சந்தர்ப்பம் கிடைத்த போதெல்லாம் தன் இனத்தின் நலத்துக்கு ஏதாவது காரியங்கள் செய்து கொண்டு எதிரிகளை வெள்ளையாய் கண்டித்துப் பேசி நடுங்கச் செய்தும் வருகிறார். (30.09.1944)

இப்பிடிச் சொன்னவர் அரசியலமைப்புச் சட்டம் வந்த போது அதிலிருந்து சில பிரிவுகளைக் கண்டு வேதனையடைந்து விமர்சித்தார். அது தேவையாய் இருந்தது..

இதற்கு முன்பே 1950இலேயே நான் சொன்னேன், ‘இது மநுதர்ம சாத்திரத்தின் மறுபதிப்பு. ஆகவே, இதைக் கொளுத்தவேண்டும்’ என்று!

இந்தச் சட்டம் எழுதியவர்கள் ஆறு பேர்கள், அதில் நான்கு பேர் பார்ப்பனர்கள். அல்லாடி கிருஷ்ணசாமிஅய்யர், முன்ஷி, டி.டி.கிருஷ்ணமாச்சாரி, கோபால்சாமி அய்யங்கார் ஆகிய பார்ப்பனர்கள் எழுதினார்கள்.மற்றவர்கள் இரண்டு பேரில் ஒருவர் அம்பேத்கர், மற்றவர் ஒரு சாயபு.

அம்பேத்கர் கொஞ்சம் நம் உணர்ச்சியுள்ளவர். அவர் என்னைக் கேட்டார், ‘உன்னுடைய மக்களுக்கு என்ன செய்யவேண்டும்? என்று. நிறைய விவரங்கனையெல்லாம் அவரிடம் கொடுத்தேன். அதையெல்லாம் அவர் பேச ஆரம்பித்தார். உடனே பார்ப்பனர்கள் அவருக்கு விலை கொடுத்து விட்டார்கள்.

அது என்ன விலையென்றால், அவர் தன்னுடைய மக்களுக்கு 100க்கு 10 இடம் கல்வி வசதியில், கேட்டார். அவன், ‘15 –ஆகவே எடுத்துக்கொள்’ என்று சொல்லிவிட்டார்! அவனுக்குத் தெரியும், 25 இடம் கொடுத்தால்கூட அவர்களில் மூன்று அல்லது நான்கு பேர்கூட வரமாட்டார்கள் என்பது. பார்ப்பான் எழுதிக்கொடுத்த சட்டத்தில் அவர் கையெழுத்துப் போட்டுக் கொடுத்துவிட்டார். மற்றவர்களுடைய சங்கதியைப் பற்றி அவர் சிந்திக்கவில்லை. ஒரு சட்டம் எல்லோருக்கும் சமம், சமவாய்ப்பு என்று சொல்லிக் கொண்டு – பார்ப்பனருடைய உயர்வைக் காப்பாற்றி அவர்களுடைய ஏகபோக அனுபவத்திற்குக் கல்வியையும், உத்தியோகத்தையும் தருகிற தென்றால், அது எந்த வகையில் நீதியான, நேர்மையான சட்டம்?

இத்தகைய மோசடிச் சட்டம் ஒழிக்கப்பட்டே ஆகவேண்டும். அந்த முயற்சியாக, 26ஆம் தேதியன்று இந்தச் சட்டத்தைத் தீயிலிட்டுபொசுக்கப் போகிறோம்.

– தோழர் பெரியார், ‘விடுதலை’ அறிக்கை – 16.11.1957

இதுதான் விரிவான அறிக்கை. அரசியலமைப்புச் சட்டக் குழுவில் அம்பேத்கரின் சுகந்திரம் எப்பிடி இருந்தது என்பதை அவர் இந்து சட்டம் கொண்டு வரும் போது பட்டபாட்டைப் பார்த்தாலே தெரிந்து விடும்.. அட, அம்பேத்கரே தேவைப்படும்போது அதை எரிக்கும் முதல் ஆளாக நானே இருப்பேன் என்றுதானே சொன்னார்.

இராமயணத்தை முதலில் கொளுத்தியவர் அம்பேத்கரே. அதற்குப் பின்னரே பெரியார் கொளுத்தினார். அவர்கள் மட்டுமில்லை படிப்பவர்கள் எல்லோரும் கொளுத்த வேண்டியது அவசியமே. பெரியாரின் இராமயணக் குறிப்புகள், இராமாயண ஆராய்ச்சி மற்றும் பல கட்டுரைகள் வால்மீகியின் மூலத்துடன் ஒப்பிடப்பட்டு காண்டம், சருக எண்ணுடன் கொடுக்கப்பட்டிருக்கிறது. பெரியாரின் இராமாயணக் குறிப்புகள் கட்டுரையை ஊர் ஊராகச் சென்று கம்பன் பெருமை பாடும் அய்யா தக்கத் தரவுகளுடன் மறுக்கலாமே !

கம்ப ராமாயணத்தை விமர்சிக்க நேர்ந்தால் கம்பன் பால காண்டம் – உண்டாட்டுப் படலத்தில் அரண்மனைப் பெண்டிர் மது அருந்தி காம மிகுதியில் உளறியத்தைக் கூறுவோம். அதில் என்ன தவறு?

வால்மீகியை விமர்சிக்கும் போது பெண்ணின் சம்மதம் இல்லாமல் தொட்டால் தலை வெடித்து விடும் என்ற சாபத்தைக் கொண்ட ராவணன் சீதையைத் தொட்டுத் தூக்கிக் கொண்டு போனான் என எழுதியிருந்தால் எப்பிடி எனக் கேட்கத்தான் செய்வோம். இப்பிடியெல்லாம் ராவணன் சொன்னதாக வால்மீகி எழுதினால் எப்பிடித் தெரிந்தது என்ற கேள்வி வரத்தான் செய்யும். R1.JPG

R2

அதுனாலதான் கொளுத்திப் போடச் சொல்லுறோம்.

கிருஷ்ணன் அய்யாவிற்கு இதெல்லாம் சாக்குதான். அவரின் கட்டுரை சுத்திச் சுத்தி பெரியாரின் பார்ப்பன எதிர்ப்பில்தான் வந்து நிற்கிறது. பெரியார் அதைக் கையிலெடுக்காமல் இருந்திருந்தால் அவரைக் கொண்டாடியிருப்பார் போலும்.

வர்ணாசிரமம் இந்து மதத்தின் முக்கிய தர்மம். ஒவ்வொரு வர்ணத்தாரும் அந்த வர்ணத்திற்குரிய தர்மத்தை/வேலையைச் செய்யும் போது உயர்ந்தவராகிறான் என்று சொல்லி வர்ணாசிரமத்தைத் தூக்கிப் பிடித்த காந்திதான் வட இந்தியப் பெருந்த் தலைவர் போலும். அத்தோடு // Gandhi was killed by Brahmins because Gandhi was turning into a Periyar himself!// என்றும் ஒரு கருத்து. இதை காந்தியை பெங்களூரில் சந்திக்கும் போதே (1920-களில்) சொல்லி விட்டார். “மதத்தை வைச்சுக்கிட்டு உங்களால் எந்தச் சீர்திருத்தமும் செய்ய முடியாது. அப்பிடி எதுவாது செய்து அது மேல் சாதிக்காரர்களுக்கு எதிராய்ப் போனால் உங்களை கொலை கூட செய்து விடுவார்கள்.” காந்தி ஏன் பார்ப்பனச் சதியால் கொல்லப்பட்டார் என்பதற்கு வேறு எதுவும் விளக்கம் அய்யா சொன்னால் நான் கேட்டுக் கொள்கிறேன்.

சாதிப் பற்றை விடாமல் இறுகப் பற்றிக் கொண்டு பெரியாரை பார்த்தால் அவரின் பார்ப்பன எதிர்ப்பு (மட்டுமே) குற்றமாகத் தெரியும். நான் வேண்டுவதெல்லாம் இன்னும் அதிகமாக இது போன்ற அவதூறுகளை முன்னெடுக்க வேண்டும் என்பதே. எங்களுக்கும் பெரியாரை உலகெங்கும் கொண்டு சேர்க்க வசதியாயிருக்கும்.

நன்றி !

 

Leave a comment