Uncategorized

பெரியார் என்னும் மொழிப் போராளி

பெரியாரை கடவுள் மறுப்பாளராக மட்டுமே நிறுத்தி விட வேண்டுமென ஒரு கூட்டம் கனவு கண்டு பலிக்காமல் போனது. இப்போது இன்னொரு கூட்டம் அவரை தமிழ் மொழியின் எதிரியாகக் காட்டவும், திறனாய்வு என்ற பெயரில் பொய்களைப் பரப்பிக் கொண்டும் உள்ளது. தக்க தரவுகளுடன் அதை மறுத்தாலும் அதைக் கண்டு கொள்ளாமல் தொடர்ந்து அவதூறு பரப்புவது அவர்கள் குறிக்கோள்.

அதன் தொடர்ச்சியாக அவர்கள் திரும்பத் திரும்ப முன்வைப்பது இவற்றைத்தான். 1. பெரியார் தமிழை “காட்டுமிராண்டி மொழி” என்றார். 2. திருக்குறள், கம்ப இராமாயணம் போன்ற தமிழ் இலக்கியங்களின் மீது குறை கூறினார். 3. “தமிழை விட ஆங்கிலமே மேல்” என்றார். பலமுறை இவற்றுக்குத் தனி தனியாக மறுப்புக் கூறி இருந்தாலும், தமிழ் மொழியைப் பற்றிய பெரியாரின் மதிப்பீடு என்ன? ஏன் இப்பிடியெல்லாம் கூறினார் எனச் சுருக்கமாய்ப் பார்க்கவே இந்தப் பதிவு. !

periyar

தமிழ் காட்டுமிராண்டி மொழி  என்றாரே??:

பெரியார் மொழியை  கருத்துக்களைப் பரிமாறிக் கொள்ள உபயோகப்படுத்தும் ஒரு சாதனம் என்றுதான் பார்க்கிறார். mozhiமதத்தின் பெயரால் மொழியின் தொன்மங்களைச் சிதைத்து போலித் தரவுகளையும் , புராணக் குப்பைகளையும் சேர்ப்பதை எதிர்த்தார். போலியாய் ஒரு கதையைக் கூறி அதன் மூலம் மொழிக்குப் பெருமை வருவதைக் கண்டித்தார்.

வடமொழி தமிழில் கலந்து அத்தோடு ஆரிய நால்வருணப் பாகுபாட்டுமுறையும் இலக்கியத்திலும் இலக்கணத்திலும் ஆழ்ந்த தாக்கத்தைச் செலுத்தி வந்தமையை தமிழ் வரலாறு காட்டுகிறது. சங்க இலக்கியங்களைவிடப் புளுகுப் புராணங்களும், வழுநிறைந்த இதிகாசங்களும் பெருமை வாய்ந்தவையெனத் தமிழ்ப்புலவர்களே தலையில் வைத்துக் கொண்டாடும் மனப்போக்கு வேரூன்றிவிட்ட காலத்தில்தான் பெரியார் வருகிறார்.

தொல்காப்பியரின் இயற்பெயர் திரணதூமாக்கினி எனவும்,  அவர் அகத்தியரின் மாணவர் எனவும், அகத்தியரின் மனைவி உலோபாமுத்திரையை ஆற்றில் மூழ்கிவிடாமல் காப்பாற்றும் பொருட்டுத் தொட்டுத் தூக்கிவிட்ட காரணத்தால் அகத்தியரால் சாபமிடப்பட்டவர் எனவும் நிலவிய கதைகளைப் பெரியாருக்கு முன்னர் எந்தப் புலவரும் மறுக்க முற்படவில்லை. வள்ளுவர் – வாசுகி தெய்வீகக் கதைகளை பாடமாகவே படித்துக் கொண்டிருந்தனர். அத்தோடு இலக்கண, இலக்கியங்கள் மெத்தப் படித்த பார்ப்பனர்கள் கையில் இருந்தது. அவைகளை மீட்டுக்க எண்ணினார் பெரியார்.
தமிழறிஞர்களைத்தான் பெரியார் சாடுகிறார். ஆனால் தமிழறிஞர்கள் சாமார்த்தியமாக தங்களை விடுவித்துக் கொள்ள விரும்பி தமிழை பெரியார் சாடுகிறார் என்று கூறி திசை திருப்பி விட்டனர்.

பெரியார் “தமிழும் தமிழரும்” என்ற நூலில் அவரின் கருத்துக்களைத் தெளிவாக முன்வைக்கிறார்.

புலவர்களின் மூட நம்பிக்கையும் பிடிவாதமும்:
புலவர், வித்துவான் என்ற பெயரால் யார் வாழ்ந்தவராக, வாழ்பவராக இருந்தாலும் அவர்கள் பெரிய மதப்பற்றுள்ளவர்களாகவும், மதவாதிகளாகவுமே இருந்து வருவது ஒரு சம்பிரதாயமாகவே ஆகிவிட்டதால் புலவர், வித்துவான் என்றால் மேலும் மூட நம்பிக்கைக்கார்களாகவும், பிடிவாதக்காரர்களாகவும் இருக்க வேண்டியவர்களாக ஆகிவிட்டார்கள்.

பகுத்தறிவு தத்துவ விசாரணை அறவே இல்லாதவர்கள்:
அதிலும் கொஞ்ச காலத்திற்கு முன்வரையில் புலவர்கள் 100-க்கு 90 இச்சகம் பேசி பிச்சை வாங்கும் தொழிலுடையவர்கள் என்று ஆகிவிட்டதால் பொய்யோ,புளுகோ,கற்பனையோ ஏதேதோ பேசி பணம் பெறுவதிலேயே கவலையுள்ளவர்களாகவே வாழ்ந்ததால் தத்துவ விசாரணை என்பது அவர்களுக்கு வெகு தூரமாகவே இருக்க வேண்டியதாகி விட்டது.
ஆகவேதான் புலவர்கள்,வித்துவான்கள் என்பவர்கள் 1௦௦-க்கு 90 பேர்கள் வரை இன்றைக்கும் அவர்களது வயிறு வளர்ப்பதற்கல்லாமல் மற்ற எதற்கும் பயன்படுவதற்கில்லாதவர்களாகவே ஆகி விட்டார்கள்.

பெரியார் தமிழ் பண்டிதர்களைச் சாடுகிறார். பழம் பெருமை மட்டுமே பேசிக் கொண்டு அதன் மூலம் மக்களை முன்னேற்ற எந்த முயற்சியும் செய்யாமல் இருப்பதைத்தான் கண்டிக்கிறார்.

உண்மையில் தமிழ் மொழி பற்றி அவரின் கருத்து எப்பிடியிருந்தது ? தமிழை “தகைமைசால் தமிழ்” என்கிறார். அதெல்லாம் குறை கூறுவோர் கண்ணிற்குத் தெரியாது. தமிழ் பற்றி பின் வரும் கருத்துக்களை பெரியார் முன்வைக்கிறார்.

1. என் சிற்றறிவிற்கு, என் அனுபவத்திற்கு, ஆராய்ச்சிக்கு தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் ஆகிய நான்கும் தனித்தனி மொழிகளென்றோ, அல்லது தமிழ் தவிர மற்ற மூன்றும் தமிழி லிருந்து பிரிந்த மொழிகளென்றோ தோன்றவில்லை. ஒரே மொழி அதாவது  தமிழ் தான் நான்கு இடங்களில் நான்கு விதமாகப் பேசப் பட்டு வருகிறது என்றே நான் அபிப்பிராயப் படுகிறேன்.

2. நான்கு மொழிகளிலும் தேர்ச்சி பெற்ற பண்டிதர்களைக் கொண்டு, அந்தந்த மொழியிலுள்ள வடமொழி வார்த்தைகள் அத்தனையையும் நீக்கிவிட்டுப் பார்த்தால் எஞ்சி நிற்கும் வார்த்தைகள் அத்தனையும் அனேகமாகத் தமிழ்ச் சொற்களாகவே இருக்குமென்று என்னால் அறுதியிட்டுக் கூற முடியும். அகராதி கொண்டு மெய்பிக்கவும் முடியும். சமீப காலம் வரையிலும் கூட அவைகளுக்கு எழுத்தோ, இலக்கியமோ இருந்ததில்லை. தெலுங்கு வைணவர்கள் சமீப காலம் வரை தமிழ்ச் சப்தத்தில் தான் நாலாயிரப் பிரபந்தத்தையும், திருப்பாவையையும், தெலுங்கு எழுத்தில் படித்து பாடி வந்திருக்கின்றனர். அந்தப் புத்தகங்கள் தெலுங்கெழுத்தில், தமிழ்ச் சப்தத்தில் தான் அச்சிடப்பட்டிருக்கின்றன. கன்னடியர்களுக்கும் மலையாளிகளுக்கும் முதல் நூலே கிடையாது.

3. வட நாட்டு ஆதிக்கமும் வடமொழி மோகமும் குறையக்குறைய ஆந்திரர்களும், மலையாளிகளும், கன்னடியர்களும் தம் தாய் மொழி தமிழ் தான் என்பதைக் கொஞ்சம் கொஞ்சமாக உணர்ந்து கொள்வார்கள் என்பதில் எனக்குத் திடமான நம்பிக்கையுண்டு. அந்தந்த மொழி வல்லுனர்கள், பண்டிதர்கள் சிலர் இன்று ஓரளவு இந்த உண்மையை ஒப்புக் கொண்டுள்ளார்கள் என்பது நமக்கு மேலும் நம் கருத்துக்கு வலிமை ஊட்டுகிறது.

4. அது என் தாய்மொழிப் பற்றுதலுக்காக என்று அல்ல. அது என் நாட்டு மொழி என்பதற்காக அல்ல. சிவ பெருமானால் பேசப்பட்டது என்பதற்காக அல்ல. அகத்திய முனிவரால் திருத்தப்பட்ட தென்பதற்காக அல்ல. மந்திர சக்தி நிறைந்தது. எலும்புக் கூட்டைப் பெண்ணாக்கிக் கொடுக்கும் என்பதற்காக அல்ல. பின் எதற்காக? இந்திய நாட்டுப் பிற எம் மொழியையும் விடத் தமிழ், நாகரீகம் பெற்று விளங்குகிறது. தூய தமிழ் பேசுதல் மற்ற வேறுமொழிச் சொற்களை நீக்கிப் பேசுவதால் நம்மிடையேயுள்ள இழிவுகள் நீங்குவதோடு மேலும் மேலும் நன்மையடைவோம் என்பதோடு நம் பழக்க வழக்கங்களுக்கு ஏற்ப நம் மொழி அமைந்திருக்கிறது.

5. வேறு மொழியைப் புகுத்திக் கொள்வதன் மூலம் நம் அமைப்புக் கெடுவதோடு, அம் மொழியமைப்பிலுள்ள நம் நலனுக்குப் புறம்பான கருத்துக்கள் கேடு பயக்கும் கருத்துக்கள் நம்மிடைப் புகுந்து நம்மை இழிவடையச் செய்கின்றன என்பதால் தான் வடமொழியில் நம்மை மேலும் மேலும் அடிமையாக்கும் தன்மை அமைந்திருப்பதால் தான் அதையும் கூடாதென்கிறேன். நமது மேன்மைக்கு, நமது தகுதிக்கு, நமது முற்போக்குக்கு ஏற்ற மொழி, தமிழை விட மேலான ஒரு மொழி இந் நாட்டிலில்லை என்பதற்காகவே தமிழை விரும்புகிறேனே தவிர, அது அற்புத அதிசயங்களை விளைவிக்கக்கூடியது என்பதற்காக அல்ல.

6. தமிழும் ஒரு காலத்தில் உயர்ந்த மொழியாகத்தான் இருந்தது. இன்று அது வட மொழிக்கலப்பால் இடது கைப்போல் பிற்படுத்தப் பட்டது. இந்நோய்க்கு முக்கிய காரணம் மதச் சார்புடையோரிடம் தமிழ் மொழி சிக்கிக் கொண்டதுதான். தமிழில் இருந்து சைவத்தையும் ஆரியத்தையும் போக்கிவிட்டால் நம்மை அறியாமலே நமக்குப் பழந்தமிழ் கிடைத்து விடும். மதத்திற்கு ஆதாரமாயிருந்து வருவன வெல்லாம் வடமொழி நூல்களே ஒழிய தமிழ் மொழி நூல்களில் தற்சமயம் நம் நாட்டில் இருந்து வரும் மதத்திற்கு எவ்வித ஆதாரமும் இல்லையயன்பது இங்கு கவனிக் கத்தக்கது.

7. தமிழைக் கெடுத்தவர்கள், தமிழன் அறிவுக்கு முட்டுக்கட்டை போட்டவர்கள் இந்தத் தமிழ்ப்பண்டிதர்களும், அவர்களின் சைவமும்தான். பண்டிதர்கள் பார்ப்பானைப் போல் உச்சிக் குடுமி வைத்துக் கொண்டு, பட்டை, விபூதியும் பூசிக்கொண்டு “கவைக் குதவாத” கட்டுக் கதைகளை நம் குழந்தைகளுக்குப் போதித்து விட்டனர். திருக்குறள் அறிவைப் பரப்புவதை விட்டு, திருவாசக அறிவையும் பாரத, இராமாயண அறிவையும் பரப்பி விட்டனர். சிந்திக்கத் தவறினார்கள்.

8. தமிழில் ஆரீயம் புகுந்ததால் தான், மற்ற மக்களையெல்லாம் காட்டுமிராண்டிகளாக வாழ்ந்த காலத்தில் கப்பலோட்டி வாணிகம் நடத்திய தமிழர் மரபில், இன்று ஒரு நியூட்டன் தோன்ற முடியவில்லை. ஒரு எடிசன் தோன்ற முடியவில்லை. ஒரு மார்க்கோனி தோன்ற முடியவில்லை என்பதை அறிந்து கொள்ள வேண்டும். தமிழைப் புதுமொழியாக்கச் சகல முயற்சிகளும் எடுத்துக் கொள்ள வேண்டும்.

9. மக்கள்,தேவர்,நரகர் உயர்திணை என்றால் என்ன? நரகர்கள் யார்? தேவர்கள் யார்? இலக்கணத்திலேயே மதத்தைப் போதிக்கும் சூழ்ச்சிதானே இது? இன்றையப் பண்டிதர்களுக்கு உலக ஞானத்தை விடப் புராண ஞானங்கள்தானே அதிகமாய் இருக்கின்றன.

1924-ஆம் ஆண்டு டிசம்பரில் திருவண்ணாமலையில் கூடிய 30-வது காங்கிரஸ் மாநாட்டில் பெரியார் தலைமை தாங்கி பேசிய போது தன் முன்னுரையில் :

ஒரு நாட்டிற் பிறந்த மக்களுக்கு வேண்டப்படும் பற்றுகளுக்குள் தலையாய பற்று மொழிப்பற்றேயாகும். மொழிப்பற்றிராதாரிடத்துத் தேசப் பற்றிராதென்பது நிச்சயம். தேசம் என்பது மொழியை அடிப்படையாகக் கொண்டியங்குவது. ஆதலால், தமிழர்களுக்குத் தாய்மொழிப்பற்று பெருகவேண்டுமென்பது எனது பிராத்தனை. தமிழ்மொழியின் பழமையையும், தமிழ் மக்கள் நாகரிகத்தையும் பழந்தமிழ் நூல்களிற் காணலாம். தமிழரசர்கள் யவனதேசம், ரோமாபுரி, பாலஸ்தீனம் முதலிய தேசங்களோடு வியாபாரம் செய்ததும் அவ்வியாபாரத்திற்கேற்ற தொழில்கள் நாட்டில் நிலைத்திருந்ததும், பிறவும் தமிழ்நாட்டின் முழுமுதற்றன்மையை விளங்கச் செய்யும் அத்தகைய தமிழ்நாடு இப்பொழுது சீரும் சிறப்புமிழந்து அல்லலுறுகின்றது…தமிழ்நாட்டிற் பிறந்தவர்களுக்கு மொழிப்பற்று அவசியம்! அவசியம்! என்று சொல்கிறேன். வங்காளிக்கு வங்கமொழியில் பற்றுண்டு. மகாராஷ்டிரனுக்கு மகாராஷ்டிரா மொழியில் பற்றுண்டு. ஆந்திரனுக்கு ஆந்திர மொழியில் பற்றுண்டு. ஆனால் தமிழனுக்குத் தமிழில் பற்றில்லை. இது பொய்யோ? தமிழ்நாட்டில் தமிழ்ப்புலமை மிகுந்த தமிழர்கள் எத்தனை பேர்? ஆங்கிலப் புலமையுடைய தமிழர்கள் எத்தனை பேர்? என்று கணக்கெடுத்தால் உண்மை விளங்கிப் போகும். தாய்மொழியில் பற்றுச் செலுத்தாதிருக்கும் வரை தமிழர்கள் முன்னேற்றமடையமாட்டார்கள்.

tm2

இதே காரணத்தைக் கொண்டே புராணங்களையும் எதிர்த்தார், அதைக் கொண்டு இயற்றப்பட்ட இலக்கியங்களான கம்ப இராமாயணம், பெரிய புராணம் போன்றவற்றை எதிர்த்தார். மொழியையும், மதத்தையும் பிரிக்க வேண்டும் என்றார். குடியரசு இதழில் 26.01.1936 அன்று எழுதியதைப் பார்த்தாலே இது புரியும்.

kudiyarasu26011936

tm3tm4

இராமாயணத்தை எதிர்த்தற்குக் காரணம் அவர் அதை கந்த புராணத்தின் மறுபதிப்பாகவே பார்த்தார். கந்த புராணத்தைத் தொடர்ந்தே இராவணன், அனுமான், இலங்கை போன்றவைகள் சேர்க்கப் பட்டதாகக் கருதினார்.

ramakp

அதெப்படி பெரியார் கம்ப இராமாயணமும், கந்த புராணமும் ஒன்று எனச் சொல்லாம் எனச் சண்டைக்கு வரும் முன்,
kpkr

மொழி மீதான பெரியாரின் பார்வை அறிவியல் பூர்வமானது. மொழி பற்றிய ஆய்வு நோக்கு இல்லாமல் பின்வருவனவற்றைக் கூற இயலாது. !

“மொழியானது அந்தந்த நாட்டுச் சீதோஷ்ணத்திற்கேற்பவும் அவரவர்களுக்கு வேண்டிய வாழ்க்கை பழக்க, வழக்க, பண்பு, குறிப்புகளுக்கேற்பவும் அமைந்துள்ளன. சில மொழிகள் அதிக சக்தி செலவிடாமல் சுலபமாய் பேசக் கூடிய ரீதியிலும், சில அதிக சக்தியைச் செலவிட்டுச் சிரமத்தோடு பேசக் கூடிய ரீதியிலும் அமைந்திருக்கக் காண்கிறோம். உதாரணமாக வட மொழியிலுள்ள ‘ஹ’ போன்ற சப்தங்கள் அடி வயிற்றிலிருந்து ஆழ் துளைத்துக் கொண்டு வருவது போல் ஒலிக்கிறது.

ஆங்கிலேயனை எடுத்துக் கொள்வோம். அவன் சாதாரணமாகக் குளிர் தேசத்தில் வாழ்பவன். குளிரானது அவனுக்கு “ஹா” என்கிற பெரும் காற்றைத் தள்ளிக் கொண்டு உச்சரிக்க சப்தத்தை இயற்கையாக உண்டாக்கச் சுலபமாக அம்மொழியும், ஏன் – அது போன்ற வட மொழியும் பேச முடிகிறது. ஆனால் என்னதான் தமிழில் பாண்டித்தியம் பெற்றிருந்தாலும், சுத்தமான தமிழில் இலக்கணக் குற்றமில்லாமல்
பேசினாலும் ‘ழ’,’ள’ – இந்த சப்தங்களைச் சரியாக உச்சரிக்க முடிவதில்லை. இந்த சப்தத்திற்கு அவருக்குப் பழக்கமான அந்த சீதோஷ்ணம் சரிப்படாமற் போவதுதான் காரணம். அந்தச் சீதோஷ்ண நிலைக்கேற்ப அமைக்கப்பட்ட அவர் நாக்கு, இந்த சப்தத்தை உச்சரிப்பதற்கேற்ப சுலபத்தில் திரும்ப முடியவில்லை என்பதுதான் காரணம்.”

“சாதி என்ற வடமொழிச் சொல்லைத் தமிழிலிருந்து எடுத்துவிட்டால் அதற்கு சரியான தமிழ்ச் சொல் ஒன்று கூறுங்களேன். பண்டிதர்கள்தான் கூறட்டுமே. வார்த்தையில்லையே ! ஆதலால் நம் மக்களிடையே ஆதியில் சாதிப் பிரிவினை இல்லை என்பது இது வட நாட்டுத் தொடர்பால்தான் ஏற்பட்டது என்பதும் தெரிகிறதா இல்லையா? அந்த வார்த்தையே இல்லாவிட்டால் சாதி பேத உணர்ச்சி அற்றுப் போகுமா, இல்லையா? இதே போல, திவசம், திதி, கலியாணம், வைகுந்தம், சொர்க்கம், மோட்சம், நரகம், சாலோக, சாரூப, சாமீப, சாயுச்சிய என்ற இவ் வார்த்தைகள் வடமொழியா? தமிழா? இவ்வார்த்தைகளின் தொடர்பால் நம் புத்தி தெளிந்ததா? இருந்த புத்தியும் போனதா? சிந்தித்துப் பாருங்கள். !”

எல்லாம் சரிதான், அப்புறம் ஏன் காட்டுமிராண்டி மொழி என்றார்? என வாழைப் பழக் கேள்வி போல மீண்டும் அங்கேயே வந்தால்: மொழியை புனிதமாக கருதுகிற மூடநம்பிக்கையை எதிர்த்து, தமிழை புராணங்களால் நிரப்பி வைத்திருக்கிற தமிழ்ப் புலவர்களின் மோசடியை கண்டித்து, தமிழர்களின் உயர்வுக்கு தமிழை பயன்படுத்தாமல், தமிழர்களின் வீழ்ச்சிக்கு பயன்படுத்திய மதவாத கும்பலை அம்பலப்படுத்தி, தமிழை ‘காட்டுமிராண்டிமொழி’ என்று பெரியார் சொன்னார்.

அதெல்லாம் நீ சொன்னா ஒப்புக் கொள்ள முடியாது என்றால், மறைமலை இலக்குவனார்  சொல்வதைக் கேளுங்கள்.

வடமொழி வல்லாண்மையையும் இந்தியின் கொடுங்கோலாதிக்கத்தையும் அஞ்சாது நின்று எதிர்த்த போராளியாகிய பெரியாரின் மேலுள்ள காழ்ப்பும் பகைமையுமே இக்கூற்றுக்கு அடித்தளமெனல் மிகையன்று. இந்திய நாட்டுப் பிற எம் மொழியையும்விட தமிழ், நாகரிகம் பெற்று விளங்குகிறது. தூய தமிழ் பேசுதல் மற்ற வேறுமொழிச் சொற்களை நீக்கிப் பேசுவதால் நம்மிடையேயுள்ள இழிவுகள் நீங்குவதோடு மேலும் மேலும் நன்மையடைவோம் என்பதோடு நம் பழக்க வழக்கங்களுக்கு ஏற்ப நம் மொழி அமைந்திருக்கிறது. வேறு மொழியைப் புகுத்திக் கொள்வதன் மூலம் நம் அமைப்புக் கெடுவதோடு, அம்மொழியமைப்பிலுள்ள நம் நலனுக்குப் புறம்பான கருத்துகள், கேடு பயக்கும் கருத்துகள், நம்மிடைப் புகுந்து, நம்மை இழிவடையச் செய்கின்றன என்பதால்தான், வடமொழியில் நம்மை மேலும் மேலும் அடிமையாக்கும் தன்மை அமைந்திருப்பதால்தான், அதையும் கூடாதென்கிறேன். நமது மேன்மைக்கு, நமது தகுதிக்கு, நமது முற்போக்குக்கு ஏற்ற மொழி, தமிழைவிட மேலான ஒரு மொழி இந்நாட்டிலில்லை என்பதற்காகவே தமிழை விரும்புகிறேனே தவிர, அது அற்புத அதிசயங்களை விளைவிக்கக் கூடியது என்பதற்காக அல்ல என்னும் தந்தை பெரியாரின் அழுத்தம் திருத்தமான விளக்கம் மொழிக்கலப்புக்கும் வேற்றுமொழி மேலாண்மைக்கும் எதிரான போர்முரசமாக விளங்குகிறது. தந்தை பெரியாரின் நிலைப்பாடு முற்றிலும் தனித்தன்மை வாய்ந்த ஒன்று. இதனைத் தெரிந்து கொண்டவர்களே அவரது பல கருத்துகளையும் உரியமுறையில் புரிந்து கொள்ளமுடியும். தமிழை வழிபட்டு நின்றவர்களிடமிருந்து அவர் விலகி நிற்கிறார். தமிழில் வழிபாடு வேண்டுமென்று அவர் குரல் கொடுத்தாரெனினும் தமிழை வழிபாடு செய்வதனை முற்றிலும் எதிர்த்தார். தமிழைப் போற்றிக் கொண்டாடுவதன் மூலம் அதனைத் தக்க கருத்து வெளிப்பாட்டுக் கருவியாக்கி விட முடியாது என்பது அவர் கருத்து. (24.12.2010 அன்று சென்னை-பெரியார் திடலில் நடைபெற்ற தந்தை பெரியார் நினைவு நாள் கருத்தரங்கில் வழங்கப்பட்ட எழுத்துரை)

செல்லாது ! செல்லாது என்றால், தமிழ்த் தேசியத்தின் தந்தை ‘பாவலரேறு பெருஞ்சித்திரனார்’ சொல்வதைப் பார்த்தால் போதும். அய்யாவை விட தமிழ்ப் பற்று எந்தத் தமிழ் தேசியவாதிக்கும் இருந்து விட முடியாது. 17.9.81 அன்று சென்னைத் தொலைகாட்சியில் ‘வண்ணக் களஞ்சியம்’ நிகழ்ச்சியில் அய்யா பேசியது. PAVAL.JPG

தமிழை விட ஆங்கிலம் பெரிது என்றாரா??

இது அடுத்த குற்றச் சாட்டு. பெரியார் இந்தியை எதிர்த்து ஆங்கிலத்தை ஆதரித்தார். தமிழை பொது மொழியாக்கப் போராடவில்லை.

தமிழ்நாட்டில் இருந்து கொண்டு, தமிழ் நாட்டைப் பற்றி நினைத்துக் கொண்டு தமிழ்நாட்டுக்கு அரசியலுக்கானாலும், இலக்கியத்திற்கானாலும் போதனைக்கானாலும் ஒரு மொழி வேண்டுமானால் நம் தேர்ந்தெடுக்க வேண்டியது தமிழ் மொழி என்பதாகத்தான் தோன்றும் என்பதே பெரியாரின் மொழிக் கொள்கை.

ஆங்கில மொழியை விரும்புவதற்கு பல காரணங்களை பெரியார் அடுக்குகிறார்,
1. “வட மொழித் தொடர்பால் ஏற்பட்ட இன்னல்கள் ஒருவாறு மேலே விளக்கப்பட்டுள்ளன. அதற்கு மாறாக ஆங்கில மொழித் தொடர்பால் நமக்கேற்பட்டுள்ள நன்மைகளையும் அம் மொழியிலுள்ள கருத்துச் செறிவுகளையும் பாருங்கள். ஆங்கில மொழி நூல்களில் முன்னேற்றக் கருத்துகள் மலிந்து கிடக்கிறன. விஞ்ஞான ஆராய்ச்சி அறிவு நூல்கள் ஏராளமாக ஆங்கிலத்தில் இருக்கின்றன.சமதர்மம் வேண்டும், சனாதனம் ஒழிய வேண்டும் என்கின்ற அறிவு, ஆணும் பெண்ணும் சமம் என்கிற அறிவு ஆகிய சகல அரசியல் பொருளாதார முன்னேற்ற அறிவுக் கருத்துக்களையும் ஆங்கில மொழிதான் நமக்குத் தந்தது.”

2. தந்தியையும், மின்சாரத்தையும், படக் காட்சியையும், ஆகாய விமானத்தையும், ரேடியோவையும், எக்ஸ்ரே யையும் அதுதான் அறிமுகப்படுத்தியதேயொழிய, நமது தமிழ் மொழியோ அல்லது அதை அழிக்க வந்த வட மொழியோ அல்ல.

3.அறிவு வளர்ச்சிக்கு பெரும்பாலும் சுற்றுச் சார்புதான் காரணம். ஒரே தகப்பனுக்குப் பிறந்த இரண்டு குழந்தைகளில் ஒன்றை இந்நாட்டிலும் ஒன்றை இங்கிலாந்திலும் வளர்த்து பாருங்கள். இங்கிலாந்திலும்
வளர்த்துப் பாருங்கள். இங்கிலாந்தில் வளர்ந்த மகன் இந்தியாவில் வளர்ந்த மகனை விடப் பல மடங்கு அறிவு விசலாம் அடைந்தவனாகயிருப்பான் என்பது திண்ணம். அவன் எதையும் விஞ்ஞானக் கண் கொண்டு பார்ப்பான் ; இவன் எதையும் மதக் கண்ணோடு பார்ப்பான்.

4. தமிழ் மொழியானது வட மொழியை, இந்தி மொழியை விடச் சிறந்தது என்பதிலும் பயன்படத்தக்கது என்பதிலும் எனக்கு அய்யமில்லை என்றாலும் நாம் இன்றைய நிலைமையை விட வேகமாக முன்னேற வேண்டுமானால் ஆங்கிலந்தான் சிறந்த சாதனம்.

5. ஆங்கிலமே அரசியல் மொழியாகவும், போதனா மொழியாகவும் ஆகுவது அவசியம். ஆங்கிலமே நம் பேச்சு மொழியாவது அவசியம்.

மதத்தின் பெயராலும், சாதியின் பெயராலும் அடிமைப்பட்டுக் கிடந்த மக்களை ஆங்கிலம் படித்தால் அறிவு விரிவடையும் என்பது ஆங்கிலம்  என்ற மொழியின் பெருமைக்காக அல்ல, ஆங்கிலம் படித்தால் ஆங்கிலத்தில் எழுதபப்பட்டிருக்கும் நூல்களைப் படிக்க முடியும் அதனால் அவனின் சமூக நிலையில் மாற்றம் வரும், எனவே ஆங்கிலம் படி என்கிறார் பெரியார். படிப்பின் மூலம் வேலை அவனை பொருளாதார நிலையிலும் முன்னேற்றும். அவன் தன் குலத் தொழிலை நம்பிக் கொண்டு இருக்க வேண்டியதில்லை. அதனால்தான் வீடு வேலைக்காரியிடம் கூட ஆங்கிலத்தில் பேசுங்கள் என்கிறார்.

அவரின் மொழி பற்றிய பார்வை மிகத் தெளிவாய் உள்ளது.
“மொழி என்பது உலகப் போட்டிப் போராட்டத்திற்கு ஒரு போர்க் கருவியாகும். போர்க் கருவிகள் காலத்திற்கேற்ப மாற்றப்பட வேண்டும். அவ்வப்போது கண்டு பிடித்துக் கைக் கொள்ள வேண்டும். நம் பண்டிதர்கள் இந்த இடத்திலும் நம் மொழிக்கு மிக்க அநீதி விளைவித்து விட்டார்கள். தமிழ், சிவனும் சுப்பிரமணியனும் பேசிய மொழி, உண்டாக்கிய மொழி என்று நம் பண்டிதர்கள் கூறுகிறார்கள். அதே சிவனும், சுப்பிரமணியனும் உபயோகித்த போர்க்கருவிகள் இன்று நம் மக்களுக்கு பயன்படுமா? இயற்கையின் தத்துவம் நமது அறிவு வளர்ச்சிக்கேற்ப மாறுதல்களுக்கும் செப்பனிடுவதற்கும் வசதியளிக்கக் கூடியதாகும்.”

ஓ, ஜப்பானிலே, சைனாவிலே எனக் குரல் எழுப்பும் முன் அவைகளிலே எத்தனை சதவீதம் மதக் கலப்பு இருக்கிறது என்று பாருங்க. மக்களை  முன்னேற்றத் தேவையான கருத்துக்கள் உள்ளதையும் பாருங்கள். கடந்த 100 ஆண்டுகளில் தமிழ் மொழியில் எழுதப்பட்ட காப்பியங்கள், இலக்கியங்கள் எத்தனை? அறிவியல் நூல்கள் எத்தனை? இதனைத்தான் பெரியார் கேட்கிறார். நாளை தமிழ் மொழியில் இவை வந்தால் ?? மகிழ்வோடு ஏற்றுக் கொள்வார். அவர்தான் பெரியார். !

திருக்குறளை குறை கூறினாரா?

பெரியார் திருவள்ளுவரை, திருக்குறளைப் பற்றித் தரக்குறைவாக எழுதிவிட்டார் என ஒரு வரியைக் காட்டி கொதித்துக் கொண்டிருந்தார்கள்.valperiyaar

திருக்குறள் மட்டுமில்ல வேறு எதுவெனினும் பகுத்தறிவிற்கு ஒப்பவில்லையெனப் பட்டால் எதிர்ப்பார். அவரின் கருத்துக்கள் தவறு என யாரேனும் தரவுடன் கூறினால் அதை ஏற்றுக் கொள்வார். அதுதான் பெரியார். பெரியார், திருக்குறளில் இருக்கும் சில பழமை வாதக் கருத்துகளை எற்றுக்கொள்ளவில்லையே தவிர, திருக்குறளையே மறுதலிக்க வேண்டும் என்று சொல்லவில்லை, திருக்குறள் என்பதற்காக அது கூறு நோக்கில் ஆய்வுக்கு உட்படாது என்று சொல்ல இயலாது, ஒரு நூலை உங்களுக்கான முன்வடிவமாக ஏற்றுக் கொள்வதும் மறுப்பதும் முற்றிலும், தனி மனித விருப்பு வெறுப்பிற்கு உட்பட்டது என்பதுதான் பெரியாரின் அணுகுமுறையாயிருந்தது.

தெய்வம் தொழாள் கொழுநன் தொழுதெழுவாள் பெய்யெனப் பெய்யு மழை போன்ற குறள்களையும், திருவள்ளுவ புராணம் என்ற பெயரில் எழுதி வைத்த வள்ளுவ – வாசுகி கதைகளைத்தான் கடுமையாச் சாடினார். பெண்ணடிமைக் கருத்துக்கள் எனக் கூறினார். மனு-வும் அதைத்தானே கற்பு என்ற பெயரில் பெண்ணை கீழ்த்தராமாய் பதிந்து வைத்தது.

பெரியார் குறளின் பெருமை உணர்ந்து அதை தமிழகமெங்கும் பரப்பச் சொன்னது அவர்தான். திருக்ககுறள் மாநாடுகள் நடத்தியதும் அவர்தான்.

சென்னை மயிலாப்பூரில் திருவள்ளுவர் கழகச் சார்பில் 14.3.48 இல் நடைபெற்ற 3 ஆம் திருவள்ளுவர் மாநாட்டில் தந்தை பெரியார் ஆற்றிய உரையின் சுருக்கம்: (முழுவதும் இங்கே பார்க்கலாம் : http://malaysia-periyariyakkam.blogspot.ca/2011/01/blog-post_16.html )

பெரியார் உரை:

திருக்குறள் ஆரிய தர்மத்தை-மனுதர்மத்தை-அடியோடு கண்டிப்ப தற்காகவே ஏற்பட்ட நூல் என்பதையும் நீங்கள் உணர வேண்டும். அதுவும் மக்களுக்கு வெறும் தர்மங்களை மட்டும் உபதேசிக்க எழுதப்பட்ட நூல் என்று என்னால் கொள்ள முடியவில்லை. மக்கள் நல்வாழ்க்கைக்குக் கேடாக வந்து சேர்ந்த ஆரிய அதர்மத்தை ஒழிப்பதை நோக்கமாகக் கொண்டு ஒரு மறுப்பு நூலாகவே திருக்குறள் எழுதப்பட்ட தாகவே என்னால் கருத முடிகிறது.

திருக்குறள் ஆரியக் கொள்கைகளை மறுக்க அவைகளை மடியச் செய்ய அக்கொள்கைகளில் இருந்து மக்களைத் திருப்ப எழுதப்பட்ட நூல் என்றுதான் நான் கருதுகிறேன். மனுதர்மம்-வரு ணாச்சிரம தர்மத்தை வற்புறுத்தி மக்களில் நான்கு ஜாதிகள்-பிராமணன், சத்திரியன், வைசியன், சூத்திரன் உண்டு என்று உபதேசிக்கிறது. திருக்குறள்-மக்கள் அனைவரும் ஒரே இனந்தான் பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் என்கிறது.திருவள்ளுவர்
காலம் பொது உடை மைக்காலமோ, சமதர்மக் காலமோ அல்ல. ஆனால், வள்ளுவர் சிறந்த பொது உடைமைக்காரராகவே விளங் குகிறார். அதனால்தான் நம் போற்று தலுக்கு ஆளாகிறார்.

நம் பண்டைத் திராவிட மக்களிடையே இரண்டு பெரியார்களைக் குறிப்பிட வேண்டுமானால் ஆண்களில் திருவள்ளுவரையும் பெண்களில் அவ்வையா ரையும் நாம் சிறந்த அறிவாளியாகக் குறிப்பிட முடியும்.
நமக்கு வேண்டிய முழு அறிவையும் கொடுக்கக் கூடியதாக ஒரு நூல் வேண்டு மானால் அது திருக்குறள்தான் என்பதை நீங்கள் தெளிவாக உணருங்கள். உணர்வது மட்டுமல்ல, நன்றாக மனத்தில் பதிய வையுங்கள் !
என்னைப் பொறுத்தவரையில் திருக்குறளைச் சிறிதாவது ஆராய்ச்சி செய்தவன் என்று என்னால் கூறிக்கொள்ள முடியாவிட்டாலும், அதன் பெருமையை நான் ஓர் அளவுக்காவது உணர்ந்திருக்கிறேனென்பதையும்
அதன்மீது எனக்கு அளவற்ற பற்றுண்டு என்பதையும் நான் தெரிவித்துக் கொள்ள ஆசைப்படுகிறேன்.

திருக்குறளின் பெருமையைச் சுமார் 45 ஆண்டுகளுக்கு முன்பே எனக்கு எடுத்துக் காட்டியவர் காலஞ் சென்ற தோழர் பா.வே. மாணிக்க நாயக்கர் ஆவார். அவரும் நானும் அடிக்கடி வேடிக்கையாகவும்
விதண்டாவாதமாகவும் பேசிக் கொண்டிருப்பது வழக்கம். அந்தச் சமயங்களிலெல்லாம் அவர் திருக்குறள் கருத்துக்களைத்தான் மேற்கோளாக எடுத்துக் கூறி என்னை மடக்குவார். அவருடைய விளக்க உரைகளால் திருக்குறளில் அடங்கியிருக்கும் பல அற்புத அதிசயக் கருத்துக்களை என்னால் அன்று அறிய முடிந்தது. திருவள்ளுவர் நூல் ஒன்றே போதும் இந் நாட்டு மக்களுக்கெல்லாம் அறிவை உண்டாக்க.

பெரியார் 1949 ஜனவரி 15, 16 ஆகிய இரண்டு நாட்கள் அறிஞர் பெரு மக்களையெல்லாம் அழைத்து பெரிய தொரு திருக்குறள் மாநாட்டை நடத் தினார். அந்த மாநாட்டிற்கு விடுதலை மூலம் பெரியார் வேண்டுகோள் விடுத்தார்! (http://periyarparvai.blogspot.ca/2011/01/blog-post_16.html)

குறளைப் பொறுத்தவரை என்னு டைய கருத்து ஆரிய கலை, பண்பு, ஒழுக்கம், நெறி முதலியவை யாவும், பெரிதும் தமிழர்களுடைய கலை, பண்பு, நெறி, ஒழுக்கம் முதலியவைகளுக்கு தலைகீழ் மாறுபட்டதென்பதும், அம் மாறுபாடுகளைக் காட்டவே சிறப்பாக குறள் உண்டாக்கப்பட்டது என்பதும் உறுதியான கருத்தாகும். குறளிலும் சிற்சில இடங்களில் ஆரியப் பண்பு கலப்பு இருக்கின்றது என்று இன்று பல பெரியார்கள் கருதுகிறார்கள். அதற் கேற்றப்படி சில எடுத்துக்காட்டுகளையும் காட்டுகிறார்கள். ஏதோ சில இருக்கலாம் என்றே வைத்துக் கொள்ளலாம். அப்படிப்பட்ட வைகளை நாம் இக் காலத்துக்கும், குறளாசிரியரது பெரும்பாலான கருத்துக்கும்,
ஒப்பிட்டுப் பார்த்து நல்ல கவலையுடன் சிந்தித்தோமே யானால் ஏதாவது நம் கருத்துக்கு ஏற்ற தெளி பொருள் விளங்கும் என்றே கருதுகிறேன். விளங்காவிட்டாலும் அவை குறளின் தத்துவத்துக்கு முரண்பாடானது என்றாவது தோன்றலாம். அதுவும் இல்லாவிட்டால் நம் பகுத்தறிவுப்படி பார்த்து, கொள்வதைக் கொண்டு, விலக்குவதை விலக்கலாம்.

செந்தமிழ்க் காவலர் சி.இலக்குவனார் தெரியுமல்லவா? திருக்குறளை தேசிய நூலாக ஆக்க வேண்டுமெனக் கூறியவர். அவர் என்ன சொல்லியிருகிறார் எனவும் பாருங்கள்:

இதனை இதனால் இவன்முடிக்கும் என்றாய்ந்து அதனை அவன்கண் விடல் என்ற குறள் மொழிப்படி திருக்குறளை அனைத்துலகுக்கும் எடுத்தோதி அதற்குச் சிறப்பை உண்டாக்கித் தர இப் பெரியார் ஒருவராலேயே முடியும்  என்பதை உணர்ந்தே இயற்கை யானது திருக்குறளை பெரியார் அவர்களிடம் ஒப்படைத்தி ருக்கின்றதென்றும், இயற்கை கூட வள்ளுவர் கட்டளைப்படியே நடக்கிறதென்பது வள்ளுவர்க்குப் பெருமை தருவதாகும் என்றும் எடுத்துக் கூறினார் பேராசிரியர் இலக்குவனார்.

திருக்குறள் வீ.முனுசாமி: பெரியாரின் நுண்ணிய வாழ்க்கையினைத் துருவிக் காணுவோருக்கு வள்ளுவர் கூறும் வழியினிற் செல்வோர் இவர் ஒருவரே என்பது வெள்ளிடை மலையென வெளிப்படும்.

பெரியார், எல்லா நேரங்களிலும்,

ஒரு கருத்தை சொல்லி விட்டு, கடைசியில், இந்த ராமசாமி சொல்கிறான் என்பதற்காக எதனையும் ஏற்றுக் கொள்ள வேண்டாம், உங்கள் அறிவைப் பயன்படுத்தி அதில் உண்மைகள் இருந்தால் மட்டும் அதனை ஏற்றுக் கொள்ளுங்கள் என்று சொல்லுவார். வள்ளுவரும் அதையேத்தான் கூறுகிறார்

“எப்பொருள் யார்யார்வாய்க் கேட்பினு மப்பொருண்
மெய்ப்பொருள் காண் பதறிவு”

தமிழில் பெரும் அறிஞர் என்று எல்லோராலும் போற்றப்பட்ட மறைமலையடிகளே தமிழில் நம் வளர்ச்சிக்கான புத்தகங்கள் இல்லை இலக்கியங்கள் இல்லை என்று கூறியுள்ளார். (விடுதலை: 21.4.1965)
தனித் தமிழ் இயக்கம் நடத்திய அவரை தவறு எனச் சொல்ல முடியுமா?

வ.உ.சி அவர்கள் திருக்குறள் பற்றி சொல்வதையும் பாருங்கள்.

vocvalluvar

இதெல்லாம் தெரியாமல் பெரியார் மட்டுமே மொழியைக் குறை கூறி விட்டார், தமிழ் இலக்கியங்களைக் குறை கூறினார் எனத் தொடர்ந்து பரப்புவதின் காரணம் என்னவாக இருக்க முடியும்? எல்லாவற்றுக்கும் மேல் பார்ப்பனரிடம் சிக்கிக் கிடந்த திருக்குறளை ஊர் ஊராய் சென்று திருக்குறளை மீட்டெடுத்து மக்களிடம் சேர்த்தவர் பெரியார்தான் !

தொல்காப்பியரை துரோகி என்ற பெரியார்:

கீழ்க்கண்ட வரியைக் காட்டி தொல்காப்பியரை ஆரியக் கூலி என எப்பிடிச் சொல்லலாம் என வரிந்து கட்டிக் கொண்டு வந்தார்கள்.

tholperiyar

அவர்களில் யாரேனும் தொல்காப்பியத்தைப் படித்து இருப்பார்களா என்றால், படித்து இருக்க மாட்டார்கள். இருந்தாலும் தொல்காப்பியர் பெயர்க்குக் களங்கம் என்பார்கள்.

தொல்காப்பியம் – பொருளதிகாரத்திற்கு நச்சிநார்க்கினியர்  எழுதிய உரையைப் பார்ப்போம்.

கற்பியல் – 142 :

“மேலோர் மூவர்க்கும் புணர்த்த கரணம்
கீழோர்க்கு ஆகிய காலமும் உண்டே”

இதில் வரும் மேலோர் என்பதற்கு நச்சர் கூறும் விளக்கம்.nacchinaar

மேலோர், கீழோர் என்றதும் வர்ணக் கருத்துக்களைக் கொண்டு வந்து வைத்தார். இதாவது பரவாயில்லை, தலைவன், தலைவி திருமணம் முடிந்ததும் தலைவியை முதல் மூன்று இரவு சூரியன், நிலா, தேவர்கள் சேர்வார்களாம், அதன் பின் நான்காம் இரவே தலைவனுடன் சேர வேண்டும் தலைவி.

“கரணத்தின் அமைந்து முடிந்த காலை
நெஞ்சுதளை அவிழ்ந்த புணர்ச்சிக்கண்ணும்
எஞ்சா மகிழ்ச்சி இறந்துவரு பருவத்தும்” எனத் தொடங்கும் சூத்திரத்தின் உரை.

nacchinaar2

இதைக் கொண்டுதான் தொல்காப்பியம் ஆரியக் கருத்துக்களைப் புகுத்துகிறது என்றார்.

எதையும் படிக்காமல், புரிந்து கொல்லாமல் பெரியார் குறை கூறவில்லை. அவரின் பேச்சு/எழுத்துக்களில் தொல்காப்பியம், நன்னூல், பெரிய புராணம், கம்ப இராமாயணம், எனப் பலவற்றையும் மேற்கோள் காட்டுவார். படித்து, புரிந்து அதிலுள்ள நல்ல கருத்துக்களை மக்களிடம் சேர்க்க வேண்டும் என்றும், வேண்டா கருத்துக்களைத் தூக்கி எறிய வேண்டும் என்பதில் தெளிவாக இருந்தவர் பெரியார்.

பாவாணர் தன்னுடைய “தமிழ் வரலாறு” பாகம் 2 பக்கம் 106-ல் தொல்காப்பியம் பற்றிக் கூறுவது.

paavaanartk

இதைத்தானே பெரியாரும் கூறுகிறார் !

ஆக, மொழி பற்றிய பெரியாரின் பார்வை மிகத் தெளிவாய் இருக்கிறது. தாய் மொழி என்பதற்காக மட்டுமே போலியாய் மேன்மையானது, உயர்ந்தது எனக் கூறாமல் அதில் உள்ள கருத்துக்களை மட்டுமே பார்த்தார். கண்டிக்க வேண்டியவற்றை கண்டித்தார். மொழியை விட தமிழறிஞர்களைத்தான் பெரியார் அதிகம் சாடுகிறார். ஆனால் தமிழறிஞர்கள் சாமார்த்தியமாக தங்களை விடுவித்துக் கொள்ள விரும்பி தமிழை பெரியார் சாடுகிறார் என்று கூறி திசை திருப்பி விட்டனர். !

சம காலத்து அறிஞர்களான மறைமலையடிகள், இலக்குவனார், திரு.வி.க போன்றோர் பெரியாருடனே இருந்தவர்கள், அவர்களும் பெரியாரின் தமிழ் பற்றிய கருத்துக்களை ஏற்றுக் கொண்டவர்களே. பாவலரேறு, பாவாணர் போன்றோர் கருத்துக்களும் பெரியாரின் கருத்துக்களும் ஒத்துப் போவதையும் காண முடிகிறது. பெரியாரை குறை கூற வேண்டும் என்பதை மட்டுமே குறிக்கோளாய் கொண்டவர்கள் இனிமேலாவது, பெரியாருக்கு எதிரான இந்தப் பொய்ப் பரப்பல்களை நிறுத்திக் கொள்வார்களா?

உசாத் துணை:

  1. பெரியாரும் தமிழும்
  2. குடியரசு இதழ்கள்
  3. http://viduthalaidaily.blogspot.ca/2010/12/blog-post_30.html
  4. புராணங்களை எரிக்க வேண்டும் – தந்தை பெரியார்.

5 thoughts on “பெரியார் என்னும் மொழிப் போராளி

  1. மேற்க கண்ட புத்தகங்கள் எனக்கு அணுப்பி வைக்கவும் தமிழன்பாபு
    9443485800

    Like

Leave a comment